விருதுநகர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் தனியார் இன்ஜினீயரிங் கல்லூரியில் காமராஜரின் 122-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என். ரவி பேசுகையில், “தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர் காமராஜர். ஆயிரக்கணக்கான பள்ளிகளை திறந்து, கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தியவர். தமிழகம் இன்றைக்கு கல்வியில் முன்னேறி இருப்பதற்கும், கல்வியறிவு பெற்றவர்களின் பட்டியலில் தமிழகம் முன்னணியில் இருப்பதற்கும் அடித்தளமிட்டவர் காமராஜர்தான். வெறுமனே கல்விக்கு மட்டுமல்லாமல் சமூக வளர்ச்சிக்கும் நிறைய பங்காற்றியுள்ளார். கல்வியில் மாணவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஊருக்கும் தொடக்கப் பள்ளியினை ஆரம்பித்ததோடு, 5 கிலோ மீட்டருக்கு ஒரு உயர்நிலைப் பள்ளியையும் திறந்துவைத்தார்.

சமூகநீதி மற்றும் பொறுப்புக்கு காமராஜரே அடிகோலிட்டவர். தமிழகத்தில் அவரது ஆட்சிக்காலம் பொற்காலமாகும். ஆனால் தற்போது, தமிழ்நாட்டில் சமூகநீதியைப் பற்றி பேச மட்டுமே செய்கிறார்கள். கடந்த ஆண்டில் செங்கல்பட்டு, விழுப்புரம் பகுதிகளில் கள்ளச்சாராயத்தினால் பலர் பலியானார்கள். ஆனால் அது குறித்த விசாரணையோ பாதிக்கப்பட்ட மக்களுக்கான சமூகநீதியோ பெற்று தரப்படவில்லை. தற்போது கள்ளக்குறிச்சி சம்பவத்தை அடுத்தே கிட்டத்தட்ட 14 மாதங்களுக்குப் பிறகு செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் பகுதிகளில் கள்ளச்சாராயத்தினால் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பான வழக்கிற்கு அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிரான இந்த பாகுபாடும் அலட்சியப்போக்கும் ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல” என பேசினார்.