‘அம்மா வழியில் மக்கள் பயணம்’ – தென் மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்கினார் சசிகலா

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளையடுத்து, `பிளவுபட்டுகிடக்கும் தொண்டர்களை ஒருங்கிணைக்கும் விதமாக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன்’ என அ.தி.மு.க.முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா அறிவித்திருந்தார். அதன்படி, அ.தி.மு.க. முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா, தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை ஒருங்கிணைக்கும் விதமாக ‘அம்மாவின் வழியில் மக்கள் பயணம்’ எனும் பெயரில் தென் மாவட்டங்களில் தனது சுற்றுப்பயணத்தை நேற்று தொடங்கினார்.

சசிகலா

தென்காசி மாவட்டம் காசிமேஜர்புரத்தை அடுத்த அகஸ்தியர் பாதத்தில் வழிபாடு முடித்துவிட்டு தனது சுற்றுப்பயணத்தை வி.கே.சசிகலா தொடங்கினார். முதல் நிகழ்ச்சியாக, காசிமேஜர்புரத்தில் மக்களை சந்தித்தார். அப்போது அவருக்கு, பூரண கும்ப மரியாதையுடன் மேளதாளம் முழங்க ராட்சத கிரேன் மூலமாக மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தென்காசி, புதிய பேருந்து நிலையம், கீழப்புலியூர், சுந்தரபாண்டிபுரம், மேலப்பாவூர், கீழப்பாவூர், பாவூர்சத்திரம், சுரண்டை உள்ளிட்ட பகுதிகளில் முதற்கட்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்தித்து உரையாடினார். முன்னதாக சுந்தரபாண்டியபுரம் அருகே உள்ள திருச்சிற்றம்பலம் அம்பேத்கர் நகர் பகுதியில் பெண் தொண்டர் வேண்டுகோளுக்கு இணங்க அவரின் வீட்டுக்கு சென்றபோது, வி.கே.சசிகலாவுக்கு, அவர் முத்தம் கொடுத்து வரவேற்றார்.

வரவேற்பு

சுற்றுப்பயணத்தின் தொடக்கத்தில், கூட்டத்தை பயன்படுத்திய மர்மநபர்கள் சிலர், கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின் பர்ஸ், செல்போன் மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடிச்சென்றனர். இதனால் கூட்டத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட வி.கே.சசிகலா, தனது சுற்றுப்பயணத்தில் அ.தி.மு.க. கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது என அ.தி.மு.க.வினர்‌ கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஆனால், அ.தி.மு.க.வினரின் எதிர்ப்புகளை மீறி, வழிநெடுக இரட்டைஇலை சின்னத்துடன் அ.தி.மு.க. கொடிகள் வரவேற்புக்காக கட்டப்பட்டிருந்தது.

முத்தம்

வி.கே.சசிகலாவின் பிரசார வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற வண்டிகளிலும் அ.தி.மு.க.கொடிகளே கட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், இன்று, செங்கோட்டை, பண்பொழி, அச்சன்புதூர், இலத்தூர், கொடிக்குறிச்சி, கடையநல்லூர், சொக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தொண்டர்களை சந்திக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88