SC/ST: பட்டியல், பழங்குடியின நலன் நிதியை பசுக்கள் நலன், மத தலங்களுக்கு ஒதுக்கிய ம.பி பாஜக அரசு?!

சமூகத்தில் நலிவடைந்த பிரிவினர், குறிப்பாக பட்டியல் (SC), பழங்குடியினரின் (ST) கல்வி மற்றும் பொருளாதார நலன்களை மாநில அரசு சிறப்பு கவனத்துடன் ஊக்குவிக்க அரசியலமைச் சட்டம் பிரிவு 46 வலியுறுத்துகிறது. அதன்படி, 1974-ல் பழங்குடியினருக்கும், 1979-ல் பட்டியலினத்தவருக்கும் மத்திய அரசின் துணைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், SC, ST நலனுக்காக இந்த ஆண்டு ஒதுக்கப்பட்டமத்திய அரசின் நிதியிலிருந்து ஒரு பகுதியை, மத தலங்கள் மற்றும் பசுக்கள் நலனுக்கு மத்தியப்பிரதேச பா.ஜ.க அரசு ஒதுக்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

பசுக்கள்

அந்தத் தகவலின்படி, பசுக்கள் நலனுக்காக மாநில பா.ஜ.க அரசு ஒதுக்கிய ரூ. 252 கோடியில், ரூ. 95.76 கோடி மத்திய அரசின் முழு நிதியுதவியுடன் கூடிய பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கான துணைத் திட்டங்களிலிருந்து ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதுவே, கடந்த வருடம் பசுக்கள் நலனுக்கு ரூ. 90 கோடி நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. அதேபோல், இந்த மாதம் தாக்கல்செய்யப்பட்ட ஆறு மத தலங்கள் மற்றும் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவிடம் ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 109 கோடியில், கிட்டத்தட்ட பாதியளவு நிதி SC, ST நலன் துணைத் திட்டத்திலிருந்து ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து மாநில நிதித்துறை அதிகாரியொருவர், `பட்ஜெட்டரி முறையின் கீழ், தேவைக்கேற்ப SC, ST துணைத் திட்ட நிதியை பொதுத் துணைத் திட்டத்துக்கு மாற்றுவதற்கு எந்தத் தடையும் இல்லை. இது விதிவிலக்கானது. அதுமட்டுமல்லாமல், இந்த உள்கட்டமைப்பு பணிகளின் நேரடி மற்றும் மறைமுகப் பலனை SC, ST சமூகத்தினரும் பெறுவார்கள்’ என்று தெரிவித்திருக்கிறார்.

பாஜக

அதேபோல் பழங்குடியினர் துறை அதிகாரியொருவர், `மத தலங்கள் மற்றும் அருங்காட்சியகத்தில் SC, ST உள்ளிட்ட அனைத்துப் பிரிவினரும் வேலைவாய்ப்பு பெறும் கடைகள் இருக்கும். ஒதுக்கப்பட்ட நிதி அதற்கே பயன்படுத்தப்படும்’ என்று கூறியிருக்கிறார். இருப்பினும், SC, ST நலன் துணைத் திட்ட நிதியை மடைமாற்றுவது மத்திய அரசின் திட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதாகும் என பலரும் கூறுகின்றனர்.

காங்கிரஸ்

சமீபத்தில், கர்நாடக காங்கிரஸ் அரசு, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 மற்றும் வீட்டுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் உட்பட தங்களின் ஐந்து முக்கிய உத்தரவாதங்களின் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக, SC, ST துணைத் திட்டங்களிலிருந்து நிதி ஒதுக்குவதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தது. பின்னர் இது தொடர்பாக, ஜூலை 10-ம் தேதி கர்நாடக அரசுக்கு தேசிய பட்டியல் சாதி ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88