Emergency: `ஜூன் 25 இனி அரசியல் சாசன படுகொலை தினம்!’ – அரசிதழ் வெளியிட்ட மத்திய பாஜக அரசு

இந்தியாவின் முதல் பெண் பிரதமரான மறைந்த இந்திரா காந்தி, 1975 ஜூன் 25-ம் தேதி அரசியலமைப்பின்படி அப்போதைய குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி அகமது மூலம் எமெர்ஜென்சியை அறிவித்தார். இந்தியாவின் இருண்ட பக்கங்கள் என்று விமர்சிக்கப்படும் அந்தக் காலகட்டம் சுமார் 21 மாதங்கள் நீடித்தது. அந்த சமயத்தில், எமர்ஜென்சிக்கு எதிராக குரலெழுப்பியவர்களை மிசா சட்டத்தில் சிறையிலடைத்தல், மாநில அரசுகளைக் கலைத்தல், சோசலிசம், மதச்சார்பின்மை ஆகிய வார்த்தைகளை அரசியலமைப்பின் முகப்புரையில் சேர்த்தல், மக்களின் நலனுக்கான 20 அம்சத் திட்டங்கள் எனப் பலவற்றைச் செய்தார் இந்திரா காந்தி.

Emergency – இந்திரா காந்தி

அரசியல் தலைவர்கள் உட்பட மக்களும் பல இன்னல்களுக்கு ஆளாகினர். அத்தகைய, எமர்ஜென்சி காலம் அறிவிக்கப்பட்டு 49 ஆண்டுகள் முடிவடைந்து 50-வது ஆண்டு இந்தாண்டு தொடங்கியிருக்கிறது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, சபாநாயகர் ஓம் பிர்லா போன்றோர் கடந்த மாத இறுதியில் தொடங்கிய 18-வது மக்களவையின் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தில் 1975-ல் கொண்டுவரப்பட்ட எமர்ஜென்சிக்கு கண்டனம் தெரிவித்தனர்.

அதற்கு காங்கிரஸ், `49 ஆண்டுகள் பழைய பிரச்னையைப் பேசி தற்போது நிகழும் உண்மையான பிரச்னைகளிலிருந்து மக்களை பா.ஜ.க திசைதிருப்புகிறது’ எனக் கூறியது. இந்த நிலையில், எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட ஜூன் 25-ஐ `அரசியல் சாசன படுகொலை தினம்’ என மத்திய பா.ஜ.க அரசு, அரசிதழ் வெளியிட்டிருக்கிறது.

அரசிதழ்

ஜூலை 11, 2024 என்று தேதியிடப்பட்ட அந்த அரசிதழில், `எமர்ஜென்சி காலத்தில் அதிகார துஷ்பிரயோகத்துக்கு எதிராகப் போராடிய மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், எதிர்காலத்தில் இது போன்ற மோசமான அதிகார துஷ்பிரயோகத்தை ஆதரிக்காமல் இருக்க இந்திய மக்களுக்கு மறுபரிசீலனை செய்யவும் ஜூன் 25-ஐ சம்விதன் ஹத்ய திவாஸ் (அரசியல் சாசன படுகொலை தினம்) என இந்திய அரசு அறிவிக்கிறது’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த அரசிதழை தன்னுடைய X சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “1975-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, தனது சர்வாதிகார மனநிலையைக் காட்டி, நாட்டில் எமர்ஜென்சியை விதித்து இந்திய ஜனநாயகத்தின் ஆன்மாவை நெரித்தார். எந்த காரணமும் இல்லாமல் லட்சக்கணக்கான மக்கள் சிறையில் அடைக்கப்பட்டு, ஊடகங்களின் குரல் நசுக்கப்பட்டது. அதனால், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25-ம் தேதியை ‘அரசியல் சாசன படுகொலை தினம்’ என்று அனுசரிக்க இந்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இது 1975 எமர்ஜென்சியின் வலியை அனுபவித்த அனைத்து மக்களின் மகத்தான பங்களிப்பை இந்த நாள் நமக்கு நினைவுபடுத்தும்.

அமித் ஷா

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் இந்த முடிவு, சர்வாதிகார அரசின் எண்ணற்ற சித்ரவதைகளையும், அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு ஜனநாயகத்தை மீட்டெடுக்கப் போராடிய லட்சக்கணக்கான மக்களின் போராட்டத்தைப் போற்றும் வகையில் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு இந்தியருக்குள்ளும் ஜனநாயகத்தையும், தனிமனித சுதந்திரத்தையும் காக்கும் சுடரை உயிர்ப்புடன் வைத்திருக்க இது செயல்படும். இதனால், காங்கிரஸைப் போன்ற சர்வாதிகார மனநிலை எதிர்காலத்தில் மீண்டும் ஏற்படாது” என்று ட்வீட் செய்திருக்கிறார்.

பிரதமர் மோடி

அதேபோல் பிரதமர் மோடி, “ஜூன் 25-ம் தேதியை அரசியல் சாசன படுகொலை தினம் என்று அனுசரிப்பதன் மூலம், இந்திய அரசியலமைப்புச் சட்டம் நசுக்கப்பட்டபோது என்ன நடந்தது என்பதை இது நினைவூட்டும். அதோடு, இந்திய வரலாற்றின் இருண்ட காலத்தைக் காங்கிரஸ் கட்டவிழ்த்துவிட்ட எமர்ஜென்சியின் காரணமாகப் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் இது அஞ்சலி செலுத்தும் நாள்” என்று ட்வீட் செய்திருக்கிறார்.