அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கிறது. இதையொட்டி பிரசாரம் செய்த டிரம்பை படுகொலை செய்ய அவர் மீது ஸ்னைப்பர் துப்பாக்கிச் சூடு நடந்தது.
தொடர்ந்து இரண்டு, மூன்று முறை துப்பாக்கிக் குண்டுகள் டிரம்ப்பை நோக்கிப் பாய்ந்தன. நல்வாய்ப்பாக, டிரம்ப் தன் தலையைத் திருப்ப, அவரது தலையை நோக்கி வந்த துப்பாக்கிக் குண்டு டிரம்பின் காதை மட்டும் லேசாகக் கிழித்துச் சென்றுவிட்டது. நூழிலையில் உயிர் தப்பினார் டிரம்ப். துப்பாக்கிக் குண்டு சத்தம் கேட்டு அக்கூட்டத்தில் இருந்த பலரும் அலறி அடித்து ஓட, இந்த நெரிசலில் பலரும் காயமடைந்தனர். குடும்பம், குழந்தையுடன் வந்திருந்த பலரும் பறிதவித்துப் போயினர். இந்த சம்பவத்தில் முதற்கட்ட விசாரணையில் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் (20) என்று கூறப்படுகிறது.
இச்சம்பவத்தின்போது குடும்பத்துடன் இப்பிரச்சாத்திற்கு வந்து முதல் வரிசையில் நின்று டிரம்பின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தத் தீயணைப்பு வீரரான கோரி கம்பேரடோரியின் மீது துப்பாக்குக் குண்டு பட்டதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தன் மனைவியை நோக்கி வந்த துப்பாக்கிக் குண்டை தன் மீது வாங்கி மனைவியைக் காப்பாற்றிவிட்டு உயிரிழிந்திருக்கிறார் கோரி கம்பேரடோர் (50).
கோரி கம்பேரடோரின் இந்தத் தியாகச் செயலைக் கேட்டு பலரும் அவருக்காக அஞ்சலி செலுத்தி, அவரது இரண்டு குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்காக நிதி திரட்டி வருகின்றனர். கோரி கம்பேரடோரின் குடும்பத்திற்கு அன்பும், ஆதரவும் குவிந்து வருகின்றன. தீயணைப்பு வீரராகப் பணியாற்றி வந்த அவரது இந்தத் தியாகச் செயலைப் பாராட்டி அவர் பயன்படுத்திய பொருட்களைப் பாதுகாத்து நினைவாக என்றும் வைக்கவுள்ளனர் பென்சில்வேனியா தீயணைப்புத் துறையினர்.
கோரி கம்பேரடோரின் இந்தத் தியாகச் செயல் பற்றிக் கூறும் அவரது மனைவி ஹெலன் கம்பேரடோர், “அவர் என்னுடைய ஹீரோ. குண்டு பாய்ந்து உயிரிழக்கும் முன் அவர் என்னிடம் சொல்லிய கடைசி வார்த்தை, ‘நிற்காதே, கீழே உட்கார்ந்து கொள்’ என்பதுதான். என்னைக் காப்பாற்றிவிட்டு அவர் உயிரிழந்துவிட்டார்” என்று கூறியிருக்கிறார். மேலும், ஜோ பைடன் பற்றி அதிருப்தியுடன் பேசியிருக்கும் அவர், ” ஜோ பைடன் ஆறுதல் கூறுவதற்காக என்னைத் தொடர்பு கொண்டு பேச விரும்புவதாகக் கூறினார்கள். அவருடன் நான் இதுவரை பேசவுமில்லை. பேசப்போவதுமில்லை. என் கணவர் அதை ஒருபோதும் விரும்பமாட்டார்” என்று கூறியிருக்கிறார்.