`ஆம்ஸ்ட்ராங் கொலை; முக்கிய குற்றவாளியை அவசரமாக என்கவுன்ட்டர் செய்தது ஏன்?’ – அண்ணாமலை கேள்வி!

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 122 -வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த பா.ஜ.க-வின் மாநில தலைவர் அண்ணாமலை, அதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

விவசாயிகள் கௌரவ நிதி திட்டத்தில் :

“கணக்கெடுப்பின்படி 29.38 லட்சம் விவசாயிகள் தமிழகத்தில் உள்ளார்கள். இதில், 30 லட்சம் விவசாயிகள் சிறு குறு விவசாயிகள் என்கிற திட்டத்தின் கீழ் வருகிறார்கள். கிசான் திட்டத்தை பிரதமர் கொண்டு வந்தபோது, ஏறத்தாழ 43 லட்சம் விவசாயிகள் தமிழகத்தில் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் அளிக்கப்படுகிறது. தற்போது இந்த திட்டத்தில் படிப்படியாக குறைந்து 21 லட்சம் விவசாயிகள் மட்டுமே பலனடைகிறார்கள். மீதமுள்ள 23 லட்சம் விவசாயிகள் எங்கே போனார்கள் என்பது தான் கேள்வி?. ஏற்கனவே, 2021-ல் மத்திய அரசு கணக்கெடுத்த போது பல லட்சம் போலி விவசாயிகள் பதிவு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. தி.மு.க அரசு பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளுக்கு கொடுக்கும் திட்டத்தை கிடைக்கக் கூடாது என்பதற்காக இது போன்ற ஒரு செயலை செய்து வருகின்றது. உடனடியாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தி சிறப்பு கூட்டம் ஒன்றினை ஏற்படுத்தி விவசாயிகளின் பிரச்னைகளை கேட்டு அறிய வேண்டும். விடுபட்ட விவசாயிகளிடம் காரணத்தை கேட்க வேண்டும். எங்களுக்கு கெட்டப் பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே நிறைய விவசாயிகளை தி.மு.க அரசு டெலிட் செய்து விட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மிகப்பெரிய போராட்டம் ஒன்றினை நடத்த திட்டமிட்டுள்ளோம். மேலும், தமிழக பா.ஜ.க சார்பில் விவசாயிகள் கணக்கெடுப்பு எடுத்து, அதனை பதிவு செய்து மேல் இடத்திற்கு அனுப்பி, இரண்டு வாரத்தில் தமிழக பா.ஜ.க சிறப்பு குறை தீர்ப்பு விவசாயிகள் கூட்டத்தை நடத்த உள்ளோம் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு முன்பாகவே மாநில அரசு கண்டுபிடித்துக் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆம்ஸ்ட்ராங் கொலை:

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை பொறுத்தவரை ஏற்கெனவே நாம் கூறி இருந்தும், என்கவுன்ட்டர் போன்ற இடத்திற்கு செல்லாமல் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று சொல்லியிருந்தோம். ஆனால், அவசர அவசரமாக என்கவுன்ட்டர் செய்ய வேண்டிய காரணம் என்ன?. மூன்று முக்கிய குற்றவாளிகளும் அவர்களாகவே வந்து சரணடைந்த நிலையில் சரணடைந்த குற்றவாளி எப்படி தப்பி ஓட முயற்சி செய்வார்…இதில் என்ன லாஜிக் உள்ளது?.

பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை

எந்த ஒரு வழக்காக இருந்தாலும் அது நீதிமன்றத்திற்கு செல்லும் போது தான் முழுமையான விவரங்கள் தெரியவரும். ஆம்ஸ்ட்ராங் விவகாரத்தை பொறுத்தவரை பல அரசியல் கட்சி தலைவர்கள் பல்வேறு விவரங்களை தெரிவித்து வரும் நிலையில், அவசர அவசரமாக என்கவுன்ட்டர் செய்ய திட்டமிட காரணம் என்ன?. ஒருவரை என்கவுன்ட்டர் செய்து விட்டால் அந்த குற்றச் சம்பவம் குறித்த வழக்கை முடித்து விடமுடியுமா?

காவிரி நீர் திறப்பு குறித்து :

மேக்கேதாட்டூவில் அணை கட்டக் கூடாது என்பதில் மத்திய அரசு தெளிவாக இருக்கிறது. ஆனால், கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்பதில் தெளிவாக உள்ளனர். இந்த விவகாரத்தில் விவசாயிகளிடம் நாங்கள் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருப்பது, இதில் மத்திய அரசு தரப்பில் பிரச்னை இல்லை என்பதையே. விவசாயிகள் இந்த போராட்டத்திற்கு எங்களுக்கும் அரைக்கூவல் விடுத்திருக்கிறார்கள். இது மிக மிக முக்கியமான பிரச்னை. எனவே, நாங்களும் இதில் கலந்து கொள்ள இருக்கிறோம். தமிழக முதலமைச்சர் மற்றும் தமிழக சட்டப்பேரவையில் உள்ள காங்கிரஸ் உறுப்பினர்கள் நேரடியாக சென்று சமரசம் பேசியாவது காவிரியில் தண்ணீரை கொண்டு வர வேண்டும். நதிநீர் பிரச்னை ஹரியானாவிர்க்கும், பஞ்சாப்பிற்கும் வந்தபோது ஹரியானா அரசை இந்திரா காந்தி டிஸ்மிஸ் செய்துவிட்டார். இதுவரை நரேந்திர மோடி அரசாங்கத்தில் 356 ஐ பயன்படுத்தவே இல்லை. ஒருவேளை நாம் கர்நாடகா மீது நடவடிக்கை எடுத்தால் இங்கு உள்ள தி.மு.க-வினர் என்ன சொல்வார்கள்…கண்டிப்பாக ஜனநாயகமா என கேட்பார்கள். இந்தியாவில் பல்வேறு இடங்களில் நதிநீர் பங்கீடு தொடர்பாக பிரச்னைகள் இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும் தான் இதை அரசியல் ஆக்கி வருகின்றனர். அனைத்துக் கட்சிக் கூட்டம் என்று தமிழகத்தில் கூட்டப்படுகிறது. இதில் அவர்களே ஒரு டிராப்ட் ஒன்றை கையில் கொண்டு வந்துவிட்டு வாருங்கள்.. அனைவரும் டெல்லி செல்லலாம் என்கிறார்கள். முதலமைச்சர் காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினால் அது ஆக்கபூர்வமாக இருக்க வேண்டும்” என்றார்.