மதுரை: பள்ளி மாணவனைக் கடத்தி ரூ.2 கோடி கேட்டு மிரட்டல்! – 3 மணி நேரத்தில் மீட்ட காவல்துறையினர்!

ஆட்டோவில் பள்ளிக்குச் சென்ற மாணவனைக் கடத்தி, அவன் தாயாரிடம் 2 கோடி ரூபாய் கேட்டு போனில் மிரட்டிய கும்பலிடமிருந்து, 3 மணி நேரத்தில் காவல்துறை மீட்டுள்ள சம்பவம், மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kidnapping

மதுரை எஸ்.எஸ் காலனி பகுதியில் வசித்து வருகிறார் மைதிலி ராஜலெட்சுமி. இவர் மகன் தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இன்று ஆட்டோவில் பள்ளிக்குச் சென்ற அவர் மகனை, ஒரு கும்பல் ஆட்டோ டிரைவர் பால்பாண்டியுடன் சேர்த்து கத்தியை காட்டி கடத்தியுள்ளது.

பின்பு மைதிலி ராஜலெட்சுமியிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய கடத்தல்காரர், `ரூ.2 கோடி பணத்தோடு வராவிட்டால் சிறுவனை கொலை செய்து விடுவேன், காவல்துறையிடம் கூறினாலும் கண்டுபிடிக்க முடியாது. கொன்று போட்டு போய்கிட்டே இருப்பேன்’ என கடுமையாக மிரட்டியுள்ளான்.

ஆள் கடத்தல்

இது குறித்து எஸ்.எஸ் காலனி காவல் நிலையத்தில் மைதிலி ராஜலட்சுமி புகார் அளிக்க, இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல் இன்ஸ்பெக்டர் காசி தலைமையிலான தனிப்படையினர், சிறுவன் இருக்கும் இடத்தை டிரேஸ் செய்து கடத்தல் கும்பலை விரட்டிச் சென்றனர்.

காவல்துறையினர் தங்களை பின்தொடர்வதை அறிந்த கடத்தல் கும்பல், சிறுவனையும் ஆட்டோ டிரைவரையும் மதுரை நாகமலை புதுக்கோட்டை நான்கு வழிச்சாலையில் இறக்கிவிட்டு தப்பிச்சென்றது.

இதனையடுத்து சிறுவனை மீட்ட  காவல்துறையினர் தப்பிச்சென்ற கடத்தல் கும்பலை தீவிரமாக தேடிவருகின்றனர்.

பள்ளி மாணவன் காணாமல் போனதாக கூறி மிரட்டல் விடுத்து கடத்திச் சென்ற நபர்களிடமிருந்து, 3  மணி நேரத்தில் மாணவனை மீட்ட தனிப்படையினரை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.