நெல்லை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களை கடந்த 1929-ம் ஆண்டு பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் என்ற தனியார் நிறுவனம் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்தது. வரும் 2028-ம் ஆண்டில் அந்த நிறுவனத்தின் குத்தகை காலம் முடியவுள்ள நிலையில் அதற்கு முன்பாகவே அந்த நிறுவனம், தேயிலை தோட்டத் தொழிலாளர்களை கட்டாய ஓய்வில் அனுப்ப முடிவு செய்தது. இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், மாஞ்சோலையில் இருந்து தேயிலை தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்ற இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளை உத்தரவிட்டது.
மேலும், தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் மறுவாழ்வு நடவடிக்கைகளை செய்ய அரசின் டான்-டீ நிறுவனம் முன் வர வேண்டும் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில், பிபிடிசி நிர்வாகம் மாஞ்சோலை தொழிலாளர்கள் வீடுகளை காலி செய்ய வேண்டாம் என தற்காலிக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த நிலையில் மாஞ்சோலை பகுதி மக்கள் நலச்சங்கத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அதில், “கடந்த 40 நாள்களுக்கு மேல் எந்த வருமானமும் இல்லாமல் மக்கள் மிகுந்த துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். எந்த மருத்துவ வசதியும் இல்லாமல் சங்கடப்பட்டு வருகிறோம். மாஞ்சோலை பகுதி ஒரு தீவு போலக் காட்சியளித்து வருகிறது. மாஞ்சோலையில் கடந்த 5 தலைமுறைகளாக மலைப்பகுதியில் வாழ்ந்ததால் அவர்களுக்கு கீழே சமவெளிப் பகுதியில் சொந்த இடமோ, சொந்த வீடோ கிடையாது. அவர்களுக்கு தோட்டத் தொழில் தவிர எந்த தொழிலும் தெரியாது. எஸ்டேட்டை விட்டு வெளியேற்றிவிட்டால் அவர்கள் அகதிகள் போல ஆகிவிடுவார்கள். இந்தச் சூழலில் தமிழ்நாடு அரசு மட்டுமே அவர்கள் வாழ்வில் நம்பிக்கையைக் கொண்டு வர முடியும்.
கடந்த 1967-ம் ஆண்டு இலங்கை நாட்டிலிருந்து தமிழகத்திற்கு குடிபெயர்ந்து வந்த தமிழர்களுக்காக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் தமிழ்நாடு தேயிலைத் தோட்டக்கழகத்தை (டான் டீ) உருவாக்கி அந்த மக்களின் வாழ்வாதாரத்திற்கு தமிழ்நாடு அரசு உத்திரவாதப்படுத்தியதைப் போல மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்தி மற்றும் குதிரைவெட்டி ஆகிய எஸ்டேட் பகுதிகளில் தற்போது அமைந்துள்ள தனியார் நிறுவன எஸ்டேட்டுகளை தமிழ்நாடு அரசின் டான் டீ நிறுவனம் எடுத்து நடத்த வேண்டும்” எனக் கூறியுள்ளனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளையில் மீண்டும் எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை தமிழக அரசு எடுத்து நடத்த இயலாது. தேயிலை தோட்டத்தை டான் டீ நிர்வாகத்திற்கு வழங்குவது சாத்தியமற்றது” என வாதிட்டார். மேலும், “மாஞ்சோலை பகுதி சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றி வருகிறது. சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாக்க குத்தகைக்கு விடுவதற்கு முன்பிருந்த நிலைக்கு மாஞ்சோலையை கொண்டுவர வேண்டியது அவசியம்.” என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ”தமிழக அரசு மற்றும் டான் டீ நிர்வாகம் ஆலோசித்து இரண்டு நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டது. தாமிரபரணி ஆற்றில் உயிர்நீத்த மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் 25-வது ஆண்டு நினைவஞ்சலி நெல்லை தாமிரபரணி நதியில் நேற்று (23-ம் தேதி) அனுசரிக்கப்பட்டது. அந்த நிகழ்வில் செய்தியாளர்களைச் சந்தித்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, “அரசின் பார்வையில் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் குறித்த கோளாறு இருக்கிறது.
இன்னமும் சரியான புரிதல் தமிழக அரசுக்கு இல்லை. ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வெளியேற்றிவிட்டு புலியை வளர்ப்பது ஏன்? எலியை வளர்ப்பது ஏன்? இந்த விவகாரத்தில் அரசு மிகவும் நிதானமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் ஏனோ தானோ என்று முடிவு எடுக்கக் கூடாது.” என தமிழக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88