மக்களவை தேர்தலில் பா.ஜ.க-விற்கு உத்தரப்பிரதேசம் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. மொத்தமுள்ள 80 தொகுதியில் பா.ஜ.க வெறும் 36 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் பா.ஜ.க-விற்கு அறுதிப்பெரும்பான்மை கிடைக்காமல் போய்விட்டது. சமாஜ்வாடி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டியது, மத்திய பட்ஜெட்டில் உத்தரப்பிரதேசத்தில் பல ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்தும் தேர்தலில் தோல்வி அடைந்திருப்பது பா.ஜ.க தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் விரைவில் சட்டமன்றத்தில் காலியாக இருக்கும் 10 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் அதற்கான வேலையில் பா.ஜ.க இப்போதே ஈடுபட ஆரம்பித்துள்ளது.

மற்றொரு புறம் முதல்வர் யோகி ஆதித்யநாத் செயல்படும் விதம் காரணமாகத்தான் மக்களவை தேர்தலில் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டதாக தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த வாரம் உத்தரப்பிரதேச பா.ஜ.க செயற்குழுக்கூட்டம் நடந்தது. இதில் பேசிய துணை முதல்வர் கேசவ் பிரசாத், அரசை விட கட்சிதான் முக்கியம் என்று பேசினார். இதில் பேசிய யோகி ஆதித்யநாத், அளவுக்கு அதிகமான நம்பிக்கை காரணமாகத்தான் தேர்தலில் தோல்வி ஏற்பட்டதாக தெரிவித்தார்.
முதல்வர் ஆதித்யநாத்திற்கும், துணை முதல்வர் கேசவ் பிரசாத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து கேசவ் பிரசாத் டெல்லி சென்று பா.ஜ.க தலைவர் ஜெ.பி.நட்டாவை சந்தித்து இது குறித்து பேசினார். இப்பேச்சுவார்த்தையில் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் குறித்து பேசப்பட்டதாக கூறப்பட்டாலும், உண்மையில் முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு எதிராக புகார்களை தெரிவிக்க இச்சந்திப்பு நடந்ததாக தெரிகிறது. இது தவிர உத்தரப்பிரதேச பா.ஜ.க தலைவர் புபேந்திர செளதரியும் டெல்லியில் தனியாக பா.ஜ.க தலைவர் நட்டாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக தெரிவித்தார். உத்தரப்பிரதேச பா.ஜ.கவிற்கும், மாநில அரசுக்கும் இடையேயும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இக்கருத்து வேறுபாடுகளை களையே இச்சந்திப்புகள் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

இச்சந்திப்பை தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா இப்பிரச்னை குறித்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியிருக்கிறார். உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க நிர்வாகிகள் மட்டத்தில் பெரிய அளவில் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உத்தரப்பிரதேச அமைச்சரவையிலும் மாற்றம் செய்யப்பட இருக்கிறதாம். ஆனால் முதல்வரை மாற்றுவது குறித்து விவாதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எந்த முடிவாக இருந்தாலும் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடக்கும் இடைத்தேர்தல் முடிவுகள் வெளி வந்த பிறகுதான் நடைபெறும் என்று பா.ஜ.க தலைவர்கள் தெரிவித்தனர். தற்போது உத்தரப்பிரதேச பா.ஜ.க தலைவராக இருக்கும் உபேந்திர செளதரி ஜாட் சமுதாயத்தை சேர்ந்தவர். எனவே அவரை மாற்றிவிட்டு இதர பிற்படுத்தப்பட்ட ஒருவரை தலைவராக நியமிப்பது குறித்து பா.ஜ.க பரிசீலித்து வருகிறது. 2027-ம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள இதர பிற்படுத்தப்பட்ட ஒருவரை தலைவராக்கினால் கட்சி எளிதாக தேர்தலை சந்திக்க முடியும் என்று பா.ஜ.க தலைவர்கள் கருதுகின்றனர்.

முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று தனது அமைச்சரவை சகாக்களை அழைத்து இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் குறித்து ஆலோசித்துள்ளார். வெற்றி பெறக்கூடிய மற்றும் கரைபடியாத வேட்பாளர்களை தேர்வு செய்யும்படியும், கட்சி செயற்குழு உறுப்பினர்கள் கட்சியின் உள்ளூர் நிர்வாகிகளுடன் தொடர்பில் இருக்கும்படியும் கேட்டுக்கொண்டார். அனைத்து அமைச்சர்களும் தங்களது தொகுதிக்கு சென்று மக்களின் மனநிலை குறித்து தெரிந்து கொண்டு வந்து அறிக்கை தாக்கல் செய்யும்படி முதல்வர் யோகி கேட்டுக்கொண்டுள்ளார். ஏற்கனவே சமீபத்தில் நடந்த 13 தொகுதிக்கான இடைத்தேர்தலில் பா.ஜ.க வெறும் 2 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. எனவே 10 தொகுதிக்கான இடைத்தேர்தலில் பா.ஜ.க கூடுதல் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது.