UP: `பாஜக உ.பி-யில் சறுக்கியது இதனால்தான்!’ – `10′ காரணங்களைப் பட்டியலிட்ட மாநிலத் தலைமை

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 240 இடங்களுடன் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையை இழந்ததற்கு முக்கிய காரணம் உத்தரப்பிரதேசம் மாநிலம்தான். காரணம், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 இடங்களில் பா.ஜ.க தனியாக 62 இடங்களைப் பெற்றது. ஆனால், இந்த முறை வெறும் 33 இடங்களை மட்டுமே பா.ஜ.க பெற்றிருக்கிறது. கடந்த முறை பெற்ற தொகுதிகளையாவது பெற்றிருந்தாலே பா.ஜ.க தனது தனிப்பெரும்பான்மையைத் தக்கவைத்திருக்கும்.

யோகி, மோடி

ஆனால், சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி 43 இடங்களை வென்று அந்தக் கனவைத் தகர்த்துவிட்டது. அயோத்தி ராமர் கோயில் அமைந்துள்ள தொகுதி உட்பட உத்தரப்பிரதேசத்தில் இத்தகைய தோல்வியைச் சந்தித்ததற்கு பா.ஜ.க-வின் அலட்சியமே காரணம் என்று அப்போது பேச்சுகள் அடிபட்டன.

இதுபோதாதென்று கடந்த இரண்டு நாள்களாக உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் Vs துணை முதல்வர் உட்கட்சி மோதல் வெடிக்க ஆரம்பித்திருக்கிறது. இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க தோல்வியின் முக்கிய காரணங்கள் அடங்கிய 15 பக்க அறிக்கையை மாநில தலைவர் பூபேந்திர சவுத்ரி டெல்லி தலைமையிடம் சமர்பித்திருக்கிறார்.

மோடி – யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரதேசத்திலுள்ள 80 தொகுதிகளிலுள்ள 40,000 பாஜக தொண்டர்களின் கருத்துகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தோல்விக்கான 10 காரணங்கள்…

1. மாநிலத்தில் அதிகாரிகள் மற்றும் நிர்வாகத்தின் எதேச்சதிகாரம்.

2. அரசு மீது கட்சி தொண்டர்களுக்கு அதிருப்தி.

3. கடந்த ஆண்டுகளாக அரசு வேலைத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு.

4. அரசுப் பணிகளுக்கான ஒப்பந்தப் பணியாளர்கள் நியமனத்தில் பொதுப் பிரிவினருக்கு மாநில அரசின் முன்னுரிமை.

5. கட்சி மீதான ராஜபுத்திர சமூகத்தினரின் அதிருப்தி.

6. அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவது குறித்து கட்சித் தலைவர்கள் அளித்த அறிக்கைகள்.

7. முன்பாகவே சீட்கள் ஒதுக்கப்பட்டுவிட்டதால் 6 மற்றும் 7-வது கட்ட வாக்குப்பதிவில் தொண்டர்களின் உற்சாகம் குறைந்துவிட்டது.

அக்னிபத்

8. பழைய ஓய்வூதியப் பிரச்னை அரசு அதிகாரிகள் மத்தியில் எதிரொலிப்பு.

9. அக்னிபத் திட்டம் மிகப்பெரியாக வெடித்தது.

10. பா.ஜ.க-வின் முக்கிய வாக்காளர்களின் பெயர்கள் கீழ்மட்ட தேர்தல் அதிகாரிகளால் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டன. கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும், கட்சியின் முக்கிய வாக்காளர்களின் 30,000 முதல் 40,000 வரையிலான பெயர்கள் நீக்கப்பட்டன.