கனவு – 148 | கிண்டியில் தேசிய இயற்கைப் பூங்கா – பார்வையாளர் மையம் | சென்னை – வளமும் வாய்ப்பும்!

சென்னை கிண்டி தேசியப் பூங்காவை அமெரிக்காவின் புகழ் பெற்ற ‘தி மார்டன் அர்போரிடம்’ (The Morton Arboretum) போல, அதிலிருக்கும் குறிப்பிட்ட விஷயங்களை எடுத்துக்கொண்டு, இயற்கை வளங்களையும் சுற்றுச்சூழலையும் பாதிக்காமல் நவீனமாக மாற்றியமைக்கலாம்.

அமெரிக்காவின் சிகாகோ மாநகரத்தின் அருகில் சுமார் 1,700 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது The Morton Arboretum. ஏறக்குறைய 4,000-க்கும் மேற்பட்ட வகை மரங்கள் தோராயமாக ஒரு லட்சம் என்ற எண்ணிக்கையில் இங்கு உள்ளன. இவை வழக்கமான மரக்காடுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருப்பதால், உள்ளுர் நாட்டு மக்கள் மட்டுமன்றி, உலகின் பல பகுதிகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளையும் இது கவர்ந்து இழுக்கிறது. இந்த மார்டன் அர்போரிடம் போல, கிண்டி தேசியப் பூங்காவில் பல மாறுதல்களை செய்யலாம்.

கிண்டி தேசிய பூங்கா 600 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. இதில் 22 ஏக்கர் நிலப்பரப்பில் மட்டும் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. ஏனைய, பெரும்பாலான இடங்கள் பயன்பாட்டில் இல்லை. அவை வன விலங்குகளுக்கான புகலிடமாகவும் அடர்ந்த காடுகளையும் கொண்டிருக்கிறது. இவற்றுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலும், அதே சமயத்தில மனிதர்கள் கண்டு மகிழும் சுற்றுலாத் தலமாகவும் மாற்றியமைக்கலாம்.

சிறுவர் பூங்காவில் குறிப்பிட்ட சில வன விலங்குகளை பாதுகாப்பான வேலிகளுக்குள் அடைத்து, பார்வைக்காக வைத்திருக்கின்றனர். மிக குறைந்த அளவிலேயே சுற்றுலாப் பயணிகளின் வருகை கொண்ட இந்தப் பூங்காவை மேம்படுத்தும் நோக்கில் The Morton Arboretum போல சில மாறுதல்களைச் செய்து, ‘தேசிய இயற்கைப் பூங்கா – பார்வையாளர் மையம்’ என பெயர் மாற்றம் செய்தால், அனைத்து தரப்பினரும் விரும்பும் வகையிலான சுற்றுலாத் தலமாக மாறும்.

கிண்டி தேசிய பூங்கா (600 ஏக்கர்), சிறுவர் பூங்கா (22 ஏக்கர்), ஐஐடி (600 ஏக்கர்), ஆளுநர் மாளிகை (150 ஏக்கர்) என 1350 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இதில் 1,350 ஏக்கர் பரப்பளவில் உள்ள விலங்குகளையும் இயற்கை தாவரங்களையும் காடுகளையும் காக்கும் பொருட்டு மதில் சுவர் எழுப்பி, அதனைச் சுற்றி அழகான சாலையை அமைக்கலாம். அதை இயற்கையான காற்றை சுவாசிக்கும் வகையில் நடைப்பயிற்சி தளமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இவற்றோடு சைக்கிளிங் (Cycling), ரன்னிங் (Running) ஜாகிங் (Jogging) போன்றவற்றை செய்வதற்கு தனித் தனியான வழித்தடங்களை உருவாக்கித் தரலாம். காடுகளைச் சுற்றி மரத்தால் ஆன பல்வேறு விதமான கலை நுணுக்களுடன் கூடிய மரச் சிற்பங்களை ஆங்காங்கே வடிவமைத்து, அவற்றில் ஒளிரும் விளக்குகள் பொருத்தலாம். ஆங்காங்கே செயற்கை நீருற்றுகளை உருவாக்கலாம். மேலும், தாவரவியல் அறிவை வளர்த்துக் கொள்ள கல்வி நிலையம், மரங்களைப் பற்றி ஆய்வு செய்ய ஆய்வுக்குழு, சூழலியல் ஆர்வலர்கள் தங்கள் நிகழ்ச்சிகளை நடத்த ஏதுவாக அரங்குகள், உணவகம், சுற்றுலா வரைபடங்கள், செல்லப் பிராணிகளை கவனித்துக்கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் இயற்கை சார்ந்த பொருள்களை விற்கும் கடைகளை நிறுவலாம்.

