வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணி புரிந்து வருகிறார்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது செல்போனில் முக நூல் பார்த்து கொண்டு இருந்துள்ளார். அதில் ஆன்லைன் மூலம் பங்கு சந்தையில் பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்ற விளம்பரம் வந்துள்ளது.
இதைப் பார்த்த அவர் பங்குச் சந்தையில் சேர்வதற்காக விளம்பரத்தின் கீழேயே கொடுக்கபட்ட லிங்கை க்ளிக் செய்துள்ளார்.
அந்த லிங்க் வழியாக இதற்காகவே உருவாக்கபட்ட வாட்ஸ்-அப்- குரூப்பிற்கு சென்றது அதில் அவர் ஆட் ஆனார். இதையடுத்து அந்த குரூப்பில் இருந்த நபர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்த எங்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைத்தாக பதிவிட்டு வந்தனர்.
இதை உண்மையென நம்பி ஆசைப்பட்ட தலைமை ஆசிரியர், தானும் பங்கு சந்தையில் முதலீடு செய்ய முடிவெடுத்தார். அதன்படி குரூப்பில் இருந்த அதற்கான லிங்கை க்ளிக் செய்து அதற்குரிய செயலியை டவுன்லோடு செய்தார்.
அந்த செயலி வழியாகவே முதலில் ரூ.2 லட்சம் முதலீடு செய்துள்ளார். இதைதொடர்ந்து கூடுதலாக ரூ.2 லட்சம் கிடைத்திருப்பதாகவும் தங்கல் கணக்க்கில் 4 லட்சம் இருப்பதாகவும் செயலியில் தகவல் வந்துள்ளது.
ஆஹா பணம் போட்ட கொஞ்ச நேரத்திலேயே ரூ.2 லட்சம் லாபம் கிடைத்திருக்கிறது என நம்பி மகிழ்ந்தவர், மீண்டும் ரூ.5 லட்சம் அனுப்பியிருக்கிறார். அப்போது ரூ.10 லட்சம் கிடைத்திருப்பதாக மெச்சேஜ் வந்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் வரை தொடர்ந்து ரூ.13.71 லட்சம் அனுப்பியுள்ளார். தனக்கு வந்த பணத்தை தனது வங்கி எண்ணிற்கு மாற்றுவதற்காக குரூப்பை வழி நடத்திய சம்மந்தபட்டவர்களிடம் பேசியுள்ளார்.
எதிர் முனையில் பேசிய மர்மநபர்கள் அரசிற்கு வருமான வரி செலுத்த வேண்டும். அப்போதுதான் வங்கிக்கணக்கிற்கு பணத்தை மாற்றலாம் என கூறியுள்ளனர்.
அத்துடன் பணம் செலுத்தியவர் சுதாரித்து கொண்டார் என்பதை அறிந்த மர்ம கும்பல் வாட்ஸ் அப் குரூப்பில் இருந்து வெளியேறி விட்டனர். இதில் அதிர்ச்சியடைந்து பட படப்புடன் மீண்டும் அந்த செல் நம்பர்களுக்கு தொடர்பு கொள்ள சுவிட்ச் ஆப் என வந்துள்ளது.
அதன் பின்னர் தான் ஆன்லைன் மூலம் நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்து அழுது புலம்பியிருக்கிறார்.
இது குறித்து சிலரிடம் விசாரிக்க பங்கு சந்தை செயலி போலியானது, அதிலிருந்த நபர்கள் ஆசை வலை விரித்து மோசடி செய்கின்ற நபர்கள் என்பதும் தெரிந்தது.
ஒரு ஆப், ஒரு வாட்ஸ் அப் குரூப் மூலம் ரூ.13.71 லட்சத்தை ஏமாற்றிய செய்தி கேட்டு பலரும் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தலைமை ஆசிரியர் தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
இன்ஸ்பெக்டர் ராமதாஸ் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எவ்வளவோ விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் ஆன்லைன் மோசடியை தடுக்க முடியவில்லை. அதிக லாபம் கிடைக்கும் என்கிற ஆசையில் பணத்தை இழப்பதும் தொடர்கிறது.
தலைமை ஆசிரியராக இருப்பவரே இந்த மோசடி வலையில் வீழ்ந்ததுதான் வேதனை, பணத்தை மீட்டு தரும் வகையில் விசாரணை தொடர்கிறது என போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.