கிராமிய சந்தை, பாரம்பர்ய உணவுகளில் உலக சாதனை… ஜூலை 28-ல் சென்னையில் கிராமிய திருவிழா!

பாரம்பர்ய அரிசி வகைகள், சிறுதானியங்கள் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. அதேசமயம் பாரம்பர்ய அரிசியை எங்கு வாங்கலாம், அதில் என்னென்ன சமைக்கலாம், எப்படி சமைக்கலாம் என்பது பற்றி நிறைய பேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு வழிகாட்டும் விதமாக சென்னையில் வருகிற ஜூலை 28-ம் தேதி ‘கிராமிய திருவிழா-2024’ என்ற பெயரில் விழா நடைபெற உள்ளது.

வேலம்மாள் நிறைநிலை மேல்நிலை பள்ளி சார்பில் மண்வாசனை அமைப்பு ஒருங்கிணைக்கும் இந்த கிராமிய திருவிழாவுக்கு பசுமை விகடன் ஊடக ஆதரவு வழங்கியுள்ளது.

நிகழ்ச்சி அறிவிப்பு

இந்நிகழ்வு குறித்து மண்வாசனை மேனகா பேசியபபோது, “மக்களிடையே பாரம்பர்ய அரிசியில் உள்ள சத்துகள் குறித்தான விழிப்புணர்வு இருந்து வருகிறது. பாரம்பர்ய அரிசியை பெண்கள் எடுத்து கொள்வதால் ஏற்படும் நன்மைகளும் நிறைய பேருக்கு தெரிகிறது. அதேசமயம் அந்த அரிசியை வாங்கி என்னென்ன சமைக்கலாம், எப்படி சாப்பிடலாம் போன்ற சந்தேகங்கள் இருந்து வருகின்றன. குறிப்பாக குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி எப்படி சமைப்பது என்ற சந்தேகம் இருக்கும். அதை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

விவசாயிகள் விளைவிக்கும் பாரம்பர்ய நெல் வகைகள், அரிசி வகைகளில் உள்ள ஊட்டச்சத்துகள், அதை நாம் ஏன் சாப்பிட வேண்டும்? இயற்கை விவசாயம் என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் என்ன, ஆரோக்கியமான காய்கறிகளை மாடித்தோட்டத்தில் விளைவிப்பது உள்ளிட்ட பல விஷயங்களை இந்த விழாவில் வல்லுநர்கள், இயற்கை விவசாயிகள், சித்த மருத்துவர்கள் பேச இருக்கிறார்கள். அதேபோல உணவே மருந்து… அந்த உணவுக்கு ஆரோக்கியான விளைபொருள்கள் எவை என்பதையும் இந்நிகழ்ச்சியில் விளக்க இருக்கிறார்கள்.

உணவுத் திருவிழா

கிராமிய திருவிழாவின் ஒரு பகுதியாக இயற்கை விவசாய விளைபொருள்களை விற்பதற்கான சந்தையும் நடைபெற உள்ளது. இதில் ஆர்வமுள்ள விவசாயிகள் பங்கெடுக்கலாம். சிறுதானிய பிஸ்கெட்டுகள், சிறுதானிய மற்றும் பாரம்மபர்ய நொறுக்குத்தீனி வகைகள், கறுப்புக் கவுனி அரிசி மற்றும் சிறுதானியத்தில் செய்யப்பட்ட ஐஸ்கிரீம், குல்பி, மர பொம்மைகள், சானிட்டரி நாப்கின்ஸ், தினை லட்டு, கம்பு லட்டு, எள்ளுருண்டை, கமர்கட் போன்ற பாரம்பரிய உணவு பண்டங்கள், பனையோலை  பொருள்கள் உள்ளிட்ட அனைத்து பொருள்களும் காட்சிக்கும் விற்பனைக்கும் கிடைக்கும்.

