Budget 2024: விடுதிகள் முதல் வேலைவாய்ப்புகள் வரை… பெண்களுக்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், பெண்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து இருக்கிறார். வேலைக்குச் செல்லும் பெண்களை ஊக்குவிக்கும் விதமாக முக்கிய நகரங்களில் பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகள் கட்டப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும், வேலைவாய்ப்பு பயிற்சி உள்பட பெண்களுக்கான பல்வேறு திட்டங்களுக்காக பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் ரூ.3 லட்சம் கோடியை ஒதுக்கீடு செய்து இருக்கிறார்.

கல்வி, வேலைவாய்ப்பு பயிற்சிக்காக பட்ஜெட்டில் ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இளைஞர்கள் மற்றும் பெண்களுக்காக மூன்று வகையான வேலைவாய்ப்புத் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஏ, பி, சி என மூன்று திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

திட்டம் ஏ-யின் படி புதியவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும். திட்டம் பி-யின் படி தொழிற்சாலைகளில், குறிப்பாக உற்பத்தித் துறையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். திட்டம் சி-யின் படி புதிய வேலைவாய்ப்பை உருவாக்க கம்பெனி உரிமையாளர்களுக்கு உதவிகள் செய்யப்படும். வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய சிறு மற்றும் குறு தொழில்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

7 பட்ஜெட், 7 கலர் புடவை!

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது 7-வது பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இதற்கு முன்பு 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்தபோது, ஒவ்வொரும் முறையும் ஒவ்வொரு நிற புடவையில் வந்தார். இன்று அவர் அணிந்து வந்தது மெஜந்தா பார்டர் கொண்ட வெந்நிற பட்டுப் புடவை.

நிர்மலா சீதாராமன், இதற்கு முன்பு பட்ஜெட் தாக்கல் செய்ய வந்தபோது அணிந்திருந்த ஒவ்வொரு புடவையும், அவர் அறிவிக்கவிருந்த திட்டம் அல்லது ஒரு மாநிலத்தின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இருந்த கைத்தறி புடவைகள் ஆகும்.