அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 5-ம் தேதி அதிபா் தோ்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமாக நடந்துவரும் நிலையில், ஜோ பைடன் – டொனால்ட் ட்ரம்ப் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிரசாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்ற 20 வயது இளைஞர், ட்ரம்பை துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்யும் முயற்சியில் ஈடுபட்டார்.
பாதுகாவலர்களின் உடனடி நடவடிக்கையால் ட்ரம்ப்பின் உயிர் பாதுகாக்கப்பட்டு, கொலை முயற்சியில் ஈடுபட்ட தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் சம்பவ இடத்தில் வைத்து ஸ்னைப்பர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து, ட்ரம்ப் பாதுகாப்பில் மெத்தனம் இருப்பதாக அமெரிக்க அரசின்மீது குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக பதிலளித்துப் பேசிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு அதிகாரி, “ட்ரம்ப்பின் உயிருக்கு இரானால் அச்சுறுத்தல் இருப்பது குறித்து அமெரிக்க ரகசிய அமைப்பு தகவலளித்தது.
அதனடிப்படையில், ட்ரம்ப்புக்கு எதிர் தாக்குதல் நடத்தும் பாதுகாப்பு பணியாளர்கள், ட்ரோன் கண்காணிப்பு, ரோபோ நாய்கள் ஆகியவை மூலம் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து புதிய அச்சுறுத்தல் தகவல்களால், தேவையான ஆதாரங்களை திரட்டி தேவையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
2020-ம் ஆண்டு இராக்கில், இரான் குட்ஸ் படையின் தளபதி காசிம் சுலைமானியை ட்ரோன் தாக்குதல் மூலம் படுகொலை செய்ய உத்தரவிட்டதிலிருந்து ட்ரம்ப் மற்றும் அவரது முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தொடர் அச்சுறுத்தல் இருப்பதாக இரான் மீது குற்றம்சாட்டப்படுகிறது.
ஆனால், ஐ.நா சபையின் இரானிய தூதுக்குழு, “எங்கள் மீது அமெரிக்காவால் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகிறது. ஆனால், ட்ரம்ப் ஒரு குற்றவாளி, அவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட வேண்டியவர்தான்” எனக் குறிப்பிட்டிருக்கிறது.