திருப்பூர் வீரபாண்டி குப்பாண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஸ்ருதி. மளிகைக் கடை நடத்தி வருகிறார். சில மாதங்களுக்கு முன் கடையில் இருந்த ஸ்ருதியிடம், பொருள்கள் வாங்க வந்த, ஒரு தம்பதி நன்றாகப் பழகியுள்ளனர். சில நாள்கள் கழித்து தங்களிடம், ஒரு கிலோ தங்க கட்டியுள்ளது என்றும், குறைந்த விலைக்கு தருவதாகவும் கூறியுள்ளனர்.
தங்க கட்டியை ஸ்ருதியிடம் காட்டியதுடன், அவரை நம்ப வைக்க அந்த தங்க கட்டியில் இருந்து, சிறிய துண்டை மட்டும் வெட்டி கொடுப்பதாக தெரிவித்தனர். இதற்கு சம்மதித்த ஸ்ருதி, தம்பதி கொடுத்த சிறிய துண்டை கடைக்குச் சென்று பரிசோதனை செய்தபோது, அது தங்கம் என்பது தெரிந்தது.
இதை நம்பி, ஒரு கிலோ தங்க கட்டியை வாங்க முடிவு செய்த ஸ்ருதி, தனது கணவரிடம் தெரிவித்தார். ரூ.13 லட்சம் கொடுத்து ஒரு கிலோ தங்க கட்டியை வாங்கியுள்ளார் ஸ்ருதி. தொடர்ந்து, தங்க கட்டியை கடையில் விற்க கொண்டு சென்றபோது, அது தங்கம் இல்லை என்பதும் அது முழுவதும் பித்தளை என்பதும் தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில், வீரபாண்டி போலீஸார் விசாரித்தனர்.
பல்வேறு கட்ட விசாரணைக்கு பின், பல்லடத்தில் அந்த தம்பதி பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக, இரு தம்பதிகளை போலீஸார் பிடித்து, விசாரணை மேற்கொண்டனர். அதில் பித்தளைக்கு தங்க முலாம் பூசி தங்கம் என்று ஏமாற்றி விற்பனை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக, ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த ரவி அவரது மனைவி துர்கா, முனுசாமி, அவரது மனைவி குமாரி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆறு கிலோவுக்கு தயாராக வைத்திருந்த போலி தங்க கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.