கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்ஞத்தில் அதானி குழுமத்தால் சுமார் ரூ.7,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வர்த்தக துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது. உம்மன் சாண்டி முதல்வராக இருந்த காலத்தில் பணி தொடங்கப்பட்ட விழிஞ்ஞம் அதானி துறைமுகத்தின் பணி சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவந்தது.
மற்ற துறைமுகங்களில் இல்லாத பல விஷயங்கள் விழிஞ்ஞம் துறைமுகத்தில் உள்ளன. சர்வதேசக் கடல் பாதையில் இருந்து மிக அருகில் அதாவது, 11 நாட்டிக்கல் மைல் தூரத்தில் அமைந்துள்ளது இத்துறைமுகம். கடல் பாதைக்கு இவ்வளவு அருகில் நம் நாட்டில் வேறு துறைமுகங்கள் இல்லை என்கிறார்கள்.
மற்ற துறைமுகங்களை ஆழப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். ஆனால், விழிஞ்ஞம் துறைமுகம் இயற்கையாகவே 20 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளது. ஆண்டுக்கு 10 லட்சம் கண்டெய்னர்களைக் கையாளும் வகையில் முதற்கட்ட பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
இனி மொத்தம் உள்ள 4 கட்ட பணிகளும் நிறைவடைந்தபிறகு ஆண்டுக்கு 30 லட்சம் கண்டெய்னர்களைக் கையாளும் வகையில் அமைய உள்ளது. அதன்பிறகு ஒரே சமயத்தில் 5 பெரிய மதர் ஷிப்புகள் துறைமுகத்துக்குள் வர முடியும்.
துறைமுகத்துக்குள் வரும் கப்பல்கள் நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும். துறைமுகத்தில் இறக்கப்படும் கண்டெய்னர்களுக்கு கஸ்டம்ஸ் வரி செலுத்தவேண்டும். இதன் மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு வருவாய் வரும். விழிஞ்ஞம் துறைமுகம் மூலம் 5000-க்கும் மேற்பட்டோருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துறைமுகம் சம்பந்தப்பட்ட வேலைக்கான பயிற்சி அளிக்கும் நிறுவனம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கண்டெய்னர் பிசினஸ், தொழில் துறை, உற்பத்தித் துறை, போக்குவரத்து, சுற்றுலா என கேரள மாநில வளர்ச்சிக்கும் விழிஞ்ஞம் துறைமுகத் திட்டம் காரணமாக அமைய உள்ளது.
விழிஞ்ஞம் துறைமுகத்தில் முதல் கப்பலாக சீனாவில் இருந்து ஷென் ஹுவா-15 என்ற கப்பல் கடந்த அக்டோபர் மாதம் வந்தடைந்தது. அதற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது விழாவாக கொண்டாடப்பட்டது.
இதையடுத்து சார் பெர்னாண்டோ என்ற 350 மீட்டர் நீளம் கொண்ட கப்பல் நேற்று முன்தினம் விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு வந்தது. 1950 கண்டெய்னர்களை எடுத்துச்செல்லும் திறன் கொண்ட இந்த கப்பல் முதல் சரக்குக்கப்பல் என்ற வகையில் வரவேற்பு விழா மற்றும் துறைமுகத்துக்கான அதிகாரப்பூர்வமான செயல்பாடுகளுக்கான திறப்பு விழா ஆகியவை நேற்று விழிஞ்ஞம் துறைமுக வளாகத்தில் நடைபெற்றது. இதில் கேரளா மாநில துறைமுகத் துறை அமைச்சர் வாசவன் தலைமை வகித்தார். மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
விழிஞ்ஞம் துறைமுக செயல்பாடுகளைத் தொடங்கிவைத்து முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில், “நமது நீண்ட கால கனவு நனவாகி இருக்கிறது. துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் உந்து சக்தியாகும். விழிஞ்ஞம் துறைமுகத்தின் மூலம் இந்தியா உலக வரைபடத்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. திட்டத்தை நிறைவேற்ற ஒத்துழைத்த அதானிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சர்வதேச லாபிகளுக்கு எதிராக ஒருங்கிணைந்து போராடிய விளைவாக இந்த துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது. உலகத்தில் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றாக விழிஞ்ஞம் அமைந்துள்ளது. மிகப்பெரிய மதர் Top-up இன்னும் அதிகமாக வெளிநாட்டில் இருந்து இங்கு வரும்.
உலகின் மிகப்பெரிய கப்பல்களை விழிஞ்ஞம் துறைமுகத்தில் நிறுத்த முடியும். ட்ரையல் ரன் தொடங்கப்பட்டாலும் விழிஞ்ஞம் துறைமுகத்தில் அதிகாரப்பூர்வமான செயல்பாடுகள் இன்று முதல் தொடங்குகிறது. இது விரைவில் முழுமையான செயல்பாடாக மாறும்.
இது முதல் கட்டம் மட்டுமே, 2028-ம் ஆண்டுடன் விழிஞ்ஞம் துறைமுகம் முழுமையடைந்த துறைமுகமாக மாறும். பத்தாயிரம் கோடி ரூபாய் முதலீட்டிற்கு விழிஞ்ஞம் துறைமுகம் வழிவகுக்கும். அதற்கு வேண்டிய ஒப்பந்தத்திற்கு கையெழுத்து போட உள்ளேன். அதானி குழுமத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளோம்.
சுதந்திரத்துக்குப் பிந்தைய அரசு விழிஞ்ஞம் துறைமுகத்துக்காக கடுமையாக உழைத்துள்ளது. விழிஞ்ஞம் துறைமுக அனுமதிக்காக இடது ஜனநாயகம் முன்னணி கூட்டணி அரசு முயற்சித்தது. 2007-ல் விழிஞ்ஞம் இன்டர்நேஷனல் ஷிப்பிங் லிமிடெட்-ஐ (வி.ஐ.எஸ்.எல்) நோடல் ஏஜென்சி ஆக்கினோம். 2010 ஆம் ஆண்டு டெண்டர் நடவடிக்கைகளுக்கு முயற்சித்தோம். அப்போது சீனா கம்பெனி வந்ததாக சிலர் அதிருப்தி தெரிவித்தனர். அப்போது மத்திய மன்மோகன் சிங் அரசு அனுமதி அளிக்கவில்லை. இதை அடுத்து 212 நாட்கள் நீண்ட மக்கள் போராட்டத்தை நடத்தினோம். அதைத் தொடர்ந்து 2013-ம் ஆண்டு மீண்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. நாம் ஒன்றாக முயற்சித்து அதன் பலனாக இந்த துறைமுகம் நமக்கு கிடைத்துள்ளது” என்றார்.
விழிஞ்ஞம் துறைமுகம் இந்தியத் துறைமுகங்களில் முக்கியமானதாக மாறும் என எதிர்பார்ப்போம்!