நாகர்கோவிலை அடுத்த கீழகருப்புக்கோடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பா.ஜ.க முன்னாள் எம்.எல்.ஏ மறைந்த வேலாயுதன் நினைவு மண்டபத்தை பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை திறந்துவைத்தார். பின்னர் அவர் செய்தியாளரிடம் கூறுகையில், “கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரையில் பா.ஜ.க வலிமையான கட்சி. எப்போதும் மக்கள் எங்களுக்கு ஆதரவளித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுபோன்று பா.ஜ.க எப்போதும் மக்களுக்காக போராடிக் கொண்டிருக்கிறது.
மோடி அரசின் 3.0 ஆட்சியில் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 7-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை படைத்திருக்கிறார். அடுத்த ஐந்தாண்டுகளுக்கான இலக்கை எடுத்து செல்லக்கூடிய பட்ஜெட்டாக இது அமைந்திருக்கிறது. நடுத்தர மக்களுக்கு பயன்படும் வகையில் வருமானவரி வரம்பு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இந்த பட்ஜெட்டில் 3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில் ஒரு கோடி இளைஞர்கள் திறன் மேம்பாட்டை மேம்படுத்துவதற்காக இந்தியாவின் தலைசிறந்த நிறுவனங்களில் பயிற்சி பெறுவர்கள். முத்திரா கடன் திட்டத்தை 10 லட்சத்தில் இருந்து 20 லட்சமாக அதிகரித்திருக்கிறார்கள்.
பி.எம் ரூரல் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் கிராமப்புற ஏழைகளுக்கு மூன்று கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அடுத்ததாக நகரத்தில் இருக்கும் ஏழைகளுக்கு பிரதமர் மந்திரியின் வீடு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இது போன்ற பல்வேறு விஷயங்கள் இந்த பட்ஜெட்டில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் எல்லா பகுதிகளையும் உள்ளடக்கிய பட்ஜெட்டாக இதை நாங்கள் பார்க்கிறோம். காங்கிரஸ் தலைவர்கள் கனவுலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் இலவசம் இலவசம் என்று இருந்தது. ஆனால் பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையில் வளர்ச்சி வளர்ச்சி என இருந்தது.
நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி கடந்த ஏழு ஆண்டுகளில் மட்டும் 240 தேர்வுகள் நடத்தியிருக்கிறார்கள். அதில் நீட் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகள் உள்ளன. 7 ஆண்டுகளாக தேர்வுகளில் எந்த பிரச்னையும் இல்லை. உள்ளூரில் நீட் வினாத்தாள் கசிந்திருக்கிறது என கோர்ட் தெரிவித்துள்ளது. அதை சரி செய்வதற்கான பணியை மத்திய அரசு செய்துவருகிறது. தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சியில் எத்தனை முறை குரூப் 4 தேர்வு, குரூப் 3 தேர்வு, குரூப் 2 தேர்வு வினாத்தாள்கள் லீக் ஆகி இருக்கின்றன. ஏன் குரூப் 1 தேர்வு வினாத்தாள் கூட லீக்காகி இருக்கிறது. அதற்காக டி.என்.பி.எஸ்.சி தேர்வு வேண்டாம் எனச் சொல்ல முடியுமா. அடுத்த ஆண்டு தேர்வை மிகச் சரியாக செய்ய வேண்டும். தமிழக மக்கள் நீட் தேர்வை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்.
தமிழ்நாட்டில் அரசியல் நேர்மையாக நடக்கவில்லை. அதற்காக பெரிய போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம். பெரிய ஏக்கத்தோடு தமிழக இளைஞர்கள் இருக்கிறார்கள். நாளை காலையில் மாற்ற வேண்டும் என நினைக்கிறார்கள். ஏன் தமிழகம் நம்பர் ஒன் மாநிலமாக வரவில்லை என்று இளைஞர் கேட்கிறார்கள். அரசியலில் சகிப்புத்தன்மை இருக்க வேண்டும். ஜனநாயகம் சில இடங்களில் பஸ்ட் கியரில் ஓடும், சில நேரங்களில் செகன்ட் கியரிலும் ஓடும். சகிப்புத்தன்மை இருந்தால் மட்டுமே நீண்ட நாள்கள் போக முடியும்.
சமுதாயத்திலும் வெளியிலும் போராடிக் கொண்டிருக்கிறோம். இதில் செல்ப் காம்பரமேஸ் ஆகாமல் போக வேண்டும் என நினைக்கிறேன். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பா.ஜ.க அடிப்படையும் மாறும். இப்போது மூன்று ஆண்டுகள் முடிந்துவிட்டது. புதிதாக தேசிய தலைவர் வர இருக்கிறார். வரும் நவம்பர், டிசம்பரில் மாற்றம் இருக்கும். வலிமையானவர்களை அனுபவம் வாய்ந்தவர்களை பணிக்கு கொண்டுவரவேண்டும். இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நிறைய பேர் வேறு கட்சிகளைவிட்டு இங்கே வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு பொறுப்பு கொடுத்து அடுத்த கட்டத்திற்கு போக வேண்டும்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88