“யாரும் புகார் அளிக்க வேண்டாம்” திசை திருப்பும் நியோமேக்ஸ் கும்பல்… முதலீட்டாளர்களே உஷார்…!

அதிக லாபம் தருவதாக கூறி மதுரை, திண்டுக்கல், தேனி, திருச்சி, தஞ்சை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி என தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் மக்களிடம் முதலீடுகளை பெற்று, பல்லாயிரம் கோடி அளவில் மதுரையை தலைமையிடமாகக் கொண்ட நியோமேக்ஸ் நிறுவனம் மோசடி செய்தது.

Neomax | நியோமேக்ஸ் வழக்கு

தங்களை ஏமாற்றி விட்டதாக நியோமேக்ஸ் மற்றும் அதன் சார்பு நிறுவனங்கள் மீது மதுரை, திருச்சியிலுள்ள பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையில் ஆயிரக்கணக்கான பேர் புகார் அளித்ததால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நியோமேக்ஸ் நிறுவன இயக்குநர்களும், பங்குதாரர்களுமான கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன், கபில், வீரசக்தி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு தற்போது நிபந்தனை ஜாமினில் உள்ளனர்.

நியோமேக்ஸுக்கு எதிரான முக்கிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, “பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் பாதிக்கப்பட்டவர்களை முழுவதுமாக கண்டறியும் விதமாக செய்தித்தாள்களில் விளம்பரம் செய்ய வேண்டும். மக்களிடம் புகார்களைப் பெற்று இந்த வழக்கு விசாரணையை 15 மாதங்களில் முடித்து சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய வேண்டும், மோசடி செய்தவர்களின் சொத்துக்களை கண்டறிந்து மொத்தமாக வழக்கில் இணைத்து அவற்றை விற்பனை அல்லது ஏலத்தில் விட்டு, அந்த தொகையை சிறப்பு நீதிமன்றத்தில் முறையான அனுமதி பெற்று முதலீடு செய்தவர்களுக்கு வழங்குவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டார்.

இந்தச் சூழலில் கடந்த 14-ஆம் தேதி மதுரை விரகனூரில் தனியார் மண்டபத்தில் ‘நியோமேக்ஸ் மூத்த குடிமக்கள் முதலீட்டாளர்கள் நலச்சங்கம்’ என்ற பெயரில் கூட்டம் நடைபெற்றது.

நியோமேக்ஸ்

இந்தக் கூட்டத்திற்கு தமிழகத்தின் பல பகுதிகளிலுமிருந்து 1200-க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் முதலீட்டாளர்கள் வருகை தந்திருந்தனர். அக்கூட்டத்தில் பேசிய சிலர், “நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்த மூத்த குடிமக்கள் யாரும் தயவு செய்து தற்கொலை செய்து கொள்ள வேண்டாம், சிலர் தற்கொலை செய்யக்கூடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. நிறுவன இயக்குநர்களான பாலகிருஷ்ணன், கமலக்கண்ணன் ஆகியோர் நமது பணத்தை திரும்ப ஒப்படைப்பதாக தெரிவித்துள்ளனர். எனவே உங்களுடைய மூதலீடுகளை நாங்கள் பெற்றுத்தருகிறோம். நிறுவனத்திற்கு எதிராக யாரும் புகார் அளிக்க வேண்டாம், புகார் அளித்தால் பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்” என பேசியுள்ளனர்.

“நியோமேக்ஸ் மூத்த குடிமக்கள் முதலீட்டாளார்கள் நலச்சங்கம்” என்ற பெயரில் ஆரம்பித்ததன் பின்னணியில் நியோமேக்ஸ் நிறுவனத்தினர் இருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் யாரும் புகார் கொடுக்க விடாமல் தடுக்க திட்டமிட்டிருப்பபதாகவும் சொல்லப்படுகிறது. நியோமேக்ஸ் மூத்த குடிமக்கள் முதலீட்டாளர் ஆலோசனைக் கூட்டத்தின் போது வருகை தந்த ஒவ்வொரு நபரிடமிருந்து ரூ.600 வசூலித்துள்ளனர். சங்கத்தின் சார்பில் ஒரு பார்ம் கொடுக்கப்பட்டு அதில் முதலீட்டாளர்களின் விவரங்கள், முதலீடு செய்த விவரங்கள், முதலீட்டுக்கு பணமாக வேண்டுமா ? நிலமாக வேண்டுமா என கேள்வி கேட்கப்பட்டிருந்தன. 15 மாதங்களில் விசாரணையை நடத்தி முடித்து முதலீட்டாளர்களுக்கு பணத்தை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், நிபந்தனை ஜாமீனில் உள்ளவர்கள் முதலீட்டாளர்கள் சங்கம் என்ற பெயரில் புகார்தாரர்களை திசை திருப்பும் முயற்சிகளில் ஈடுபடுவதாக சொல்லப்படுகிறது.

நியோ மேக்ஸ்’!

கூட்டத்திற்கு வந்த சிலர் நியோமேக்ஸ் இயக்குநர்கள் கமலக்கண்ணன், பாலகிருஷ்ணன் மூலம் மூத்த குடிமக்களின் பணத்தை பெற்று தந்து விடுவோம், யாரும் புகார் அளிக்க வேண்டாம் என்று வெளிப்படையாக உறுதியளித்துள்ளனர்.

“நியோமேக்ஸ் மோசடியை பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்து வரும்நிலையில், நியோமேக்ஸ் நிறுவனத்துக்கு ஆதரவாக நடக்கும் இதுபோன்ற கூட்டத்தை என்ன செய்யப்போகிறார்கள்” என்று முதலீட்டாளர்கள் பலரும் கேட்கிறார்கள்.