`திராவிட மாடலின் முன்னோடி ராமரா… சனாதனம்தான் திமுக-வின் சமூகநீதியா?’ – சீமான் கேள்வி

தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, கடந்த சில நாள்களுக்கு முன்னர் புதுக்கோட்டையில் கம்பன் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், கருணாநிதி, ஸ்டாலினுக்கு முன்னால் திராவிட மாடல் ஆட்சியை முன்னெடுத்துச் சென்றவர், சமூகநீதியின் காவலர் ராமர் என்றும், வாய்ப்பு கிடைத்தால் அயோத்திக்கு செல்வேன் என்றும் கூறியிருந்தார். அமைச்சரின் இத்தகைய பேச்சை பலரும் விமர்சித்தனர்.

ரகுபதி

இந்த நிலையில், `திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடி ராமன்’ என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திருவாய் மலர்ந்திருப்பது வியப்பளிப்பதாக விமர்சித்திருக்கும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இதில் தி.மு.க மூத்த தலைவர்கள் மௌனமாக இருப்பது ஏன் எனக் கேள்வியெழுப்பியிருக்கிறார்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் சீமான், “இத்தனை காலமும் திராவிட ஆட்சி என்பது பெரியார் ஈ.வே.ராமசாமி வழிவந்தவர்கள் நடத்தும் ஆட்சி என அனைவரும் நம்பிக்கொண்டிருக்க, இல்லை ‘நாங்கள் பகுத்தறிவு பகலவன் ராமசாமி வழிவந்தவர்கள் அல்ல. பகவான் ராமர் சாமியின் வழிவந்தவர்கள்’ என்று தி.மு.க அரசின் மிக முக்கிய அமைச்சக பொறுப்பை வகிக்கும் அமைச்சரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

தி.மு.க-வின் சட்ட அமைச்சரே கூறியிருப்பதால் அறியாமல், தெரியாமல் தவறுதலாக கூறிவிட்டார் என்று யாரும் மறுப்பதற்கில்லை. இதுவரை தி.மு.க தலைமையும் எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பதிலிருந்து அக்கருத்தை தி.மு.க முழுமையாக ஏற்றுகொள்கிறது என்பதும் உறுதியாகிறது. ராமரைக் கடவுளாக வணங்கும் மக்கள், ராமரின் ஆட்சி என்பது வறுமை, ஏழ்மை, பசி பஞ்சமற்ற, கொலை, கொள்ளை, வளச்சுரண்டல், பாலியல் வன்கொடுமை அற்ற தூய நல்லாட்சியை, சொர்க்கத்தில் வாழ்வதைப்போன்ற பொற்கால ஆட்சியைத் தந்தார் என்கின்றனர்.

சீமான்

அப்படி ஒரு ஆட்சிதான் தற்போது தமிழ்நாட்டில் நடைபெறுகிறதா? பட்டப்பகலில் படுகொலை, மலிவு விலையில் அரசே விற்கும் மது, கொத்துக்கொத்தாக கள்ளச்சாராய மரணங்கள், கட்டுக்கடங்காத கஞ்சா விற்பனை, குடிநீர் தொட்டியில் மலம், பொங்கல், புளியில் பல்லி, சத்துணவில் அழுகிய முட்டை, பள்ளிக்கூடம் முதல் பல்கலைக்கழகம் வரை சாதிய மோதல்கள், இதெல்லாம்தான் ராமரின் ஆட்சியா? அல்லது சம்பூகனைக் கொன்றது போல் தி.மு.க ஆட்சியிலும் ஈவு இரக்கமற்ற படுகொலைகள் நடைபெறுதால் இது ராமரின் ஆட்சியா? `ராமர் எங்களின் முன்னோடி’ என்ற பா.ஜ.க-வின் வர்ணாசிரம குரலை அப்படியே தி.மு.க-வும் ஒலிக்கத்தொடங்கியுள்ளதன் மூலம் பா.ஜ.க-வின் உண்மையான பி டீம் என்பதை ஏற்கிறதா தி.மு.க?

தி.மு.க ஆட்சி ராமரின் ஆட்சி என்பதை பா.ஜ.க முதலில் ஏற்கிறதா? இத்தனை ஆண்டுகாலம் தி.மு.க கூறிவந்த சமூகநீதி என்பது சனாதனம்தானா? அமைச்சரின் கருத்தில் உடன்பாடு இல்லை என்றால் தி.மு.க-வில் யாரும் இதுவரை அதனை மறுக்காதது ஏன்? அமைச்சர் பேசியது திராவிட மாடல் கொள்கைக்கு முற்றிலும் விரோதமானது என்றால் அவர் மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? பா.ஜ.க-வை தி.மு.க கடுமையாக எதிர்க்கும் முறை இதுதானா? தி.மு.க அரசின் சட்ட அமைச்சர் கூறிய கருத்தைக் கண்டித்து திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கலியன் பூங்குன்றன் கடுமையான அறிக்கை வெளியிடும் நிலையில், தி.மு.க மூத்த தலைவர்கள் அனைவரும் வாய்மூடி மௌனித்திருப்பது ஏன்?

ஸ்டாலின்

பகுத்தறிவு, முற்போக்கு, சமத்துவம், சமூகநீதி என்று நீட்டி முழக்கும் தி.மு.க-வின் ஊடக ஊதுகுழல்கள், வாடகை வாய்கள் அமைச்சர் ரகுபதியின் `ராமர் எங்கள் முன்னோடி’ என்ற கருத்துக்கு எவ்வித எதிர்வினையும் ஆற்றாது ஆழ்ந்த அமைதி காப்பது ஏன்? காதுகள் கேட்கும் திறனை இழந்துவிட்டதா? அல்லது நாக்கு அசைய முடியாமல் செயலிழந்து விட்டதா? இதற்குப் பெயர்தான் தி.மு.க-வின் திராவிட மாடலா? என்ற கேள்விகளுக்கு எவரிடத்தில் பதிலுண்டு? ஆகவே, தமிழ்நாடு சட்ட அமைச்சரின் `திராவிட ராமர் ஆட்சி’ பற்றிய கூற்றினால் ஏற்பட்டுள்ள குழப்பத்தைப் போக்க தமிழ்நாட்டில் தற்போது நடைபெறும் தி.மு.க ஆட்சி என்பது திராவிட மாடலா? அல்லது ராமரின் மாடலா? என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக நாட்டுமக்களுக்கு விளக்கித் தெளிவுபடுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.