மத்திய பட்ஜெட்: உரையின் இடையே குறுக்கிட்ட ஓம் பிர்லா… கேள்வியால் வாயடைக்கவைத்த அபிஷேக் பானர்ஜி!

நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், என்.டி.ஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோர் ஆளும் பீகார், ஆந்திரா மாநிலங்களுக்கு ரூ.40,000 கோடிக்கு மேல் சிறப்பு நிதி நிதியும், பல திட்டங்களும் அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் விவாதப்பொருளாக இருக்கிறது. எதிர்க்கட்சிகளும் கடந்த இரண்டு நாள்களாக, `இது மத்தியில் நாற்காலியைத் தக்கவைப்பதற்கான பட்ஜெட்’ என்று விமர்சித்துவருகின்றன.

மத்திய பட்ஜெட் | நிர்மலா சீதாராமன்

ஆனாலும், `அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கிய பட்ஜெட்’ என்று பா.ஜ.க-வினர் கூறிவருகின்றனர். இவ்வாறிருக்க, நாடாளுமன்ற மக்களவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் பானர்ஜிக்கும், சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கும் இடையே காரசாரமான விவாதம் அரங்கேறியிருக்கிறது. இதில், அபிஷேக் பானர்ஜி தன்னுடைய உரையின்போது 2016-ல் பா.ஜ.க அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையைச் சுட்டிக்காட்டி விமர்சித்தார்.

அப்போது, சபாநாயகர் ஓம் பிர்லா, “அது 2016-ல் நடந்தது. தற்போதைய பட்ஜெட்டைப் பற்றி பேசுங்கள்” என்று குறுக்கிட்டார். அதற்குத் தன்னிடமிருந்து தகுந்த எதிர்வினையை வெளிப்படுத்திய அபிஷேக் பானர்ஜி, “சில நாள்களுக்கு முன்னர் இதே அவையில் எமெர்ஜென்சி பற்றி பேசப்படவில்லையா… அதுகூட 50 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. அப்படியிருக்கும்போது பணமதிப்பிழப்பு பற்றி நான் ஏன் பேசக்கூடாது” என்று கேள்வி கேட்டார்.

சபாநாயகர் ஓம் பிர்லா

அதைத்தொடர்ந்து, பட்ஜெட்டை விமர்சிக்கத் தொடங்கிய அபிஷேக் பானர்ஜி, “இந்த பட்ஜெட்டில் தெளிவான கண்ணோட்டம் எதுவும் இல்லை. நாட்டின் 140 கோடி மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்குப் பதிலாக, பா.ஜ.க கூட்டாளிகளைத் திருப்திப்படுத்த இது தயாரிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, ஆட்சி கவிழ்வதற்கு முன், லஞ்சம் கொடுக்கும் வங்கியில் ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் கட்சிகள் பயன்பெற இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டிருக்கிறது.

அபிஷேக் பானர்ஜி

நீங்கள் (பா.ஜ.க) தற்போது காலத்தைக் கடன் வாங்கி இங்கிருக்கிறீர்கள். உங்கள் சீட் பெல்ட்டுகளை இறுக்கிப் போட்டுக்கொள்ளுங்கள். தற்போதைய சூழல் மிக மோசமானதாக மாறும்” என்றார்.

இதற்கிடையில், திரிணாமுல் காங்கிரஸின் குற்றச்சாட்டுகளுக்கு, “மோடியால் கொண்டுவரப்பட்ட பல திட்டங்கள் மேற்கு வங்கத்தில் செயல்படுத்தப்படவில்லை” என்று நிர்மலா சீதாராமன் கூற, “மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தோற்றது முதல் மாநிலத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிடுங்கள்” என்று அபிஷேக் பானர்ஜி சவால் விட்டார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88