`குடிக்காதீங்க அப்பா…’ – விஷமருந்தி உயிரிழந்த மகள்கள்; தூக்கிட்டுக் கொண்ட மனைவி – ஈரோட்டில் சோகம்!

ஈரோடு கருங்கல்பாளையம் அடுத்துள்ள ராயல் லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன். காலையில் காய்கறி விற்பனையும், மற்ற நேரங்களில் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் உணவகத்திலும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஹசீனா. இத்தம்பதியின் மூத்த மகள் ஆயிஷா பாத்திமா பிளஸ் ஒன் படித்து வந்தார். இரண்டாவது மகள் ஜனா பாத்திமா 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

ஜாகீர் உசேன் பல்வேறு தொழில்கள் செய்து வந்ததாகவும், அதில் நஷ்டம் ஏற்பட்டதால் வாங்கிய கடன்களைத் திருப்பி செலுத்துவதற்காக ஹசீனா பல்வேறு குழுக்களில் கடன் பெற்றுள்ளார். குழுவுக்கும் சரியாக பணம் செலுத்த முடியாத நிலை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று ஜாகிர் உசேன் தனது மனைவி ஹசீனாவுடன் சண்டையிட்டு, வேலைக்குச் சென்ற நிலையில், மனைவி ஹசீனாவும், மகள்களும் வீட்டில் இருந்துள்ளனர்.

தற்கொலை

மாலை ஹசீனாவின் செல்போன் எண்ணுக்கு ஜாகிர் உசேன் தொடர்பு கொண்டுள்ளார். பலமுறை அழைத்தும் ஹசீனா போனை எடுக்காததால் சந்தேகமடைந்த அவர், பக்கத்து வீட்டுக்காரருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, பக்கத்துக்கு வீட்டுக்காரர் சென்று பார்த்தபோதும் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, உள்ளே ஹசீனா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையிலும், மகள்கள் இருவரும் விஷம் அருந்திய நிலையிலும் உயிரிழந்தது தெரியவந்தது.

இறப்பு

இது குறித்து கருங்கல்பாளையம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீஸார் மூவரின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், கடன் பிரச்னை காரணமாக மனமுடைந்த ஹசீனா, தனது மகள்களுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

வீட்டில் இருந்து உருதுமொழியில் எழுதப்பட்ட கடிதத்தையும் போலீஸார் கைப்பற்றினர். அதில், `தந்தையை நன்றாக பார்த்து கொள்ளுங்கள். அவரை குடிக்க வேண்டாம் என்று கூறுங்கள்’ என மகள்கள் எழுதி வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து முழு விசாரணைக்கு பின்னரே தற்கொலைக்கான உண்மை காரணம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb