அமெரிக்காவில், ஹோட்டல் நிறுவனமொன்றில் வேலைக்கு ஆள் எடுப்பதில் இனப்பாகுபாடு காட்டப்படுவதாக 27 வயது கறுப்பின இளைஞர் ஒருவர் வழக்கு தொடுத்திருக்கிறார். இது குறித்த தகவலின்படி, அமெரிக்காவின் மிக்சிகன் (Michigan) மாகாணத்தில் டெட்ராய்ட் (Detroit ) நகரத்தில் வசிக்கும் ட்வைட் ஜாக்சன் (Dwight Jackson), ஷினோலா ஹோட்டல் (Shinola Hotel) நிறுவனத்தில் வரவேற்பாளர் (Receptionist ) வேலைக்கு கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரை பலமுறை விண்ணப்பித்திருக்கிறார்.

ஆனால், ஒருமுறைகூட ஹோட்டல் தரப்பிலிருந்து இன்டெர்வியூவுக்கு அழைக்கப்படவில்லை. இதில் விரக்தியடைந்த ட்வைட் ஜாக்சன், தான் ஏற்கெனவே விண்ணப்பத்திருந்த படிவங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் அதே பணி அனுபவம், முகவரி உள்ளிட்டவற்றோடு தனது பெயரை மட்டும் மாற்றி வெள்ளையினத்தவர்களுடன் தொடர்புடைய பெயரில் வேலைக்கு மீண்டும் விண்ணப்பித்திருக்கிறார். அடுத்த ஒரே வாரத்தில், இன்டெர்வியூக்கு வருமாறு ட்வைட் ஜாக்சனுக்கு ஹோட்டல் நிறுவனம் தரப்பிலிருந்து அழைப்பு வந்திருக்கிறது. அதன்படி, இன்டெர்வியூவில் பங்கேற்ற அந்த இளைஞனை நேரடியாக அவரின் இனத்தைக் குறிப்பிடாமல், இந்தப் பணிக்குத் தாங்கள் தகுந்த ஆள் கிடையாது என ஹோட்டல் நிர்வாகம் நிராகரித்திருக்கிறது.
இதன்மூலம், இனப்பாகுபாடு காட்டப்படுவதைக் கண்டறிந்த ட்வைட் ஜாக்சன், மிச்சிகனின் எலியட் லார்சன் சிவில் உரிமைகள் சட்டம் மீறப்படுவதாக ஹோட்டல் நிறுவனத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதுகுறித்து பேசிய ட்வைட் ஜாக்சனின் வழக்கறிஞர் ஜான் மார்கோ (Jon Marko), “2024-ல் உங்கள் சொந்த ஊரில் உங்களின் தோலின் நிறத்தால் வேலை மறுக்கப்படுவது பணத்துக்கு அப்பாற்பட்டது. இது, அவர்களின் எண்ணத்திலிருங்கிது வருகிறது” என்றார். அதோடு, இந்த ஹோட்டல் நிறுவனத்தின் மூலம் இனப்பாகுபாட்டுக்கு ஆளானவராக நம்பும் எவரும் இந்த வழக்கில் தங்களை இணைத்துக்கொள்ளலாம் என்றும் ஜான் மார்கோ தெரிவித்திருக்கிறார்.

இன்னொருபக்கம், இதற்குப் பதிலளித்திருக்கும் ஷினோலா ஹோட்டலின் பார்ட்னர் அன்னா ஸ்டான்சியோஃப், “எந்தவொரு பாகுபாட்டையும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். எனவே, இந்தக் குற்றச்சாட்டை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். அனைவரும் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புடைய பணியிடத்தை உருவாக்க நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம். அதுமட்டுமல்லாமல், சமூகத்தைப் பிரதிபலிக்கும் பலதரப்பட்ட பணியாளர்களை உருவாக்க எங்களை நாங்கள் அர்ப்பணித்திருக்கிறோம்” என்றார்.