`RSS-ல் இனி அரசு ஊழியர்களுக்கு தடை இல்லை!’ – பாஜக அரசின் அனுமதியும் பின்னணியும்

கடந்த மக்களவைத் தேர்தலில், ‘400 இடங்களில் வெல்வோம்’ என்று பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் கூறிவந்த நிலையில், 240 இடங்களில்தான் பா.ஜ.க ஜெயித்தது. அத்துடன், பா.ஜ.க-வின் கோட்டையாகக் கருதப்படும் உ.பி-யில் பா.ஜ.க பின்னடைவை சந்தித்தது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க இடையே மோதல் போக்கு நிலவுவதாக செய்திகள் வெளியாகின.

மோடி

இந்த நிலையில், ‘ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் அரசு ஊழியர்கள் சேரக் கூடாது’ என்று 58 ஆண்டுகளாக இருந்துவந்த தடையை மோடி அரசு நீக்கியிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் செயல்பாடுகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்பதற்கு 1966-ம் ஆண்டு மத்திய அரசு தடை விதித்தது.

அதன் பிறகு, அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க ஆட்சியிலும், கடந்த பத்தாண்டு கால மோடி ஆட்சியிலும் அந்தத் தடை நீடித்தது. தற்போது, 58 ஆண்டுகளாக இருந்துவந்த தடையை மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு நீக்கியிருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

தடை நீக்கப்பட்டதற்கு பா.ஜ.க-வும், ஆர்.எஸ்.எஸ்-ஸும் வரவேற்றிருக்கின்றன. இது குறித்து கருத்துத் தெரிவித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ‘தேசியவாத அமைப்புகளுக்கு எதிரான மனநிலையைக் கொண்ட காங்கிரஸ் கட்சி, அரசியல் காரணங்களுக்காக ஆர்.எஸ்.எஸ் மீது தடைவிதித்தது. இப்போது, தடை நீக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது’ என்று கூறியிருக்கிறார்.

தடை நீக்கப்பட்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. இந்தத் தடை நீக்கத்தால் சமூகத்தின் அமைதிக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறியிருக்கும் எதிர்க்கட்சிகள், இப்போது தடையை விலக்குவதற்கு என்ன அவசியம் என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கின்றன.

மத்திய அரசின் ஆணை

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “மகாத்மா காந்தியின் படுகொலைக்குப் பிறகு, 1948-ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, இந்தியாவின் தேசியக் கொடிக்கு எதிர்ப்பு தெரிவித்தது. ஆர்.எஸ்.எஸ் பயிற்சிகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்கக்கூடாது என்று 1966-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ் மீதான தடையை 58 ஆண்டுகளுக்குப் பிறகு மோடி அரசு நீக்கியிருக்கிறது. சமூக சேவை அமைப்பாக மட்டுமே செயல்படுவோம் என்று சர்தார் வல்லபபாய் படேலுக்கு உறுதியளித்த ஆர்.எஸ்.எஸ்., தற்போது அரசியல ரீதியாக செயல்படுவது படேலுக்கு அளித்த வாக்குறுதியை மீறும் செயல்’ என்று விமர்சித்திருக்கிறார்.

சர்தார் வல்லபாய் படேல்

“சாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பால் நடுநிலையோடு செயல்பட வேண்டிய அரசு ஊழியர்கள், ஆர்.எஸ்.எஸ் செயல்பாடுகளில் ஈடுபட்டால் சமூகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும். அரசு ஊழியர்கள் மத உணர்வுடன், மதப் பாகுபாட்டுடன் செயல்படக்கூடிய நிலை உருவாகும். அரசு எந்திரத்தை இந்துத்துவா மயமாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இத்தகைய நடவடிக்கையை மோடி அரசு மேற்கொண்டிருக்கிறது. இது மிகவும் ஆபத்தானது” என்ற விமர்சனத்தையும் எதிர்க்கட்சியினர் எழுப்பியிருக்கிறார்கள்.

1966-ம் ஆண்டு இந்தத் தடை விதிக்கப்பட்டதற்கான காரணங்களை எதிர்க்கட்சியினர் சுட்டிக்காண்பிக்கிறார்கள். அப்போது, பசுவதைத் தடைச் சட்டத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்று காங்கிரஸுக்குள் சிலர் அன்றைய காங்கிரஸ் கட்சியின் தலைவர் காமராஜரிடம் வலியுறுத்தியிருக்கிறார்கள். அதற்கு அவர் உடன்படவில்லை. இந்த நிலையில்தான், டெல்லியில் காமராஜர் வீட்டுக்கு தீவைக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் காமராஜர் வீட்டுக்கு தீவைத்து, காமராஜரை கொலை செய்ய முயன்றனர் என்ற விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மோடி

அந்த சம்பவத்தைத் தொடர்ந்துதான், ஆர்.எஸ்.எஸ் செயல்பாடுகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்கக்கூடாது என்ற தடை அப்போது விதிக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் மட்டுமின்றி, ஜமாத் இ இஸ்லாமி என அமைப்பின் செயல்பாடுகளிலும் அரசு ஊழியர்கள் இணைவதற்கு அப்போது தடைவிதிக்கப்பட்டது. ஆனால், இப்போது ஆர்.எஸ்.எஸ் மீதான அந்தத் தடையை மட்டும் மத்திய அரசு நீக்கியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88