“கல்விக்கு குருகுலம்; வரியோ, போலீஸோ கிடையாது; மஹாகைலாசாவில் நான்..!” – நித்தியானந்தா புது தகவல்

இந்தியா முழுவதும் பிரபலமான சாமியாராக வலம் வந்தவர் நித்தியானந்தா. தமிழ்நாட்டின், திருவண்ணாமலையில் ராஜசேகரன் என்ற பெயரில் பிறந்து வளர்ந்தவர், பெங்களூர் அடுத்த பிடதியில் ஆசிரமம் ஏற்படுத்தியதன் மூலம் லட்சக்கணக்கான பக்தர்களை பெற்றிருந்தார். இந்தசூழலில்தான் பிரபல நடிகையுடன் இருக்கும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அன்று முதல் படிப்படியாக கிளம்பிய களேபரங்களால் நித்தியானந்தா சர்ச்சை சாமியாராகினார்.

குறிப்பாக தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சர்ச்சை சாமியார் நித்தியானந்தா மீது பாலியல் தொந்தரவு, ஆள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கடந்த 2019-ம் ஆண்டு, “தங்களது இரு மகள்களை நித்தியானந்தா சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளார்” என தமிழ்நாட்டை சேர்ந்த தம்பதியினர் வழக்கு தொடுத்திருந்தனர். இந்த வழக்கில் அடுத்த ஆண்டில் நித்தியானந்தா கைது செய்யப்பட்டார். பிறகு ஜாமீனில் வெளிவந்தவர் மயமாகிவிட்டார்.

நித்தியானந்தா

இந்த சூழலில்தான் கடந்த 2020-ம் ஆண்டு, “கைலாசா என்கிற நாட்டை தான் உருவாக்கியுள்ளதாக” அறிவித்திருந்தார். பிறகு அதற்கென கொடி, நாணயம், ஆட்சி முறை, சுற்றுலா விசாவை உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்திருந்தார். கூடவே, “ஆஸ்திரேலியாவுக்கு பக்தர்கள் வந்தால் போதுமானது. அங்கிருந்து கைலாசாவுக்கு அழைத்துச் சென்று 15 நாட்கள் ஆன்மிக அனுபவத்தை கொடுப்போம். பிறகு மீண்டும் ஆஸ்திரேலியாவிலேயே விட்டு விடுவோம். இதற்காகும் அனைத்து செலவையும் கைலாசா நிர்வாகமே ஏற்றுக் கொள்ளும்” என்று நித்தியானந்தா காணொளி ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஐ.நா-வின் மனித உரிமை தொடர்பான ஒரு கருத்தரங்கில் நித்தியானந்தாவின் பெண் சீடர்கள் பங்கேற்றிருந்தார்கள். அதையே காரணமாக வைத்து எங்களுக்கு ஐ.நா-வின் அங்கீகாரம் கிடைத்து விட்டதாக கிளப்பி விட்டார்கள். இதற்கிடையில் அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சியின் நெவார்க் நகரம் கைலாசாவுடன் கலச்சார மற்றும் சமூக பரிமாற்றங்களுக்கான ஒப்பந்தம் போட்டதாக தகவல் பரப்பினர். பிறகு நித்தியானந்தா தரப்பு கூறியது அனைத்தும் பொய் என தெரியவந்ததால், ‘கைலாசா என்ற நாடு இருப்பதாகக் கூறி தங்களை ஏமாற்றி ஒப்பந்தம் போடப்பட்டதாக’ நெவார்க் நகர நிர்வாகம் பிறகு அறிவித்திருந்தது. பிறகு ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டங்களில் கைலாசா நாட்டின் பிரதிநிதிகள் என்று கூறி பங்கேற்றவர்களின் உரையை நீக்குவதாக ஐக்கிய நாடுகள் சபையும் அறிவித்தது.

கைலாசா பிரதிநிதி

இந்த சூழலில்தான் கைலாசாவின் இணையதளப் பக்கத்தில் வெளியாகியிருக்கும் தகவல்கள் அடுத்த பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது. இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “கடலோரப் பகுதிகள், மலைப் பகுதிகள், தீவுப் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு புவியியல் அம்சங்களை உள்ளடக்கிய, உலகம் முழுவதும் உள்ள இறையாண்மை கொண்ட மற்றும் தன்னாட்சி பிரதேசங்களில் ‘கைலாசா’ இருக்கிறது. பல நாடுகளுடன் பரஸ்பர உறவுகளை ஏற்படுத்தியிருப்பது சர்வதேச சமூகத்தில் அதன் அங்கீகாரத்தை குறிக்கிறது. கைலாசா தற்போது 149 நாடுகளில் உள்ள 108-க்கும் மேற்பட்ட ஐக்கிய நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் இயங்கி வருகிறது. மேலும் கைலாசத்தில் ஏழு அமைப்புகள் உள்ளன.

ஆண் சந்நியாசிகளுக்கான இருப்பிடம் ராமகிருஷ்ண மடத்தின் அடிப்படையிலும், பெண் சந்நியாசிகளின் இருப்பிடம் சாரதா மடத்தின் அடிப்படையிலும், திருமணமானவர்களுக்கு புதுச்சேரியில் உள்ள ஆரோவில் போன்ற இருப்பிடமும் அமைக்கப்படுகிறது. கல்விக்கான குருகுலம், நித்யானந்தா இந்து பல்கலைகழகம், தொழில் செய்வதற்கான இந்து உலக வர்த்தக மையம் அமைக்கப்படுகிறது. இதன் ஆன்மிக மற்றும் நிர்வாக மையமாக அமையும் மஹாகைலாசாவில் தான் வசிக்கப் போகிறேன்.

நித்தியானந்தா

கைலாசாவில் உணவு, தங்குமிடம், உடை, மருத்துவம் உள்ளிட்ட அனைத்தும் இலவசம். ராணுவமோ, காவல்துறையோ கைலாசத்தில் இல்லை. வரி விதிப்பு முறை இல்லை. இந்து வர்த்தக மையத்தின் மூலம் கிடைக்கும் வருமானமும், உலகம் முழுவதிலிருந்தும் கிடைக்கும் நன்கொடையும் கைலாசாவை நடத்த பயன்படுத்தப்படும். இதன் மூலம் இந்து சனாதன தர்மத்தை உயிருடன் வைத்திருக்க முடியும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஆசிரமத்தின் முன்னாள் நிர்வாகிகள் சிலர், “கைலாசா எங்கு இருக்கிறது என்றே தெரியவில்லை. அதற்கான அங்கீகாரம் பெறுவதாக சொல்லி தொடர்ந்து ஐ.நா-வை நிதி ஏமாற்றிவருகிறார். கைலாசா என்கிற நாடு இருப்பதாக ஏமாற்றி ஒப்பந்தம் செய்து கொண்டதாக நியூ ஜெர்சியின் நெவார்க் நகரம் அறிவித்ததையும், அந்த நாட்டின் பிரதிநிதிகள் என்று கூறி பங்கேற்றவர்களின் உரையை நீக்குவதாக ஐக்கிய நாடுகள் சபையும் அறிவித்தததன் மூலமே அவர்கள் கூறுவது பொய் என தெரிகிறது. இந்தசூழலில்தான் ராமகிருஷ்ண, சாரதா மட வரிசையில் கைலாசா இருப்பதாக சொல்லி அடுத்த பொய்யை பேசி வருகிறார்.” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88