புதிய பாம்பன் பாலத்தில் ராமேஸ்வரத்துக்கு மீண்டும் ரயில்… அக்டோபர் முதல் துவக்கம் – தென்னக ரயில்வே

நாட்டின் நிலப்பரப்பினை ராமேஸ்வரம் தீவுடன் இணைக்கும் வகையில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது பாம்பன் ரயில் பாலம். மண்டபத்திற்கும் ராமேஸ்வரத்திற்கும் இடையே அமைந்துள்ள பாம்பன் கடலில் சுமார் 2 கி.மி. நீளத்திற்கு 1914-ம் ஆண்டு ரயில் பாலம் அமைக்கப்பட்டது. இந்த ரயில் பாலத்தின் இடையே தெற்கே இருந்து வடக்காக கப்பல்கள் கடந்து செல்லும் வகையில் நவீன தூக்குப்பாலமும் அமைக்கப்பட்டிருந்தது. `ஹெர்சர் பாலம்’ என அமைக்கப்பட்ட இந்த தூக்கு பாலம் கப்பல்கள் செல்லும் போது இரண்டாக திறந்து வழிவிடும் வகையில் உருவாக்கப்பட்டது.

புதிய, பழைய ரயில் பாலங்கள்

இதுவரை எந்த ஒரு விபத்தும் காணாத பாம்பன் கடல் பாலம் கடந்த 110 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வந்தது. அதிக உப்பு தன்மை கொண்ட பாம்பன் கடலின் மீது அமைக்கப்பட்ட இந்த பாலத்தில் அரிமானம் ஏற்படாமல் இருப்பதற்காக குறிப்பிட்ட கால இடைவெளியில் ரசாயன வர்ண பூச்சு செய்யப்பட்டு வந்தது. ஆனாலும் கடல் உப்பு காற்று காரணமாக கப்பல்களுக்கு வழி விடுவதற்காக திறக்கப்படும் பாலத்தின் கிர்டர் பகுதிகள் துருப்பிடிக்க ஆரம்பித்தது. சில இடங்களில் துரு காரணமாக இரும்பு பட்டைகளின் கனம் குறைய ஆரம்பித்தது. இதனால் பாலத்தின் அபாய நிலை காரணமாக ரயில்கள் 2 கிலோ மீட்டர் பாலப்பகுதியில் 10 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கப்பட்டன. மேலும் பராமரிப்பிற்காக ரயில் போக்குவரத்தை அடிக்கடி நிறுத்த வேண்டிய சூழ்நிலை இருந்தது.

இந்நிலையில் தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்த பாலத்தை தொடர்ந்து பயன்படுத்துவது ஆபத்தை விளைவிக்கும் என கருத்து தெரிவித்திருந்தனர். எனவே நவீன வசதிகளுடன் ரூபாய் 550 கோடி செலவில் புதிய பாலம் கட்ட ரயில்வே வாரியம் முடிவு செய்தது. இதையடுத்து மண்டபம் ராமேஸ்வரம் இடையிலான ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு புதிய பாலம் 2.8 கி. மீ. நீளத்திற்கு நடுவில் பெரிய கப்பல்கள் சென்று வரும் வகையில் கட்டப்பட்டு வருகிறது.

புதிய பாம்பன் பாலம்

ரயில்வேயின் பொதுத்துறை நிறுவனமான ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் மூலம் கட்டப்பட்டு வரும் இந்த புதிய பாலத்தின் நடுவே 72.5 மீட்டர் லிஃப்டிங் கிர்டர் செங்குத்தாக மின் இயந்திரவியல் சக்தி மூலம் திறந்து கப்பல்களுக்கு வழிவிடும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. பழைய பாலம் இருபுறமும் ஐந்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் மனித ஆற்றல் மூலம் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய பாலம் செங்குத்தாக திறக்கப்படும் இந்தியாவின் முதல் பாலமாக அமைய உள்ளது. பெரிய கப்பல்கள் சென்று வரும் வகையில் நடுவில் உள்ள லிப்டிங் கிர்டர் 17 மீட்டர் உயரத்திற்கு மேலே செல்லும். இது அருகிலுள்ள சாலை பாலத்திற்கு இணையான உயரம் ஆகும்.

இந்நிலையில், `ராமேஸ்வரம் மண்டபம் இடையேயான ரயில் சேவை கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் பாம்பன் புதிய ரயில் பால பணிகள் முடிவடைய உள்ளதால் வரும் அக்டோபர் 1-தேதி முதல் ராமேஸ்வரம் மண்டபம் இடையேயான ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக’ தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என் சிங் செய்தி குறிப்பின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

புதிய ரயில் பாலத்தில்வரும் டிசம்பர் மாதம் இறுதிக்குள் மின்சார எஞ்சின் பொருத்தப்பட்ட ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. !

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88