`காஸாவில் இனப்படுகொலை… நெதன்யாகு ஒரு காட்டுமிராண்டி!’ – சாடும் பிரியங்கா காந்தி

பாலஸ்தீனம் மீது கடந்த 10 மாதங்களாக இஸ்ரேல் போர் நடத்திவருகிறது. குறிப்பாக போரின் தொடக்கத்தில் இஸ்ரேலுக்கு நிதியுதவி, ஆயுத உதவியளித்த அமெரிக்கா, காஸாவில் 39,175 பேர் பலியானபோதும் இஸ்ரேலைக் கண்டிக்காமல், மேம்போக்காகப் போர்நிறுத்தம் வேண்டுமென தற்போது கூறிவருகிறது. இவ்வாறிருக்க, கடந்த இரண்டு நாள்களுக்கு முன் வாஷிங்டனில் நடைபெற்ற அமெரிக்க காங்கிரஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, `அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒன்றிணைந்து நிற்கவேண்டும். இது காட்டுமிராண்டித்தனத்துக்கும் நாகரிகத்துக்கும் இடையிலான மோதல். நாகரிகம் வெற்றிபெற ஒன்றுபடவேண்டும்’ என வலியுறுத்தினார்.

நெதன்யாகு

இந்த நிலையில், நெதன்யாகுதான் காட்டுமிராண்டித்தனமானவர் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சாடியிருக்கிறார். இது குறித்து, பிரியங்கா காந்தி தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “காஸாவில் நடைபெறும் இனப்படுகொலையில், நாளுக்கு நாள் அழிக்கப்படும் பொதுமக்கள், தாய், தந்தை, மருத்துவர்கள், செவிலியர்கள், உதவிப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான அப்பாவி குழந்தைகளுக்காக இனி குரல்கொடுத்தால் மட்டும் போதாது.

வெறுப்பு மற்றும் வன்முறையில் நம்பிக்கையில்லாத இஸ்ரேலிய குடிமக்கள் மற்றும் உலகில் உள்ள ஒவ்வொரு அரசாங்கமும் இஸ்ரேல் அரசின் இனப்படுகொலை நடவடிக்கைகளைக் கண்டித்து தடுத்து நிறுத்துவதற்கு வலியுறுத்துவது, சரியான சிந்தனையுள்ள ஒவ்வொரு தனிநபரின் தார்மீகப் பொறுப்பு. நாகரிகம் மற்றும் ஒழுக்கத்தை வெளிப்படுத்தும் உலகில் அவர்களின் செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

பிரியங்கா காந்தி

ஆனால் அதற்கு மாறாக, அமெரிக்க காங்கிரஸில் இஸ்ரேல் பிரதமருக்குக் கைதட்டல் கொடுக்கப்பட்ட பிம்பத்துக்கு நாம் உட்படுத்தப்படுகிறோம். அவர், காட்டுமிராண்டித்தனத்துக்கும் நாகரிகத்துக்கும் இடையிலான மோதல் என்று கூறுகிறார். காட்டுமிராண்டியான அவருக்கும், அவரின் காட்டுமிராண்டித்தன அரசுக்கும் பெரும்பாலான மேற்கத்திய நாடுகள் அளித்த அசத்திய ஆதரவளித்த தவிர அவர் கூறிய அனைத்தும் சரியே. உண்மையில் இது மிகவும் அவமானகரமானது” என்று விமர்சித்திருக்கிறார்.