கெஜ்ரிவால் பதவி விலக வலுக்கும் கோரிக்கை… ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் மாதம் கைதுசெய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில், தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ள அனுமதிக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. பின்னர், தேர்தல் முடிந்ததும் சிறையில் சரணடைந்த கெஜ்ரிவாலுக்கு ஜூன் 20-ம் தேதி, டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.

அரவிந்த் கெஜ்ரிவால் (Kejriwal)

இருப்பினும், அடுத்தநாளே, அமலாக்கத்துறை இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கியது. அடுத்த நான்கு நாள்களில், இதே வழக்கில் சிபிஐ அவரைத் தனியாக கைதுசெய்தது. இந்த நிலையில், அமலாக்கத்துறை கைதுக்கு எதிரான கெஜ்ரிவாலின் ஜாமீன் கோரிக்கை மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், `கெஜ்ரிவால் ஏற்கனவே 90 நாள்கள் சிறை தண்டனை அனுபவித்திருப்பதாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்பதாலும் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது’ என உத்தரவிட்டது.

இவ்வாறிருக்க, கெஜ்ரிவால் கைதுசெய்யப்பட்ட நாள் முதல் வலுத்துவரும் பா.ஜ.க உள்ளிட்ட தரப்புகளின் பதவி விலகல் கோரிக்கை பதிலளித்திருக்கும் உச்ச நீதிமன்றம், “கெஜ்ரிவால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மற்றும் டெல்லியின் முதல்வர் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். இது மிக முக்கியத்துவம் மற்றும் செல்வாக்கு மிகுந்த பதவி. எனவே, நாங்கள் எந்த வழிகாட்டுதலையும் வழங்கவில்லை.

உச்ச நீதிமன்றம்

ஏனெனில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரைப் பதவி விலகுமாறோ அல்லது முதலமைச்சராகவோ, அமைச்சராகவோ செயல்படக் கூடாது என்றோ நீதிமன்றத்தால் உத்தரவிட முடியுமா என்று எங்களுக்குச் சந்தேகம் இருக்கிறது. அதனால், இதனை கெஜ்ரிவாலிடமே விட்டுவிடுகிறோம்” என்று கூறிவிட்டது.

கெஜ்ரிவாலுக்குத் தற்போது அமலாக்கத்துறை வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியிருந்தாலும், சிபிஐ வழக்கில் அவர் நீதிமன்ற காவலில் இருப்பதாலும், அதுதொடர்பான வழக்கு ஜூலை 17-ம் தேதி விசாரணைக்கு வருவதாலும் அவர் சிறையிலேயே இருப்பார் என்று கூறப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88