தமிழ்நாட்டின் மதுரையை அடுத்த சிறு கிராமத்தைச் சேர்ந்தவர் எம்.ஜி.ராஜமாணிக்கம் ஐ.ஏ.எஸ். வறுமையை வென்று ஐ.ஏ.எஸ் என்ற லட்சியத்தை எட்டிப் பிடித்த ராஜமாணிக்கம் கேரள மாநிலம் எர்ணாகுளத்தின் மாவட்ட ஆட்சியராக இருந்தார். இப்போது கேரள தேவசம்போர்டு வருவாய் செயலாளராக உள்ளார். 2018-ம் ஆண்டு கேரள மாநிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பிரளயத்தின்போது எர்ணாகுளத்தில் சாதாரண மனிதனைப் போன்று களத்தில் இறங்கி மீட்புப்பணிகளில் ஈடுபட்டு கவனம் ஈர்த்தார்.
இந்த நிலையில் ‘அன்புடன் ராஜமாணிக்கம்’ என்ற மலையாள புத்தகம் ஒன்றை எழுதி அடுத்த வாரம் வெளியிட உள்ளார். இதுகுறித்து ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜமாணிக்கம் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “என் வாழ்க்கையில் முதன் முதலில் எழுதிய புத்தகமான ‘அன்போடு ராஜமாணிக்கம்’ என்ற புத்தகத்தை ஒலிவ் புக்ஸ் நிறுவனம் விரைவில் வெளியிடவுள்ளது. புத்தக வெளியீட்டு விழா அடுத்த வாரம் நடைபெற உள்ளது. அந்த புத்தகத்தின் அட்டைப் படத்தை நிறைந்த மனதுடன் உங்கள் முன்னிலையில் வெளியிடுகிறேன்” எனக் குறிப்பிட்டு அந்த புத்தகத்தின் அட்டைப் படத்தை வெளியிட்டிருந்தார். முன்பக்க அட்டையில் ராஜமாணிக்கம் ஐ.ஏ.எஸ்-ன் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
பின்பக்க அட்டைப் படத்தில் அச்சிடப்பட்டுள்ள குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
மதுரையை அடுத்த ஒரு சிறு கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து, கடும் முயற்சியால் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஒரு மனிதரின் கதை. மாவட்ட ஆட்சியர் ஆகி சாதாரண மனிதர்களின் கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்ற ஆசைக்குச் செயல்வடிவம் கொடுத்துச் சிறந்த ஆட்சியர் என்ற மாநில அரசின் விருதைப் பெற்றதுதான் எம்.ஜி.ராஜமாணிக்கம் ஐ.ஏ.எஸ்-ன் வாழ்க்கை. மக்களுக்கும், இளைஞர்களுக்கும் உத்வேகம் அளிக்கக்கூடிய பாடப்புத்தகம் இது. தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவதற்கு விரும்பும் அனைவருக்கும் இந்த புத்தகம் வழிகாட்டியாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற விரும்புபவர்களுக்கு மிகச்சிறந்த நூல் அன்போடு ராஜமாணிக்கம். நீங்கள் எதையாவது மிகத் தீவிரமாக விரும்பினால் அதை வென்றெடுப்பதற்காக இந்த பூகோளம் முழுவதும் உங்களுக்குக் கூட்டாகத் துணை நிற்கும். இனி புத்தகத்தைப் படியுங்கள்.
இவ்வாறு பின்பக்க அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜமாணிக்கம் ஐ.ஏ.எஸ்-ன் புத்தகத்தின் உள்ளடக்கம் குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளன. பள்ளிக்கூட கட்டணம் கட்ட காலதாமதம் ஆனதால் வகுப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட ராஜமாணிக்கம் இன்று ஐ.ஏ.எஸ் அதிகாரியாக உயர்ந்து நிற்கிறார். சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்ற எம்.ஜி.ராஜமாணிக்கம் தனது சொந்த வாழ்க்கையை மையமாகக்கொண்டு ‘அன்போடு ராஜமாணிக்கம்’ என்ற புத்தகத்தை எழுதி உள்ளார்.
இவரது தாய் பஞ்சவர்ணம் காய்கறி சந்தையில் வியாபாரிகள் ஒதுக்கி வைத்திருக்கும் அழுகிய காய்கறிகளில் ஓரளவு நல்லனவற்றை வாங்கி வந்து சமைத்து ராஜமாணிக்கத்துக்கும் அவரது சகோதரர்களுக்கும் பசியாற்றியுள்ளார். உணவு சமைக்கத் தாமதமானால், மதிய உணவு எடுத்துச் செல்லாமல் பள்ளிக்குச் செல்ல, வெறும் காலுடன் நடந்து வந்து உணவு கொடுக்கும் தாய் பஞ்சவர்ணத்தின் முகம் இன்னும் கண்முன்பு மறையாமல் உள்ளதாகவும் நினைவலைகளைப் புத்தகத்தில் பகிர்ந்துள்ளார். 12 அடி நீளமும் 8 அடி அகலமும் கொண்ட ஒரு அறை மட்டும் உள்ள வீட்டில் ராஜமாணிக்கமும், அவரது 2 சகோதரர்கள் பெற்றோர் என 5 பேர் வசித்துள்ளனர்.
யு.கே.ஜி முதல் 5-ம் வகுப்பு வரை மதுரை எம்.எஸ்.ஆர் வீரமணி பள்ளியில் படித்த ராஜமாணிக்கம், 6-ம் வகுப்பிலிருந்து செளராஷ்ட்ரா பள்ளியில் படித்தார். மதுரை ராஜா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜில் மெக்கானிக் இன்ஜினியரிங் படித்தார். பின்னர் கோவையில் எம்.இ படித்து பல்கலைக்கழக அளவில் தங்கப் பதக்கத்துடன் பட்டம் பெற்றார். பள்ளி படிக்கும்போதே ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என மனதுக்குள் தீர்மானித்திருக்கிறார். அதன்படி கல்லூரி படிப்பை முடித்துவிட்டு 3 ஆண்டுகள் கடுமையாக முயன்று 2008-ல் ஐ.ஏ.எஸ் தேர்வில் வென்றார்.
இதுபோன்ற பல நிகழ்வுகளை ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜமாணிக்கம் புத்தகமாக எழுதியுள்ளார். புத்தகம் குறித்து ராஜமாணிக்கம் ஐ.ஏ.எஸ் கூறுகையில், “இந்த புத்தகம் சுயசரிதையோ, சர்வீஸ் ஸ்டோரியோ இல்லை. சிவில் சர்வீஸ் தேர்வை லட்சியமாகக் கொண்டவர்களுக்கு இந்த புத்தகம் ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதியுள்ளேன். லட்சிய பாதையில், பாதி வழியில் சோர்ந்து நிற்கின்றவர்களுக்கு எனது புத்தகம் உத்வேகம் அளிக்கட்டும்” என்றார்.