`அஜித் பவார் மீண்டும் உங்களிடம் வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா…’ – சரத் பவார் அளித்த பதில் என்ன?

தேசியவாத காங்கிரஸ் கட்சி கடந்த ஆண்டு இரண்டாக உடைந்தபோது 40 எம்.எல்.ஏ-க்கள் அஜித் பவார் தலைமையிலான அணிக்கு சென்றனர். இதனால் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியை தேர்தல் கமிஷன் உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சியாக அங்கீகரித்துள்ளது. எனவே கட்சியின் நிறுவனர் சரத் பவார் வேறு கட்சி மற்றும் சின்னத்தை தேர்வு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். புதிய சின்னத்துடன் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்கள் சரத் பவார் அணிக்கு வர ஆரம்பித்துள்ளனர். புனே பிம்ப்ரி-சிஞ்ச்வாட் பகுதியை சேர்ந்த அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் நான்கு பேர் மற்றும் முன்னாள் கவுன்சிலர்கள் 20 பேர் சரத் பவார் அணியில் இன்று சேர்ந்தனர். அவர்களில் இரு முன்னாள் மேயர்கள் ஆவர்.

அவர்களை சரத் பவார் கட்சிக்கு வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய சரத் பவாரிடம் அஜித் பவார் மீண்டும் உங்களிடம் வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா என்று பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த சரத் பவார், ”அனைவருக்கும் வீட்டில் இடமுண்டு. ஆனால் கட்சியை பொறுத்தவரை நான் தனிப்பட்ட முறையில் முடிவு எடுக்க முடியாது. என்னுடன் இருப்பவர்களிடம் கலந்து ஆலோசித்த பிறகுதான் முடிவு எடுக்கப்படும்”என்று தெரிவித்தார். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் அஜித் பவார் ஆதரவாளர்கள் அணி மாறி இருப்பது அவருக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. புனேயில் தான் அஜித் பவாருக்கு அதிக செல்வாக்கு இருப்பதாக கருதினார். ஆனால் அதற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் சரத் பவார் அளித்திருந்த பேட்டியில், ”கட்சியை பலவீனப்படுத்தவேண்டும் என்று நினைப்பவர்களை மீண்டும் கட்சிக்கு எடுத்துக்கொள்ள மாட்டோம். ஆனால் கட்சியின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தாத தலைவர்களை ஏற்றுக்கொள்வோம்” என்று குறிப்பிட்டு இருந்தார்.