செந்தில் பாலாஜி: `வெளியே வருவதற்கான வாய்ப்பு?’ – வழக்கின் தற்போதைய நிலை என்ன?

அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராகச் செந்தில் பாலாஜி பதவி வகித்தார். அப்போது வேலை வாங்கித்தருவதாகப் பணம் வாங்கியதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த குற்றச்சாட்டுத் தொடர்பாக வழக்கு தொடர்ந்து நடைபெற்றுவந்த நிலையில், அவர் திமுக-வில் இணைத்து சட்டமன்ற உறுப்பினராகவும், அடுத்த தேர்தலில் வெற்றிபெற்று அமைச்சராகவும் பொறுப்பேற்றார். இந்த சூழலில் கடந்த 2021-ம் ஆண்டு அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.

செந்தில் பாலாஜி

இந்த வழக்கு குறித்து விசாரணை நடைபெற்றுவந்த நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் அமைச்சராகப் பொறுப்பு வகித்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டர். கைது செய்த சமயத்தில் அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை செய்து பிறகு தனியார் மருத்துவமனைக்கு மாற்றி அவருக்கு அறுவை சிகிச்சை செய்தது எனப் பல்வேறு நிகழ்வுகள் நடந்து முடிந்தன.

ஓராண்டு சிறை வாசம்..!

சிறையிலிருந்த செந்தில் பாலாஜிக்கு எதிராகக் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணை, சிறை வாசம் ஒருபக்கம் சென்று கொண்டிருக்க. இன்னொரு பக்கம் செந்தில் பாலாஜி தரப்பு அவருக்கு ஜாமீன் பெற்றுத்தரும் வேலையை மிகவும் தீவிரமாகச் செய்துவந்தனர். மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த பாலாஜி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். சிறையில் உள்ள மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை தொடரப்பட்டது. நீதிமன்ற காவலில் இருக்கும் செந்தில் பாலாஜியின் காவல் ஒருமுறை இரண்டு முறை அல்ல 48-வது முறையாக நீடிக்கப்பட்டிருக்கிறது.

செந்தில் பாலாஜி

நீதிமன்ற காவல் நீடிப்பு ஒருபுறமிருக்க, இன்னொரு பக்கம் செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர்கள் முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று ஒவ்வொரு நீதிமன்றங்களிலும் ஏறி, இறங்கிக் கொண்டிருக்கிறார்கள். அமலாக்கத்துறை தரப்பில் செந்தில் பாலாஜி அமைச்சராக இருப்பதால் அவர் வெளியே சென்று சாட்சியங்களைக் கலைக்கக்கூடும் என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது. ராஜினாமா செய்து பல மாதங்கள் ஆகியும் ஜாமீன் மட்டும் இதுவரை கிடைக்கவில்லை.

வழக்கு விசாரணை!

சமீபத்தில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி அல்லி, மனுவைத் தள்ளுபடி செய்திருந்தார். அதேபோல, வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவுக்காகச் செந்தில் பாலாஜியை வரும் ஜூலை 22-ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஒரு விசாரணை நடந்துகொண்டிருக்க, உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது.

செந்தில் பாலாஜி

ஜாமீன் மீதான மேல் முறையிட்டு மனு தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. கடந்த ஜூலை 10-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, அகஸ்டின் ஜாா்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பாக விசாரணைக்கு வந்தது. அமலாக்கத்துறை தரப்பில் கூடுதல் அவகாசம் வேண்டும் என்று கேட்கப்பட்ட நிலையில் விசாரணை ஜூலை 12-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. அடுத்ததாக 12-ம் தேதி நடைபெற்ற விசாரணையில் மீண்டும் விசாரணையை ஜூலை 22-ம் தேதி ஒத்திவைத்து நீதிமன்றம்.

கிடைக்குமா ஜாமீன்?

ஒரு வருடத்தை கடந்தும் சிறையில் தவிக்கும் செந்தில் பாலாஜிக்கு நிராகரிப்பு மட்டுமே கிடைத்துக்கொண்டிருக்கிறது. இந்த வழக்கில் நடைபெறுவது என்ன என்று செந்தில் பாலாஜி வழக்கறிஞர்கள், திமுகவின் சட்டத்துறையைச் சேர்ந்தவர்கள் சிலரிடம் பேசினோம். “செந்தில் பாலாஜிக்கு வேண்டுமென்றே ஜாமீன் தராமல் மறுக்கப்படுகிறது. விசாரணைக்கு எங்கள் தரப்பிலிருந்து முழு ஒத்துழைப்பும் கொடுக்கிறோம். இருந்தபோதிலும் பல்வேறு காரணங்களை வேண்டும் என்றே சொல்லி ஜாமீன் நிராகரிக்கிறார்கள். வழக்கு விசாரணையும் அமலாக்கத்துறை சார்பில் திட்டமிட்டே தாமதப்படுத்துவதாகவே தெரிகிறது. இந்த வழக்கு விசாரணையில் ஒரு சில பின்னடைவுகளை நாங்கள் சந்தித்தபோதிலும், பல முன்னேற்றத்தையும் கண்டிருக்கிறோம். அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருக்கிறார் என்று தொடர்ந்து பேசிக்கொண்டிருந்ததை அடுத்து செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

செந்தில் பாலாஜி

காரணமே இல்லாமல் ஒருவரை எவ்வளவு நாள் சிறையில் அடித்து வைக்க முடியும். சமீபத்தில் தேர்தல் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. அதேபோல, நிலமோசடி வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கும் சமீபத்தில்தான் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனை மிகவும் நல்ல விஷயமாகவே பார்க்கவேண்டியதுள்ளது. அவர் கைதாகி ஒரு ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. நடுவில் அமலாக்கத்துறை விசாரணைக்கும் செந்தில் பாலாஜி முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. வழக்கு விசாரணை முன்னோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. முன்பைவிட தற்போது ஜாமீன் கிடைப்பதற்கான வாய்ப்பு மிகவும் பிரகாசமாகவே இருக்கிறது. அடுத்துவரும் விசாரணையில் கண்டிப்பாக அவருக்கு ஜாமீன் கிடைக்கும் என நம்புகிறோம்” என்றார்கள் விரிவாக.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88