மருத்துவ இளநிலை படிப்புகளுக்காக கடந்த மே மாதம் நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியான நாள்முதல், வினாத்தாள் கசிவு உட்பட பல்வேறு முறைகேடுகள் இதில் நடந்திருப்பதாக மாணவர்கள் உட்பட பல தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த விவாகரத்தில் பீகாரில் எய்ம்ஸ் மருத்துவர்கள் உட்பட சிலரை சிபிஐ கைதுசெய்ய, மறுபக்கம் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களும் குவிந்தன.
அவற்றில், மறுதேர்வு நடத்தவேண்டும் என்ற கோரிக்கை பிரதானமாக வைக்கப்பட்டது. இதை விசாரித்துவந்த உச்ச நீதிமன்றம், `வினாத்தாள் கசிவு நடந்திருக்கிறது. ஆனால், கசிவின் தன்மை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைப் பொறுத்து மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியும்’ என்று கூறியது. அதேசமயம், தேர்வு மையங்கள் வாரியாக மதிப்பெண்கள் விவரங்களை அளிக்குமாறு தேசிய தேர்வு முகமைக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், நீட் மறுதேர்வு கிடையாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
இன்று நடைபெற்ற விசாரணையில் இதனைத் தெரிவித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், `தேர்வு முறை தோல்வியடைந்தது அல்லது தேர்வின் புனிதம் முழுவதும் மீறப்பட்டது என்று முடிவுசெய்வதற்கான ஆதாரம் எதுவும் தற்போது இல்லை. 23.33 லட்சம் பேருக்கு மறுதேர்வு நடத்த உத்தரவிடுவது, அவர்களில் நிறையே பேர் தங்கள் சொந்த ஊர்களிலிருந்து நூற்றுக்கணக்கான கி.மீ அப்பால் தேர்வு மையங்களுக்குச் செல்வது என பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்.
அதுமட்டுமல்லாமல், அவர்கள்மீது கடுமையான பாதிப்புகளையம் அது ஏற்படுத்தும் என்பதை நீதிமன்றம் கவனத்தில் கொண்டுள்ளது. தேர்வன்று மனப்பாடம் செய்யும் வகையில் வினாத்தாள் கசிந்திருந்ததால், அது பரவலாக இருந்திருக்கிறது. எனவே. மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது. அதேசமயம், வினாத்தாள் கசிந்து தேர்வின் புனிதத்தன்மை சமரசம் செய்யப்பட்டது என்பது மட்டும் தெளிவாகிறது” என்று கூறினார்.