கோவை கிராமத்தில் உலாவிய 13 அடி நீள `ராஜநாகம்’… 2 மணிநேரம் போராடி பிடித்த வனத்துறை!

கோவை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்திருப்பதால், அங்கு யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் இருக்கும். சிறுமுகை அருகே பாலப்பட்டி என்ற கிராமம் அமைந்துள்ளது. வனப்பகுதி அருகே அமைந்துள்ள அந்த கிராமத்தின் ஒரு குட்டை அருகே ராஜநாகம் பாம்பு சுற்றுவதை ஊர் மக்கள் பார்த்துள்ளனர்.

கோவை ராஜநாகம்

ராஜநாகம் வனத்துக்கும், ஊருக்கும் அடிக்கடி வந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனிடையே ராஜநாகம் கடந்த சில நாள்களாக ஊர்ந்து செல்ல முடியாமல் ஒரே இடத்தில் நின்றுள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதனடிப்படையில் வனத்துறையினர் பாம்புகளை மீட்கும் தன்னார்வலர்களுடன் பாலப்பட்டி கிராமம் சென்றனர். வனத்துறையினரும், தன்னார்வலர்களும் இணைந்து சுமார் 2 மணிநேரம் போராடி ராஜநாகத்தை பிடித்தனர். பிறகு அந்த ராஜநாகத்தை ஒரு சாக்குப்பையில் அடைத்து, சிறுமுகை அருகே அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர். அருகில் விவசாய தோட்டங்கள் இருப்பதால் பாதுகாப்பு கருதி ராஜநாகத்தை மீட்டு வனப்பகுதியில் விட்டுள்ளோம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவை ராஜநாகம்

இதுகுறித்து வனத்துறையினர் மேலும் கூறுகையில், “பிடிபட்டது சுமார் 13 அடி நீளம் கொண்ட (3.8மீ) பெண் ராஜநாகம் ஆகும். அந்தப் பாம்புக்கு தோராயமாக 3 வயதிருக்கலாம். 7 கிலோவுடன் நல்ல ஆரோக்கியமாக உள்ளது. உணவு உட்கொள்ளாத காரணமாக பாம்பு சோர்வுடன் இருந்துள்ளது. பொதுவாக இனசேர்க்கையில் ஈடுபட்டாலும் ராஜநாகம் இதுபோல சோர்வாக காணப்படும்.

கோவை ராஜநாகம்

ஆண் ராஜநாகமும் இந்த சுற்றுவட்டார பகுதியில் இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். ஆனால், நாங்கள் தேடியவரை அது கண்ணில் படவில்லை. வனத்தில் விடப்பட்ட பெண் ராஜநாகத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.” என்று கூறியுள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88