சேலம் மாநகர காவல் ஆணையரகத்தில் வெடிகுண்டு கண்டறியும் பிரிவில் (BDDS) சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் யோகாம்பாள். இவர் கடந்த 01.05.2024-ம் தேதி சேலம் மாநகர காவல் ஆணையரிடம் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில், “நான் எனது 2 பெண் குழந்தைகளுடன் சேலம் லைன்மேட்டில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறேன். சேலம் மாநகர காவல் ஆயுதப்படையில் வாகனப்பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றக்கூடிய பாஸ்கரன் என்பவர் கடந்த 6 வருடத்திற்கு முன் தான் ஏலச்சீட்டு நடத்துவதாகவும், அதில் பல காவல்துறை அதிகாரிகளும் இருப்பதாக கூறினார். அதனை நம்பி நானும் பணத்தை கட்டத்தொடங்கினேன். அப்படி ரூ.23,75,000 கட்டியுள்ளேன்.
இதில், எனது அம்மா, அக்கா மற்றும் எனது உறவினர்களும் எனது மூலமாக சீட் போட்டார்கள். ஆனால் அவர் எல்லோரிடமும் பணத்தை பெற்றுக்கொண்டு கடைசியில் சீட் நடத்தமுடியவில்லை என்று கூறிவிட்டார். கட்டிய பணத்தை திரும்பக் கேட்டதற்கு, இதோ தருகிறேன், நாளை தருகிறேன் என்றவர் ஒருகட்டத்தில் எங்களுக்கு பணத்தை கொடுத்துவிட்டதாக பொய் சொல்ல ஆரம்பித்துவிட்டார். அதுமட்டுமல்லாது பணத்தை கேட்டு வீட்டுக்கு சென்றால், கணவன், மனைவி மிரட்டுவதுடன் ரோட்டில் செல்லும்போது அடியாட்களை கொண்டும் மிரட்டுகிறார். எனக்கு வேறு வழி தெரியாமல் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் அதற்கு இதுவரையிலும் மனு ரசீதுகூட வழங்கவில்லை. எனவே காவல் ஆணையாளர் அவர்கள் என்னுடைய பணத்தை மீட்டு தர வேண்டும்” என்று புகார் அளித்திருந்தார்.

இது குறித்து சிறப்பு உதவி ஆய்வாளர் யோகாம்பாளிடம் பேசியபோது, “நான் கொடுத்த புகாரை மாநகர மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றி காவல் ஆணையாளர் உத்தரவிட்டார். ஆனால் அங்கேயும் ஒவ்வொரு மாதமாக கால அவகாசம் கேட்டு, கடைசியில் `பணத்தை தரமுடியாது உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள்’ என்று அதிகாரிகள் முன்பாகவே என்னை மிரட்டுகிறார்ம் பாஸ்கரன்” என்றார்.
மேலும் சேலம் மாநகர காவல்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, “சம்பந்தப்பட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பாஸ்கரன், மாநகர காவல் துணை ஆணையாளர்கள் இல்லத்திற்கு எதிரே தான் அலுவலகம் போட்டிருந்தார். இதுபோன்று பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்று ஏமாற்று வேலையிலும் ஈடுபட்டுள்ளார். இவரிடம் பலர் சீட்டு பணம் போட்டு திரும்பப் பெற முடியாமல் இருந்து வருகின்றனர். மேலும் தனது பதவி உயர்வுக்கு எந்தவித பாதிப்பும் வந்துவிடக் கூடாது என பணம் தருகிறேன்… தருகிறேன் என இழுத்தடித்து வருகிறார்” என்றனர்.
இது குறித்து குற்றம்சாட்டப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் பாஸ்கரனிடம் பேசியபோது, “நான் சீட் ஏதும் நடத்தவில்லை. என்மீது தவறான புகாரினை மத்திய குற்றப்பிரிவில் வழங்கியுள்ளார். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.