`ஆபீஸ் பக்கத்துல மரத்தடிக்கு வந்து கொடுங்க’ – பட்டா மாறுதலுக்கு ரூ.15,000 லஞ்சம் கேட்ட பெண் VAO கைது

சேலம் அருகே உள்ள பனமரத்துப்பட்டி தும்பல்பட்டியை சேர்ந்தவர் அரவிந்த், கட்டடத் தொழிலாளி. இவரது தாத்தா பெயரில் உள்ள நிலத்துக்கு அரவிந்த் மற்றும் அவரது அண்ணன் அஜித்குமார் ஆகியோர் பட்டா பெறு முடிவு செய்தனர். இதற்கான சான்றிதழுக்கு தும்பல்பட்டி வி.ஏ.ஒ பாலம்மாள் என்பவரிடம் விண்ணப்பித்திருந்தனர்.

இதற்கான சான்றிதழ் கொடுக்க வேண்டுமானால் 20,000 ரூபாய் தர வேண்டும் என வி.ஏ.ஓ கூறியுள்ளார். நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு 15,000 ஆக குறைத்துள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அரவிந்த், சேலம் லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் புகார் செய்தார்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரியிடம் அரவிந்த் பணத்தை எங்கே கொண்டு வர வேண்டும் என கேட்டார். அலுவலகத்திற்கு வருமாறு கூறிய நிலையில், நேற்று இன்ஸ்பெக்டர்கள் ரவிக்குமார், நரேந்திரன், ரவிச்சந்திரன் மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் தும்பல்பட்டி வி.ஏ.ஒ அலுவலகத்தைச் சுற்றிலும் லுங்கி அணிந்த நிலையில் சாதாரண கூலி தொழிலாளர்கள்போல தலையில் துண்டை கட்டிக்கொண்டு சுற்றித் திறந்தனர்.

கைது

ஆனால் பாலம்மாள் அலுவலகத்திற்கு வரவில்லை. மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது அருகில் உள்ள மரத்தடிக்கு வருமாறு தெரிவித்ததை அடுத்து, குறிப்பிட்ட இடத்தைச் சுற்றிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸாரும் பெண் போலீஸாரும் இருந்தனர். அப்பகுதிக்கு சென்ற அரவிந்த் 15 ஆயிரத்தை பாலம்மாளிடம் கொடுத்தபோது, அங்கிருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய சோதனையில் கைப்பையில் மேலும் 18,000 இருந்தது. இதையடுத்து அவரை வி.ஏ.ஓ அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சிறையில் அடைத்தனர்.