Kamala Harris: மில்லியன் டாலர் கணக்கில் குவிந்துவரும் நன்கொடைகள் – கமலா ஹாரிஸ் ஆதரவு பெருகுவது ஏன்?!

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிலிருந்து விலகுவதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்ததால், அவருக்கு பதிலாக ஜனநாயகக் கட்சியின் சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், துணை அதிபருமான கமலா ஹாரிஸ் களமிறங்குவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

டொனால்டு ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கிறது. அதில், குடியரசுக்கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட கமலா ஹாரிஸுக்கு கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

குறிப்பாக, போட்டியிலிருந்து விலகுவதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்த பிறகு, ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆளுநர்கள், எம்.பி-க்கள் உள்பட கட்சியில் செல்வாக்கு மிகுந்தவர்கள் கமலா ஹாரிஸுக்கு தங்களுடைய ஆதரவைத் தெரிவித்துவருகிறார்கள். அதாவது, ஜனநாயகக் கட்சி வேட்பாளரைத் தேர்வுசெய்வதற்கான போட்டியில் கமலா ஹாரிஸ் வெற்றிபெற 1979 பிரநிதிகளின் ஆதரவு தேவை என்ற நிலையில், அதைவிட அதிகமான ஆதரவு கமலா ஹாரிஸுக்கு இருப்பதாக தெரிகிறது.

ஜோ பைடன்

ஆகவே, ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், அதிபர் தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பில் டொனால்டு ட்ரம்ப்புக்கு கடும் போட்டி அளிப்பவராக கமலா ஹாரிஸ் இருப்பார் என்கிறார்கள்.

‘இப்ஸோ’ என்ற ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் டிரம்ப்பைவிட கமலா ஹாரிஸுக்கு கூடுதலாக ஆதரவு கிடைத்திருக்கிறது. அதாவது, கமலா ஹாரிஸுக்கு 44 சதவிகிதம் பேரும், ட்ரம்ப்புக்கு 42 சதவிகிதம் பேரும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். இதுவே, இந்த மாதத்தின் தொடக்கத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் டிரம்ப்புக்கு கூடுதல் ஆதரவு கிடைத்திருக்கிறது. ட்ரம்ப்புக்கு 44 சதவிகிதம் பேரும், கமலா ஹாரிஸுக்கு 42 சதவிகிதம் பேரும் ஆதரவு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கமலா ஹாரிஸ்

அதே நேரம், ஜூலை இரண்டாவது வாரத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் ட்ரம்ப், கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் சம அளவில் ஆதரவைப் பெற்றிருந்தனர். ஆனால், கமலா ஹாரிஸ் தேர்தலில் போட்டியிடுவதற்கு உறுதியாகிவிட்ட சூழலில், அவருக்கான ஆதரவு அதிகரித்திருக்கிறது.

கமலா ஹாரிஸ் போட்டியிட்டால் தனது வெற்றி எளிதாகிவிடும் என்று டொனால்டு ட்ரம்ப் சொல்லியிருந்தார். ஆனால், நிலைமை தற்போது சற்று மாறியிருக்கிறது என்கிறார்கள். கமலா ஹாரிஸ் போட்டியிடுவது உறுதியாகிவிட்ட நிலையில், அவரது பிரசாரத்துக்குத் தேவையான நிதி கோடிக்கணக்கில் வந்து குவிகிறது. ஜூலை 24-ம் தேதி நிலவரப்படி, 1.4 மில்லியன் நன்கொடையாளர்களிடைமிருந்து 126 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி வந்திருக்கிறது. இது கொஞ்சம் கூட குறையாமல் தொடர்ந்து நன்கொடைகள் குவிந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

கமலா ஹாரிஸ்
கமலா ஹாரிஸ்
கமலா ஹாரிஸ்
கமலா ஹாரிஸ்
கமலா ஹாரிஸ்
கமலா ஹாரிஸ்

இதனிடையே கமலா ஹாரிஸுக்கு ஆதரவான தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குவதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்றுவருவதாக செய்திகள் வருகின்றன. இதற்கு முன்பு, ‘பைடன் ஹாரிஸ்’ பிரசாரக்குழு என்று இருந்த பெயர் தற்போது ‘ஹாரிஸ் ஃபார் பிரசிடென்ட்’ என்று மாற்றப்பட்டிருக்கிறது.

கமலா ஹாரிஸால் டொனால்டு ட்ரம்ப்புக்கு கடுமையான போட்டியைக் கொடுக்க முடியும் என்றும், அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றிபெற வாய்ப்பு இருக்கிறது என்றும் ஜனநாயகக் கட்சியின் தலைவர்கள் கருதுகிறார்கள். மேலும் அமெரிக்க துணை அதிபராக பெரிய சிக்கலில் எதுவும் சிக்காததும் அவருக்கு ப்ளஸ்ஸாக பார்க்கப்படுகிறது.

கமலா ஹாரிஸ்

இந்தப் பின்னணியிலும், ட்ரம்புக்கு எதிரான மன நிலையில் இருப்பவர்களின் ஆதரவுடனும் கமலா ஹாரிஸுக்கு ஆதரவான தேர்தல் பிரசார நிதி வந்து குவிவகிறது என்றும், கருத்துக்கணிப்பில் கூடுதலான ஆதரவை அவர் பெற்றிருக்கிறார் என்றும் ஜனநாயகக் கட்சியினர் கூறுகிறார்கள். கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் என்ற அதிகாரப்பூர்வு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, அமெரிக்க அதிபர் தேர்தல் களம் பரபரப்படைந்திருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88