தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், “கலைஞர் கருணாநிதி பற்றி அவதூறான கருத்துகளை சீமான் தெரிவித்து வருகிறார். கலைஞரைப் பற்றி தமிழ் மக்கள் அறிவர். கலைஞர், தமிழ்நாடு மக்களுக்காகவும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் பணியாற்றியவர். தமிழ் மொழியை செம்மொழி ஆக்கியவர். மகளிர், திருநங்கைகள், மாற்றுத்திறானிகள் உள்ளிட்ட அனைவருக்கும் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தவர். இளைஞர்களுக்காக கல்விக்கடன் ரத்து, கணினி வழங்கும் திட்டம், முதல் பட்டதாரி திட்டம் உட்பட பல திட்டங்களை தந்தவர்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்டவர். அவரை அவதூறாக பேசுவது கண்டிக்கத்தக்கது. நாம் தமிழர் கட்சியினர் கலைஞரை அவதூறாக பேசுவதை கண்டிக்காமல், சீமான் சிரித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு தலைவருக்குரிய பண்பு இல்லை. கலைஞரின் மறைவின்போது அவரை புகழ்ந்து பேசியவர், தற்போது மாற்றி பேசுகிறார். தமிழக முதல்வர், கழகத் தலைவரின் கட்டளைக்கு கட்டுப்பட்டு எங்கள் கட்சியினர் பொறுமையாக உள்ளனர். அரசியல் ரீதியாக குற்றச்சாட்டுகள் கூறும்போது நாங்கள் எந்த புகாரும் அளிக்கவில்லை.
தற்போது சாதிரீதியாகப் பேசியதாக துரைமுருகன் மீது அருண் என்பவர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீமான் கொள்கை இல்லாதவர். வாய்க்கு வந்ததை பேசுகிறார். சட்டம் ஒழுங்கில் பிரச்னை ஏற்படுத்த முயன்று வருகிறார். ஏற்கெனவே கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களை சாத்தான்களின் பிள்ளைகள் என்று கூறியவர். ஈரோட்டில் தூய்மைப் பணியாளர்களை சாதிரீதியாக இழிவுபடுத்தி அவதூறாகப் பேசியவர். அரை வேக்காட்டுத்தனமாக தினமும் ஒரு கருத்தைத் தெரிவிக்கிறார். அவரது மனநிலையை பரிசோதிக்க வேண்டும். சவுக்கு சங்கர், பெலிக்ஸ் கைது குறித்து கேள்வி கேட்கிறார்.
பெண் காவலர்களின் புகாரின் பேரில் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதை அவர் ஆதரிக்கிறாரா? கருத்துரிமை பறிக்கப்படுவதாக பேசுகிறார். தனிப்பட்ட முறையில் தவறாகப் பேசுவதை ஏற்க முடியாது. அவர் தவறான தகவல்களை தெரிவித்து தமிழ் சமூகத்தை தவறாக வழிநடத்துகிறார். இலங்கை தமிழர் பிரச்னையை முன்நிறுத்தி உலக அளவில் அவர் நிதி பெற்று வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். ராஜபக்சேவை போல தி.மு.க-வையும், அதன் தலைவர்களையும் தமிழர்களின் விரோதியாக சித்திரித்து அவதூறாக பேசி வருகிறார். சீமான் நாக்கை அடக்கி வாசிக்க வேண்டும்” என்றார்.