.3கர்நாடகாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் சிறார் ஆபாசப் படம் பார்த்ததாகக் குற்றம்சாட்டப்பட்டார். அவர்மீது இந்தியத் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 67B-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதற்கான வழக்கு விசாரணை கர்நாடக நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் சிறார் ஆபாசப் படம் பார்ப்பது குற்றமல்ல எனத் தீர்ப்பு வழங்கப்பட்டு, நாடு முழுவதும் பேசுபொருளானது.
இந்த நிலையில், அரசு சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு வழக்கு தனிநபர் அமர்வான, நீதிபதி நாகபிரசன்னாவிடம் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, “இதற்கு முந்தைய தீர்ப்பாணை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 67-B யின் a பிரிவை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. விசாரணைகளை அனுமதிக்காமல், 67B (b) பிரிவைக் கவனிக்காமல், குற்றவாளி மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டதால், அவருக்கு இது சாதகமானதாக அமைந்துள்ளது.
67B (b) பிரிவின்படி குழந்தைகளை ஆபாசமான அல்லது அநாகரிகமான அல்லது பாலியல் ரீதியான முறையில் சித்திரிக்கும் எந்தவொரு வீடியோ மற்றும் படங்களையும் , இணையத்தில் தேடுதல், பதிவிறக்கம் செய்தல், விளம்பரம் செய்தல், விளம்பரப்படுத்துதல், பரிமாற்றம் செய்தல் அல்லது விநியோகம் செய்வது குற்றமாகும். குற்றம்சாட்டப்பட்டவர் மீது விசாரணை நடத்தப்பட்டு, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்.
ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடன், இந்த நீதிமன்றத்தின் உத்தரவைத் திரும்பப் பெறவோ அல்லது உத்தரவை மறுபரிசீலனை செய்யவோ முடியாது என்ற மனுதாரரின் வாதத்தை நிராகரிக்கிறோம். பிற விதிகளால் உள்ளார்ந்த அதிகாரங்களைக் கட்டுப்படுத்த முடியாது. நீதிபதிகளும் மனிதர்கள்தான். அவர்கள் கூறுவதில் தவறு இருக்காது என கூற முடியாது. அந்த தவறைத் திருத்த வாய்ப்பும் உள்ளது. எனவே, முந்தைய நீதிமன்ற உத்தரவில் முட்டாள்தனம் இருப்பதாகத் தெரிந்த பிறகு, அந்த தவறை நிலைநாட்டுவது வீரமான செயல் அல்ல” எனக் கூறப்பட்டுள்ளது.