`சுற்றுப்பயணம் அல்ல, சுற்றுலா பயணம்; ஜானகி அம்மா எடுத்த முடிவை சசிகலா..!’ – ஆர்.பி.உதயகுமார் காட்டம்

சமயநல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு  செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், “இன்றைக்கு சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. நாட்டிலுள்ள அவலங்களை சட்டசபையில் பேச முயன்றால், தூக்கி எறிகிறார்கள். தமிழ்நாட்டில் நடைபெறும் அவலங்களான கள்ளச்சாராயம், போதைப்பொருள் கடத்தல் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை 38 வருவாய் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க கழகத் தொண்டர்கள் செய்து வருகிறார்கள்.

ஆர்.பி.உதயகுமார்

தமிழகத்தில் ஆண்டுக்கு ஒரு முறை மின் கட்டணம் உயர்த்துகிறார்கள். உயர்த்தியதற்கு வருத்தம் தெரிவிக்காமல், நியாயப்படுத்துகிறார்கள். எட்டு ஆண்டுகள் மின்சார கட்டணத்தை உயர்த்தாத அரசு அதிமுக அரசு.

மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் பலியானபோது இது போன்ற சம்பவம் இனி நடைபெறாது என்றார் முதலமைச்சர். அது வெறும் அறிவிப்போடு நின்றுவிட்டது. அதிகாரிகளை இடமாற்றம் செய்து விட்டேன் என ஸ்டாலின் கூறுவது ஆடத்தெரியாதவன் தெரு கோணல் என்று சொன்னதுபோல் உள்ளது. அதே அதிகாரிகளை வைத்துதான் அதிமுக ஆட்சியில் காவல்துறையை ஸ்காட்லாந்து யார்டுக்கு நிகராக வைத்திருந்தோம்.

நான் இங்கு யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை, தரக்குறைவாக பேச விரும்பவில்லை, நடந்ததை குறிப்பிட விரும்புகிறேன். 33 ஆண்டு காலம் ஜெயலலிதாவுடன் இருந்தவர் (சசிகலா), தென் தமிழகத்தில் ஆடி மாதத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நீங்கள் உங்கள் சமூகத்திற்கு என்ன செய்தீர்கள்? உங்களை சேர்ந்தவர்களுக்கு நீங்கள் ஏதாவது செய்து இருந்தால் அனைவரும் உங்கள் பின்னால் வந்திருப்பார்கள்? உங்களுக்கு இருக்கும் பணத்தை, சொத்தை வைத்து ஏதாவது செய்து இருந்தால் அந்த பகுதியே சொர்க்க பூமியாக இருந்திருக்கும்.

ஆர்.பி.உதயகுமார்

இந்த இயக்கத்தை கபளீகரம் செய்து விடுவார்கள் என்று ஜெயலலிதாவே அவர்களுடன் போராட்டம் செய்து தோற்றுப் போனார். தலைமைக் கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இவரை சேர்க்க வேண்டும் அவரை சேர்க்க வேண்டும் என்று யாரும் கூறவில்லை. அவர்களை சேர்க்க யாரும் விரும்பவில்லை. இவர்கள் இருந்தால்தான் வெற்றி பெறும் என்பது கற்பனை கதை. மக்கள் நினைத்தால்தான் வெற்றி பெற முடியும், மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார்.

காளிமுத்து கூறியதுபோல, `கறந்த பால் மடி போகாது, கருவாடு மீன் ஆகாது.’ அதேபோல் அவர்களை யாரும் விரும்பவில்லை அதிமுக தொண்டர்கள் கவனமுடன், விழிப்புடன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 1972 ஆம் ஆண்டு அதிமுக-வை மக்கள் இயக்கமாக எம்.ஜி.ஆர் உருவாக்கினார். 52 ஆண்டுகள் பொன்விழா கண்ட கட்சியில், 50 ஆண்டுகளில் கிளைகழகசெயளாராக இருந்து எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசியால் மக்கள் ஆதரவோடு எடப்பாடி பழனிசாமி நான்கரை ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்தார். அவர்தான் மீண்டும் முதல்வராக  வரவேண்டும் என மக்கள் நினைத்தார்கள். ஆனால் அவர் வரக்கூடாது என்று யார் உள்ளடி வேலை பார்த்தது என்று மக்களுக்கு நன்றாக தெரியும்

எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக பொறுப்பேற்று எத்தனையோ வழக்குகள். நீதிமன்றங்களுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் சென்று கட்சியை மீட்டு, கொடியை மீட்டு, வலிமையான இயக்கத்தை உருவாக்கினார். இரண்டு கோடி தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி உடன் நின்ற காரணத்தினால் சுதந்திர காற்றை சுவாசிக்கின்றனர்.
 

33 ஆண்டுகள் ஜெயலலிதாவுடன் இருந்து ஆட்சி நிர்வாகத்தை செயல்படுத்தினேன் என்று தனக்குத்தானே பிரசாரத்தில் முன்னிலைப்படுத்துகிறார். ஆனால், தான் சார்ந்த சமுதாயத்தினர் வறுமையில் உள்ளார்களே, அவர்கள் கஷ்டம் தீர்க்க என்ன முயற்சி எடுத்தார்? கல்வியில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளனர். அவர்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார்?  சமுதாயத்தை பயன்படுத்தி தன்னை வளர்த்துக் கொண்டாரே தவிர அந்த மக்களுக்கு இதுவரை எதுவும் செய்யவில்லை. அப்படி செய்திருந்தால் இந்த நாடே அவர்கள் பின்னால் நின்றிருக்கும்.

சசிகலா

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் தளபதியாக இருந்த எஸ்.டி.எஸ், திருநாவுக்கரசர், கருப்புசாமி பாண்டியன், காளிமுத்து, அழகு திருநாவுக்கரசு, சத்தியமூர்த்தி, துரைராஜ், பரமசிவம், நயினார் நாகேந்திரன், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் என அதிமுகவிலிருந்த மூத்த முன்னோடிகள் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியானதற்கு இன்றைக்கு ஆடி மாதத்தில் தென்காசியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளவர்தான் (சசிகலா) காரணம். சுற்றுப்பயணம் என்ற பெயரில் சுற்றுலா பயணம் சென்றிருக்கிறார். கண் கெட்ட பிறகு சூரியன் நமஸ்காரம் என்பது போல உள்ளது

அவர்களுக்கு இருக்கக்கூடிய சொத்துக்கும் பணத்திற்கும் அதிகாரம் கையில் இருந்தும், தமிழ்நாட்டு ஏழை எளிய மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. மக்களும் உங்களிடம் ஏமாறத் தயாராக இல்லை. பகல் கனவு காண்பவர்களுக்கு நிச்சயம் கனவாகத்தான் போகும். உச்ச நீதிமன்ற தீர்ப்பு, தேர்தல் ஆணையத்தின் தீர்ப்புகளை மதிக்க வேண்டும்.

கடந்த 2021 தேர்தலில் அரசியலை விட்டு ஒதுங்குகிறேன் எனக் கூறியவர் தற்போது மீண்டும் அரசியலில் குதிக்கிறேன் என சொல்கிறார். மக்களிடத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். ஜானகி அம்மாள் எடுத்த முடிவை முன்மாதிரியாக கொண்டு சசிகலா செயல்பட்டால் இரண்டு கோடி தொண்டர்களும் பலன் அடைவார்கள் என எடப்பாடி பழனிசாமி கூறியதை செய்தால் நன்றாக இருக்கும். 2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக   எந்த கொம்பனாலம் தடுக்க முடியாது…” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88