பாரம்பர்ய உணவுகள்

பாரம்பர்ய மற்றும் சிறுதானிய உணவுகள் நேரடியாக சமைத்து காண்பிக்கப்படும். சமையலில் உள்ள சந்தேகங்களை அங்கே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக இல்லத்தரசிகள், வயதில் மூத்தோர் போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மரச்செக்கு எண்ணெய், நாட்டுச் சர்க்கரை என்று எந்த கலப்படமும் இல்லாத இயற்கை சார்ந்த விளைபொருள்கள், உணவுப் பொருள்களை விற்கும் கடைகளும் இடம் பெற உள்ளன.

விழாவின் சிறப்பம்சமாக உலக சாதனை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதில் பலவிதமான சிறுதானிய தோசை வகைகள் கண்முன்னே நேரடியாக சமைத்து காட்டப்படும். மேலும், விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கு விருதுகளும் வழங்கப்பட உள்ளன. இந்த சாதனை  நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் என முப்பாலினத்தவரும் பங்குபெறும் வகையில் வடிவமைத்திருக்கிறோம்.

நெல் திருவிழா..!

வி. ஜி. பி. குழுமத்தின் தலைவர் டாக்டர். வி.ஜி. சந்தோசம், மாநில திட்டக்குழு உறுப்பினர் முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை  மற்றும் அரசின் கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர். ஜே.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு ஸ்டார்ட் அப் மிஷன் தலைமை நிர்வாக அதிகாரி சிவராஜ் ராமநாதன், மாநில திட்டக்குழு உறுப்பினர் மற்றும் சித்த மருத்துவர் கு.சிவராமன், தஞ்சாவூரைச் சேர்ந்த இயற்கை வேளாண்மை செம்மல் கோ.சித்தர், தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அறச்சலூர் செல்வம், தமிழ்நாடு கைவினைப் பொருள்கள் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குனர் கவிதா ராமு, தொண்டை மண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் உழவன் கே.எம்.பாலு என இயற்கை விவசாயிகள், இயற்கை வாழ்வியல் வல்லுநர்கள், சித்த மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார்கள்.

விதை விற்பனை

மேலும் இந்த திருவிழாவில் சித்தூர் குட்டை, சிவகங்கை குட்டை போன்ற அரிய வகை தென்னிந்திய குட்டை ரக நாட்டு மாடுகளும் இடம் பெறுகின்றன. குழந்தைகள் கொஞ்சி விளையாட, புகைப்படம் எடுக்க கன்றுக் குட்டிகளும் இருக்கும். மேலும் ராட்டினம், பாரம்பரிய தின்பண்டங்கள், மாட்டு வண்டி, கலைநிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டுகள் என்று பொழுதுபோக்கு அம்சங்களோடு இந்த கிராமிய திருவிழா நடைபெற உள்ளது.

கண்காட்சியில் 100 வகையான அரிசி மற்றும் நெல்  ரகங்கள், நாட்டு விதைகள், மூலிகைகள் போன்றவையும் இடம்பெற உள்ளன. மண்வாசனை அமைப்பு ஒவ்வொரு வருடமும் ஆரோக்கியமான உணவு மற்றும் பாரம்பர்ய அரிசி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை சென்னையில் நடத்தி வருகிறது. இந்த முறை வேலம்மாள் கல்வி நிறுவனமும் இணைந்திருக்கிறது. அனைவரும் பங்கேற்கும்படி அழைக்கிறோம்” என்று தெரிவித்தார்.

கிராமிய திருவிழா

நாள் : ஜூலை 28-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை.

இடம்: வேலம்மாள் நிறை நிலை மேல்நிலைப் பள்ளி, டி.எஸ்.கிருஷ்ணா நகர், முகப்பேர், சென்னை.

நேரம்: காலை 9 .30 மணி முதல் மாலை 6 .30 மணி வரை  

அரங்கு அமைக்க விரும்புவர்கள் மற்றும் நிகழ்ச்சி குறித்த தகவல்களுக்கு… 98841 66772 / 097909 72612