Kangana: `அரசியல்வாதி அரசியல் செய்யாமல், பானிபூரியா விற்பார்…’ – சங்கராச்சாரியாரைச் சாடிய கங்கனா

ஜூன் 2022-ல் உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பா.ஜ.க-வுடன் கைகோத்து ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றார். பிப்ரவரி 2023-ல், இந்திய தேர்தல் ஆணையம் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கட்சியை உண்மையான சிவசேனாவாக அங்கீகரித்தது. இந்த நிலையில், ஜோதிர் மடத்தின் சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி, சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரேவை அவரது இல்லத்தில் கடந்த 15-ம் தேதி சந்தித்தார்.

அவிமுக்தேஷ்வரானந்த் சுவாமி

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சங்கராச்சாரியார், “நாம் அனைவரும் சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்கள். பாவம் – புண்ணியத்துக்கு ஒரு வரையறை உள்ளது. துரோகம் செய்வது மிகப் பெரிய பாவங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது. உத்தவ் தாக்கரேவுக்கு துரோகம் நடந்துள்ளது. அவர் எதிர்கொண்ட துரோகத்தால் நாம் அனைவரும் வேதனையடைந்தோம் என்று நான் அவரிடம் கூறினேன். அவர் மீண்டும் மகாராஷ்டிர முதல்வராகும் வரை நம் வலி தீராது. வஞ்சகம் செய்பவன் இந்துவாக இருக்க முடியாது. அதனை பொறுத்துக்கொள்பவனே இந்து.

மகாராஷ்டிராவின் ஒட்டுமொத்த மக்களும் துரோகத்தால் வேதனையடைந்துள்ளனர். இது சமீபத்திய (மக்களவை) தேர்தலில் பிரதிபலித்தது” எனக் குறிப்பிட்டிருந்தார்.

சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதியின் கருத்துக்கு எதிராக நடிகையும், இமாச்சல் பிரதேசத்தின் எம்.பி-யுமான கங்கனா ரனாவத் தன் எக்ஸ் பக்கத்தில்,“அரசியலில், ஒரு கட்சியின் கூட்டணி, ஒப்பந்தங்கள், பிளவுகள் இருப்பது மிகவும் சாதாரணமானது. இதை அரசியலமைப்பும் அங்கீகரித்திருக்கிறது.

கங்கனா ரனாவத்

காங்கிரஸ் கட்சி 1907-ல் பிளவுபட்டது. 1971-ல் மீண்டும் ஒரு பிளவு ஏற்பட்டது. தெரியாமல் கேட்கிறேன்… ஒரு அரசியல்வாதி அரசியல் செய்யாமல் பானிபூரியா விற்பார். சங்கராச்சாரியார் தனது வார்த்தைகளையும் அவரது செல்வாக்கையும் மதக் கல்வியையும் தவறாகப் பயன்படுத்தியுள்ளார். ராஜாவே தனது குடிமக்களை சுரண்டத் தொடங்கினால், தேசத் துரோகமே இறுதி மதம் என்று இந்து மதம் கூறுகிறது.

நமது மகாராஷ்டிர முதலமைச்சருக்கு எதிராக தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தி நம் அனைவரின் உணர்வுகளையும் சங்கராச்சாரியார் புண்படுத்தியுள்ளார். துரோகி என ஏக்நாத் ஷிண்டேவை குறிப்பிடுவதன் மூலம் சங்கராச்சாரியார் இந்து மதத்தின் கண்ணியத்தை அவமதிக்கிறார்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.