சீனாவில் மக்கள் தொகை மற்றும் வயதானவா்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நாட்டின் நிதி நெருக்கடியைக் கருத்தில்கொண்டு, பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பை உயர்த்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கு முன்பு, சீனாவில் ஆண்களின் ஓய்வு பெறும் வயது 60-ஆக இருந்தது. அதே போல, அலுவலகப் பணிகளில் ஈடுபடும் பெண்களுக்கு 55, உடலுழைப்பை அதிகமாகச் செலுத்தும் பணிகளில் ஈடுபடும் பெண்களுக்கு 50 என ஓய்வு பெறும் வயது நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பெரிய அரசியல் மாநாட்டை கடந்த வாரம் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது. அதில், சட்டபூர்வ ஓய்வு பெறும் வயதை அடுத்த ஐந்து ஆண்டுகளில் படிப்படியாக உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கை முதியோர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் கிராமப்புற பகுதிகளில் உள்ள முதியோர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட உதவும் என்று தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், ஓய்வுபெறும் வயது எத்தனை அகவைகள் உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்படவில்லை. 2023-ம் ஆண்டின் இறுதியில் வெளியிடப்பட்ட ஓய்வூதிய மேம்பாட்டு அறிக்கையின்படி, ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பு 65 ஆக உயரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. ’இந்த முடிவால் கடினமான உடல் உழைப்பு உள்ளிட்ட வேலைகளில் இருந்து முன்கூட்டியே ஓய்வு பெற விரும்புபவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
மேலும், வசதியான, அதிக லாபம் ஈட்டக்கூடிய வேலைகளில் இருப்பவர்கள் ஓய்வு பெறுவதைத் தேர்வுசெய்ய மாட்டார்கள். எனவே, இளைய தலைமுறையினருக்கு வேலை கிடைப்பது கேள்விக்குறியாகிவிடும். தாமதமான ஓய்வு என்பது அவர்களின் ஓய்வூதியங்களையும் தாமதமாக்கும்’ எனப் பலரும் இணையத்தில் தங்கள் ஆதங்கங்களைத் தெரிவித்து வருகின்றனர்.