தமிழகத்தில் நிதியின்றி திணறும் பல்கலைக்கழகங்கள்? – தி.மு.க அரசுக்கு மற்றொரு பின்னடைவா?

தமிழகத்தில் சமீப காலமாகவே, விரும்பத்தகாத சம்பவங்கள் அதிகமாக நடந்தேறுகின்றன. கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு வந்திருக்கிறது. அதை வாங்கி அருந்திய 65-க்கும் மேற்பட்ட மக்கள் மரணமடைந்தார்கள். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக 15 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ரௌடி திருவேங்கடமும் ஒருவர். அவர் போலீஸாரின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றதால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். அதற்கு முன்பு ரௌடி துரை என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். இவ்வாறு தொடர்ச்சியாக நடைபெறும் சம்பவங்கள் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சூழலில்தான் தமிழகத்தில் நிதியின்றி பல்கலைக்கழகங்கள் பல திணறி வருகின்றன என அடுத்த சர்ச்சையும் வெடித்திருக்கிறது!

முதல்வர் ஸ்டாலின்

இதுகுறித்து அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் அரசு நிர்வகிக்கும் பல்கலைக்கழகங்களில் 13-ல் 12 நிதிப் பற்றாக்குறையால் செயல்பட முடியாமல் திணறி வருவதாக வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. ஊழியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கான ஊதியம், கட்டுமானப் பராமரிப்பு என அடிப்படை தேவைகளுக்கே நிதி இல்லாத அளவுக்கு தமிழகத்தின் பல்கலைக்கழகங்களைப் பாழ்படுத்தியுள்ள தி.மு.க அரசுக்கு எனது கடும் கண்டனம்.

எடப்பாடி பழனிசாமி

திராவிட இயக்கத்தின் அடிப்படையான கல்வியின் உறைவிடங்களான பல்கலைக்கழகங்களையே நிர்வகிக்கத் திராணியற்ற மு.க.ஸ்டாலின், தனது ஆட்சியை ‘திராவிட மாடல்’ என்று மார்தட்டிக்கொள்வது வெட்கக்கேடானது. ஆளுநரை எதிர்க்கிறோம் என்ற பெயரில் அரசு நடத்தும் விளம்பர அரசியல் நாடகத்தால் துணைவேந்தர்களை நியமிக்காமலும், நிதி நிர்வாகம் செய்யத்தவறியும் மாணவர்கள் எதிர்காலத்தோடு விளையாடுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உடனடியாக அரசு நிர்வகிக்கும் பல்கலைக்கழகங்களின் நிதிநிலை குறித்து ஆராய்ந்து, உரிய நிதி ஒதுக்கி, மாணவர்களுக்கு தரமான உயர்கல்வி அளிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு தி.மு.க, முதல்வரை வலியுறுத்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க செய்தி தொடர்பாளர் கவிஞர் சல்மா, “கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியில் பல பல்கலைக்கழகங்களில் பணம் வாங்கிக்கொண்டுதான் துணை வேந்தர்களை நியமித்தார்கள் என்கிற பெரிய சர்ச்சை இருக்கிறது. அவ்வாறு பணம் கொடுத்து வந்த துணை வேந்தர்கள் தங்கள் செலவு செய்த பணத்தை எடுக்க பல்கலைக்கழகங்களின் நிதியை சூறையாடினார்கள். இதனால்தான் பல்கலைகளில் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த பிரச்னைகளை சரிசெய்வதற்கு தி.மு.க கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. தலைவர் தளபதி ஸ்டாலின் கல்வித்துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அதற்காகவே பிற துறைகளைவிட கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்று வருகிறார்.

திமுக செய்தி தொடர்பாளர் கவிஞர் சல்மா

அ.தி.மு.க-வினர் செய்த தவறை, தி.மு.க தலையில் போடும் வேலையைதான் தற்போது எடப்பாடி செய்கிறார். கடந்த 10 ஆண்டுகாலம் என்ன செய்தோம் என்பதை மறந்துவிட்டு எடப்பாடி பேசிக்கொண்டு இருக்கிறார். கல்வித்துறையில் எங்களுக்கு குடைச்சல் கொடுப்பதற்காகவே ஆளுநர் ரவியை இங்கு வைத்திருக்கிறார்கள். நிர்வாகத்துக்குள் குடைச்சல் கொடுக்க ஆளுநர் ரவி இருக்கிறார். ஏற்கெனவே பிரச்னையை ஏற்படுத்திவிட்டு சென்ற எடப்பாடி இன்று இவ்வாறு குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார். அ.தி.மு.க ஆட்சியில் ஏற்பட்ட சீர்கேட்டை போக்குவதற்கு மூன்று ஆண்டுகள் போதுமானதாக இல்லை. அந்த அளவுக்கு செய்திருக்கிறார்கள். தொடர்ச்சியாக மாணவர்களின் நலனுக்காக போராடி வருகிறோம்” என்றார்.

`இவர்களின் அரசியல் விளையாட்டில் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருந்தால் சரி!’ என்கிறார்கள் கல்வியாளர்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88