திருப்பூர் தாராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் அரவிந்த் (29). மாட்டுத் தீவன விற்பனை நிலையம் வைத்துள்ள இவருக்கு, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் திருமண உதவி செயலி மூலம் ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சேர்ந்த சத்யா (30) என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். இருவரும் தொடர்ந்து பழகி வந்துள்ளனர். இதற்கிடையே சத்யாவின் உறவினரான தமிழ்ச்செல்வி என்பவரும் மகேஷ் அரவிந்துக்கு அறிமுகமாகி உள்ளார்.
இடையிடையே, மகேஷ் அரவிந்த் மற்றும் சத்யா அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். தொடர்ந்து தமிழ்ச்செல்வி மற்றும் சத்யா ஆகிய இருவரும், மகேஷ் அரவிந்திடம் பல்வேறு காரணங்களை கூறி அடிக்கடி பணம் பெற்று வந்துள்ளனர். அவரும் கேட்கும் போதெல்லாம் பணம் கொடுத்து வந்துள்ளார். இதனிடையே, மகேஷ் அரவிந்தும் சத்யாவும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்த நிலையில், கடந்த மாதம் 21ம் தேதி தொப்பம்பட்டியில் இருவருக்கும் தமிழ்ச்செல்வி திருமணம் செய்து வைத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து மகேஷ் அரவிந்த், சத்யாவை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அவரது உறவினர்கள் தாலிக்கொடி உள்பட 12 பவுன் தங்க நகைகளை சத்யாவுக்கு கொடுத்துள்ளனர். இதையடுத்து சத்யா அடிக்கடி பல ஆண்களுடன் செல்போனில் பேசியதாக தெரிகிறது. இதனால், அவரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த மகேஷ் அரவிந்த் அவரின் செல்போனை எடுத்துப் பார்த்துள்ளார். அப்போது அதில், ஆண்கள் சிலருடன் சத்யா நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் இருந்ததாக தெரிகிறது. இது குறித்து கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சத்யா திடீரென வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மகேஷ் அரவிந்த், இது குறித்து தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், `சத்யா என்னை திருமணம் செய்து ரூ.50 ஆயிரம் மற்றும் 12 பவுன் நகைகளை மோசடி செய்துவிட்டார். பலபேரை இதுபோல் ஏமாற்றி திருமணம் செய்துள்ளார் அவர். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். அதில், சத்யாவுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே சென்னையைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் முடிந்ததும் அதன் மூலம் ஒரு குழந்தை இருப்பதும் தெரியவந்தது. திருமணம் ஆகாத 40 வயதைக் கடந்த ஆண்களைக் குறிவைத்து சந்தியா மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். காவல் உதவி ஆய்வாளர், மதுரையில் ஒரு காவலர், கொடுமுடியில் ஒரு இளைஞர் என பலரை ஏமாற்றி திருமணம் செய்துள்ளது தெரியவந்தது.
அவர்களுடன் மனைவிபோல் சில மாதங்கள் வாழ்ந்துவிட்டு வேண்டுமென்றே தகராறில் ஈடுபட்டு நகை மற்றும் பணத்துடன் சந்தியா தலைமறைவாகிவிடுவார். இதுபோன்று பலரிடம் லட்சக்கணக்கில் பணத்தையும் பறித்ததும் தெரியவந்தது. இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில், தலைமறைவான சத்யாவை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். அதில், புதுச்சேரியில் பதுங்கி இருந்த சத்யாவை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது,
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88