கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமியுடன் ஆனந்த விகடன் இணைந்து ஜூலை 21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதுரையில் ‘UPSC/TNPSC Group I,II தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி?’ என்கிற இலவசப் பயிற்சி முகாமை நடத்துகிறது.

உயர்கல்வி பயிலும் மாணவர்கள் அரசு நடத்தும் முக்கியமான போட்டித் தேர்வுகளை எழுதி வெற்றி பெற ஆனந்த விகடன், கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமியுடன் இணைந்து பல ஆண்டுகளாக இது பற்றிய முகாம்களை நடத்தி வருகிறது.
மதுரையில் வருகின்ற ஜூலை 21-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதுரை தமுக்கம் அருகிலுள்ள அமெரிக்கன் கலை அறிவியல் கல்லூரியில் நடத்தப்படும் இலவச பயிற்சி முகாமில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா இ.ஆ.ப அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா தென்காசி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்து குரூப் -1 தேர்வில் வெற்றி பெற்று, பல்வேறு அரசுப் பணிகளில் சிறப்புடன் செயலாற்றி தற்போது மதுரை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வருகிறார்.

தென்காசி மாவட்டம் பாவூர் சத்திரம் அருகிலுள்ள திப்பணம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த சௌந்தரபாண்டியன் – சொர்ணம் தம்பதியின் மகள் சங்கீதா. சௌந்தரபாண்டியன் அஞ்சல்துறையில் அலுவலராக பணியாற்றியவர். கிராமிய சூழலில் பிறந்த வளர்ந்த சங்கீதா பின்பு பாளையங்கோட்டை ஜெயந்திரா பள்ளியில் 10-ஆம் வகுப்பு வரை படித்தார். சாராள் தக்கர் பள்ளியில் மேல்நிலைக்கல்வியை கற்றவர், பின்பு சென்னையில் இளங்கலை பட்டம் பெற்று சென்னை பல்கலைக்கழகத்தில் உளவியலில் உயர்கல்வி பட்டம் பெற்றார்.
அப்போதே டி.என்.பி.எஸ்.சி-யின் குரூப் -1 தேர்வுக்குத் தயாராகி வந்தவர் அத்தேர்வை எழுதி வெற்றி பெற்றார். திருவண்ணாமலை மாவட்டத்தில் துணை ஆட்சியராகப் பயிற்சி எடுத்தவர். அடுத்து திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வருவாய் கோட்டாட்சியர், தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலராக சிறப்பாகச் செயல்பட்டார். அதைத்தொடர்ந்து சென்னையில் வீட்டு வசதி வாரியம், மாவட்ட வருவாய் அலுவலர், தமிழ்நாடு சுகாதார அமைப்புகள் திட்டம் போன்றவற்றில் பணியாற்றியவர். 2016-ல் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கான தகுதியைப் பெற்றார். பின்பு வணிக வரித்துறையில் இணை ஆணையராகச் சிறப்பாகச் செயல்பட்டதால் மதுரை மாவட்டத்தின் 3-வது பெண் மாவட்ட ஆட்சியராகக் கடந்த ஆண்டு மே மாதம் பதவியேற்றார்.
மதுரையில் பொறுப்பேற்ற மா.சௌ.சங்கீதா, ஏழை எளிய மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுவதிலும், விவசாயிகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகளின் நலனிலும் அதிக அக்கறை கொண்டு செயலாற்றி வருகின்றார்.
ஆட்சியராகப் பொறுப்பேற்ற சில நாட்களில் வாடிப்பட்டி பகுதிக்கு விசிட் சென்றவர் அங்குத் தரமற்ற முறையில் சாலை அமைக்கும் பணி நடைபெற்றதைக் கண்டு உடனே அதிகாரிகளைக் கடுமையாகக் கண்டித்து அப்பணியைத் தரமாக நடைபெற உத்தரவிட்டார்.
அதுபோல் மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்துக்குத் தாமதமாக வந்த கீழ் நிலை முதல் உயர் நிலை அதிகாரிகள் வரை அனைவரையும் கூட்ட அரங்கின் வெளியில் காத்திருக்க வைத்து பின்பு வருத்தம் தெரிவித்து தன்னிலை விளக்கம் கொடுத்த பின்பு அனுமதித்த சம்பவம் மக்கள் மத்தியில் பாராட்டப்பட்டது.

மாவட்டத்தில் பொதுமக்கள் பாதிக்கப்படும் எந்தவொரு சம்பவத்திலும் நேரடியாகச் சென்று தீர்த்து வைப்பது மட்டுமின்றி, அதிகாரிகளையும் அதற்கு முக்கியத்துவம் அளிக்க உத்தரவிட்டு வரும் மக்களுக்கான ஆட்சியர் மா.சௌ.சங்கீதா இ.ஆ.ப அவர்கள் வருகின்ற 21-ஆம் தேதி ஆனந்த விகடன், கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமியுடன் இணைந்து மதுரையில் நடத்தும் IAS/TNPSC Group I,II தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி? என்கிற பயிற்சி முகாமில் உங்களுடன் பேச உள்ளார். இதில் கலந்துகொள்ள கீழ்கண்ட விண்ணப்பத்தில் பதிவு செய்யவும்.