Senthil Balaji: செந்தில் பாலாஜி-க்கு `நெஞ்சு வலி’ – ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை!

தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ம் தேதி சென்னையில் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டார். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜிமீது அமலாக்கத்துறை வழக்கு பதிவுசெய்தது. கைதின்போது செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, அவற்றுக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்குச் சென்றது முதலே தனது உடல்நலனைக் காரணம் காட்டி செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி வருகிறார். ஆனால், அவரது ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, தொடர்ச்சியாக அவரின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக் கூடாதென்பதில் அமலாக்கத்துறை தரப்பு மிகவும் உறுதியாக இருந்து, அதற்கேற்ற வாதங்களை நீதிமன்றத்தில் முன்வைத்து வருகிறது. 

செந்தில் பாலாஜி

இந்த நிலையில்தான் செந்தில் பாலாஜிக்கு திடீரென இன்று மதியம் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. மதிய உணவை உட்கொண்டதைத் தொடர்ந்து 3:30 மணிபோல் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, சிறை மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. 

செந்தில் பாலாஜி

பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் செந்தில் பாலாஜி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு மருத்துவர்கள் அவரின் உடல்நிலையைச் சோதித்த நிலையில், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜியை அழைத்துச் சென்றனர். அங்கு தற்போது செந்தில் பாலாஜிக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு, நாளை (22-07-2024) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.