இவை மட்டுமன்றி, புத்தகப் பிரியர்கள் இயற்கையின் அழகை ரசித்துக்கொண்டே வாசிப்பதற்கு ஏற்றவாறு படிப்பறைத் தோட்டம் (Reading Garden) உருவாக்கலாம். இங்கே ஒரு பகுதியில் நூலகம் அமைக்கப்பட்டு, அங்கே சுற்றுச்சூழல் சார்ந்த நூல்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பற்றிய தகவல்கள், சூழலியலில் பெரும் பங்காற்றியோர் குறித்த ஆவணப்படங்கள், ஒலிநாடாக்கள், நூல்கள் போன்றவற்றையும் காட்சிப்படுத்தலாம். அதே போன்று புதிர்பாதை தோட்டம் (Maze Garden) ஒன்றையும் உருவாக்க வேண்டும்.

புதிர் விளையாட்டுகள் சிறுவர்கள் மட்டுமன்றி அனைத்து வயதினரும் விரும்பி விளையாடக்கூடிய ஒரு விளையாட்டு. ஒரு ஏக்கர் பரப்பளவில் பசுமையான புள்வெளிகளை உருவாக்கி, அவற்றில் புதிர்ப் பாதைகளை வடிவமைக்கலாம். கூடவே நறுமணத் தோட்டம் (Fragrance Garden) ஒன்றையும் உருவாக்கலாம்.

நம்மூர் தட்பவெட்ப சூழலுக்கேற்றவற்ற நறுமண மலர்கள், மரங்கள் என ஏறக்குறைய 100-க்கும் மேற்பட்டவை உண்டு. அவற்றை அரை ஏக்கர் பரப்பளவிற்கு இந்தத் தோட்டத்தில் வளர்க்கலாம். கூடுதலாக, ஆண்டுதோறும் குளிர்கால பருவத்தில் மலர் கண்காட்சிகளுக்கும் திட்டமிட வேண்டும். இந்த நறுமணத் தோட்டத்தை வலம் வருவதால் மன அழுத்தம் நீங்கும் என வல்லுநர்கள் தெரிவிப்பதால், சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் கவர்ந்து இழுக்கும்.

காலியாக கிடக்கும் நிலப்குதிகளில் புல்வெளிகளை உருவாக்க வேண்டும். அவற்றுக்கு இடையே ஆங்காங்கே சிறிய நடைபாதைகள், மரப்பாலங்கள் போன்றவற்றை அமைக்கும்போது இயற்கை ஆர்வலர்களிடம் கூடுதல் வரவேற்பைப் பெறலாம். கூடுதலாக தனிமையை விரும்புவோருக்காக சிறிய அளவிலான தனித் தனி சிறிய அளவிலான பூங்காக்களை ஆங்காங்கே உருவாக்கி, அவற்றில் சிறிய நீர் வீழ்ச்சிகள், செயற்கை ஊற்றுகள் போன்றவற்றை அமைத்து தரலாம். இவ்வாறு உருவாக்கி, பராமரிக்க வேண்டும்.

மேற்கண்ட இத்தகைய மாற்றங்களை செய்யும்போது சென்னை பெருநகரத்தின் மத்தியிலேயே அது அமையப் பெறுவதால் உள்ளூர் வெளியூர் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கச் செய்யும். சிறுவர், பெரியோர் என கட்டணங்களை நிர்ணயித்து வசூலிப்பதோடு தேசிய இயற்கைப் பூங்காவை சுற்றிப் பார்க்க முன் கூட்டிய பதிவு செய்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தலாம். நிரந்தர உறுப்பினராகப் பதிவு செய்துகொள்ளும் வசதியை, உருவாக்கி உறுப்பினர்கள் பூங்கா திறந்திருக்கும் எந்த நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் விருப்பம் போல் சென்று, இயற்கையை ரசிக்க ஏற்பாடு செய்யலாம்.

இவ்வாறு செய்யும்போது பல கோடி ரூபாய் அளவுக்கு வருமான வாய்ப்பை பெறுவதோடு, சுற்றுச்சூழலையும் பாதுகாக்கலாம்.

(இன்னும் காண்போம்!)