தமிழகத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகளின் படுகொலைகளைத் தொடர்ந்து கடந்த சில நாள்களாக போலீஸ் தரப்பில் என்கவுன்ட்டர் உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகள் மேகொள்ளப்பட்டுவருகிறது. குறிப்பாக, சென்னை மாநகராட்சி காவல் ஆணையராக அருண் ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்ட பிறகு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ரௌடிகள் ஒழிப்பில் காவல்துறை கடந்த சில நாள்களாக தீவிரம் காட்டி வருகிறது.
அந்த வரிசையில், ரௌடிகள் ஒழிப்பு தனிப்படை போலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், புழல் அருகே பதுங்கியிருந்த பிரபல ரௌடி சேது என்கிற சேதுபதியை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். அதுவும், ரௌடிகள் ஒழிப்பு தனிப்படை போலீஸாரைக் கண்டவுடன் ரௌடி சேதுபதி தப்பியோட முயன்றதும், துப்பாக்கி முனையில் வைத்து போலீஸார் கைதுசெய்தனர்.
A+ ரௌடியான சேதுபதி மீது 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. கடந்த ஆண்டு சோழவரம் அருகே என்கவுன்ட்டர் செய்யப்பட்ட பிரபல ரௌடி முத்து சரவணனுக்கு எதிர் தரப்பாக செயல்பட்ட நபர் இந்த சேதுபதி என்பது குறிப்பிடத்தக்கது.
சேதுபதியை போலீஸார் தற்போது ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் மட்டுமல்லாது, சேதுபதியுடன் இருந்த அவரின் கூட்டாளி பிரபு என்கிற ரௌடியும் போலீஸாரால் ரகசிய இடத்தில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.