வங்கதேசத்தில், அரசு வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு முறையில் திருத்தம் கோரி ஆயிரக்கணக்கான மாணவர்கள் தலைநகர் டாக்கா மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வங்கதேசத்தில் 56% (சுதந்திர போராட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கென 30% , பெண்களுக்கு 10%, பின்தங்கிய மாவட்டத்தினருக்கு 10%, பூர்வ குடிகளுக்கு 5% மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 1%) இட ஒதுக்கீடு அமலில் இருந்தது. இந்த நிலையில், இந்த இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் தரப்பில் போராட்டங்கள் வெடிக்கவே, 2018-ல் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, நாட்டில் மொத்தமாக இட ஒதுக்கீட்டையே ரத்து செய்தார். அதன் பிறகு அங்கு இட ஒதுக்கீடு இல்லாமல் இருந்தது. இத்தகைய சூழலில் 2021-ல், சுதந்திர போராட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கான 30% இட ஒதுக்கீட்டை மீண்டும் அமலுக்கு கொண்டுவரவேண்டுமென அந்நாட்டு உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுமீதான விசாரணை சில வருடங்கள் தொடர்ந்த நிலையில், அண்மையில் உயர் நீதிமன்றம், 30% இட ஒதுக்கீட்டை மட்டும் அமல்படுத்த உத்தரவிட்டது. அதையடுத்து ஷேக் ஹசீனா அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்த நிலையில்தான், அந்நாட்டில் இந்த குறிப்பிட்ட 30% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக ஒரு தரப்பு மாணவர்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர். அதேபோல, ஆளும் அரசின் ஆதரவு மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள், ஒட்டுமொத்தமாக இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்ய வேண்டுமென அவர்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதில் 30% இட ஒதுக்கீடு வேண்டாமென்று வலியுறுத்தும் தரப்பினர், “இந்த 30% இட ஒதுக்கீடு என்பது அந்தக் காலத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பை போற்றும்விதமாக கொண்டுவரப்பட்டது. ஆனால், தற்போதைய சூழலில் அது தேவை இல்லையென்றே கருதுகிறோம். மூன்று தலைமுறைகளைக் கடந்தும் அந்த இட ஒதுக்கீடு நீடிப்பது, அபத்தமானது மற்றும் சமூகத்துக்கு எதிரானது. அந்த இட ஒதுக்கீடு மற்றவர்களின் வாய்ப்புகளைப் பறிக்கும் வகையில் இருக்கிறது. நாங்கள் இட ஒதுக்கீடு வேண்டாம் என இதற்கு எதிராக நிற்பவர்கள் அல்ல… நாட்டில் மொத்தம் 56% இட ஒதுக்கீடு இருக்கிறது. அதில் பூர்வகுடி மக்களுக்கும் (5%), மாற்றுத்திறனாளிகளுக்கு (1%) இருக்கக்கூடிய இட ஒதுக்கீடு மட்டும் நீடிக்க வேண்டும் என்கிறோம். இதை முன்வைத்துதான் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறோம்.” என்கின்றனர்.
அதே சமயம் ஒட்டுமொத்தமாக இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராடிவரும் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் மாணவர்கள் பிரிவினர், “இட ஒதுக்கீடு விவகாரத்தில் 2018-ல் ஷேக் ஹசீனா எடுத்த முடிவே சரியானது. எனவே, எங்களுடைய முடிவில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். உச்ச நீதிமன்றத்தில் அரசு முறையீடு செய்திருக்கிறது. தற்போது உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை பெற்றிருக்கிறோம். எனவே உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டில் எங்களுக்குச் சாதமாக தீர்ப்பு வருமென நம்புகிறோம்” என்கின்றனர்.
இந்த நிலையில், மேற்குறிப்பிட்ட இரு தரப்பினரிடையேயான போராட்டம் வன்முறையாக மாறியது.
வன்முறை காரணமாக வியாழக்கிழமை மதியம் முதல் தலைநகர் டாக்காவுக்கு வந்து செல்லும் மெட்ரோ ரயில் சேவை, மொபைல் இணையைச் சேவையை அரசு தடை செய்தது. வன்முறை அதிகரித்து வருவதன் காரணமாகப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைக் காலவரையின்றி மூட வங்கதேச அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், நாடு தழுவிய போராட்டத்துக்கு மத்தியில் மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு வலியுறுத்தி, டாக்காவில் உள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) வங்கதேசத்தில் உள்ள இந்தியர்களை வீட்டுக்குள்ளேயே பாதுகாப்புடன் இருக்கக் கேட்டுக் கொண்டுள்ளது.
Indian nationals in Bangladesh are requested to follow the advisory issued by the High Commission of India in Dhaka. The High Commission and Assistant High Commissions remain available on helpline numbers for any assistance required by Indian nationals. https://t.co/MqNRVvmrJ8
— Randhir Jaiswal (@MEAIndia) July 19, 2024
இது தொடர்பாக வங்கதேசத்தில் உள்ள இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “வங்காள தேசத்தில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்தியர்கள் மற்றும் வங்கதேசத்தில் படிக்கும் இந்திய மாணவர்கள் தங்கள் நடமாட்டத்தைக் குறைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.” எனக் குறிப்பிட்டு, உதவி எண்களையும் பகிர்ந்திருக்கிறார். இதுவரை நடந்த வன்முறையில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு கட்டடங்கள் போராட்டக் காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.