இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியுள்ளது. நாளை மக்களவையில் மத்திய பட்ஜெட் அறிக்கையை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். அதை முன்னிட்டு, இன்று நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்.
பொருளாதார ஆய்வறிக்கை என்பது இந்தியப் பொருளாதாரத்தின் தற்போதைய நிலை, வளர்ச்சி வாய்ப்புகள், எதிர்பார்ப்புகள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ரிப்போர்ட். தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கையில் உள்ள சிறப்பு அம்சங்கள் இனி..
* இந்தியாவின் நிதித் துறைக்கான எதிர்காலம் பிரகாசமாக உள்ளது.
* 2024-25 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 6.5% முதல் 7% வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2023-24 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 8.2 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
* 2023-24 நிதியாண்டில் உலகப் பொருளாதாரம் நிலையற்றதாக இருந்தாலும், உள்நாட்டு வளர்ச்சிக் காரணிகள் இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியுள்ளன.
* போர் உள்ளிட்ட உலக அரசியல் பதற்றங்களால் ரிசர்வ் வங்கியின் கொள்கை நிலைப்பாட்டில் மாற்றம் இருக்கலாம்.
* 2023-24 நிதியாண்டில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, ஜி.டி.பியில் 0.7 சதவிகிதமாக இருந்துள்ளது. முந்தைய 2022-23 நிதியாண்டில் நடப்புக் கணக்கு பற்றாக்குறை ஜி.டி.பியில் 2 சதவிகிதமாக இருந்தது.
* 2023-24 நிதியாண்டில் சில்லறை பணவீக்கம் 5.4 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. முந்தைய 2022-23 நிதியாண்டில் சில்லறை பணவீக்கம் சராசரியாக 6.7 சதவிகிதமாக இருந்தது.
* உணவுப் பணவீக்கம் 2022-23 நிதியாண்டில் 6.6 சதவிகிதத்தில் இருந்து 2023-24 நிதியாண்டில் 7.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
* மொத்த நிலையான மூலதன உருவாக்கம் 9 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
* உணவுப் பொருள்களின் விலை உயர்வால் ஏழைகள் மற்றும் குறைந்த வருமானம் ஈட்டும் மக்களுக்கு ஆதரவளிக்க, அவர்களுக்கு நேரடியாக பணம் செலுத்தலாம் அல்லது, குறிப்பிட்ட பொருட்களுக்கு கூப்பன்களை வழங்கலாம்.
* இந்தியாவின் நோய் சுமையில் 54 சதவிகிதத்துக்கு ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கமே காரணம். எனவே, சமநிலையான, பரவலாக்கப்பட்ட உணவுப் பழக்கத்துக்கு மாற வேண்டும்.
* இந்தியாவின் கொள்கை சவால்களை சந்தித்து வருகிறது. சர்வதேச அளவில் நிலையற்ற தன்மை இருந்தாலும், விலை ஏற்றம் கட்டுப்பாட்டில் உள்ளது.
* கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பேலன்ஸ் ஷீட் வலுவாக இருப்பதால், தனியார் முதலீடுகள் பலம் பெறும்.
* பொது முதலீடு அதிகரித்த போதிலும், அரசின் நிதிநிலை வளர்ந்துள்ளது. வரி இணக்கம், செலவுகளை குறைத்தல், டிஜிட்டல்மயமாதல் போன்றவற்றால் இந்திய அரசின் நிதி நிர்வாகத்தில் சமநிலை ஏற்படும்.
* நிதித்துறை முக்கிய மாற்றங்களை சந்தித்து வருகிறது. அதே சமயம், உள்நாட்டிலும், உலகளவிலும் ஏற்படும் சவால்களுக்கு நிதித் துறை தயாராக வேண்டும்.
* இந்தியாவின் வளர்ச்சியில் மூலதன சந்தைகள் முக்கியமான அங்கமாக மாறி வருகின்றன. உலக அரசியல் பிரச்னைகள், பொருளாதார அதிர்வுகளையும் தாண்டி பங்குச் சந்தை ஏற்றம் கண்டுள்ளது.
* டெரிவேடிவ் வர்த்தகம் மிக அதிக லாபம் தரக்கூடிய திறன் கொண்டது. இதனால்தான், டெரிவேடிவ் வர்த்தகம் மனிதர்களின் சூதாட்ட உணர்வுகளைத் தூண்டுகிறது. இதன் விளைவாக, டெரிவேடிவ் வர்த்தகத்தில் சிறு முதலீட்டாளர்களின் பங்களிப்பு அதிகரித்திருக்கலாம்.
* உலகளவில் டெரிவேடிவ் வர்த்தகத்தால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்து வருகின்றனர். எனவே, டெரிவேடிவ் வர்த்தகம் பற்றி முதலீட்டாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது முக்கியம். பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டால், டெரிவேடிவ் வர்த்தகத்தில் ஈடுபடும் சிறு முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்திப்பார்கள்.
* சீனாவில் இருந்து வரும் அந்நிய நேரடி முதலீடுகளால், உலக விநியோக அமைப்பில் இந்தியாவின் பங்களிப்பு அதிகரிக்கும், ஏற்றுமதி வளரும்.
* அயலக இந்தியர்கள் இந்தியாவுக்கு அனுப்பும் பணம் 2024-ம் ஆண்டில் 3.7 சதவிகிதம் அதிகரித்து 124 பில்லியன் டாலராகவும், 2025-ம் ஆண்டில் 4 சதவிகிதம் அதிகரித்து 129 பில்லியன் டாலராகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.