பங்கு வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள ஜெரோதா நிறுவனத்தில் நமது நாட்டில் பலர் டிமேட் அக்கவுண்ட் வைத்திருக்கின்றனர். இந்த நிறுவனத்தின் புரோக்கரேஜ் கட்டணம் ஒப்பிட்டளவில் மற்ற நிறுவனங்களுடன் குறைவாக இருப்பதால் பலர் இந்த நிறுவனத்தின் மூலம் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜெரோதா நிறுவனத்தின் பயனர் ஒருவர் அந்த நிறுவனத்தின் மென்பொருள் தவறு காரணமாக 10 லட்சம் ரூபாய் இழந்துள்ளதாக இணையவெளியில் தெரிவித்திருக்கிறார். பங்கு வர்த்தகத்தில் பியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் ஆகிய டிரைவேட்டிவ் வர்த்தகங்கள் மிகவும் ரிஸ்க் உடையவை ஆகும்.

Investment (Representational Image)

குறிப்பாக ஆப்ஷன்ஸ் முறையில் வர்த்தகம் செய்யும் இப்பொழுது ஒரே நாளில் முதலீட்டு பணம் பல மடங்கு உயர்வதும், ஒரே நாளில் முழு பணத்தை இழப்பதும் சர்வ சாதாரணம் ஆகும். இது போன்ற வர்த்தகங்களில் ஒவ்வொரு நொடி நகர்விலும் பெரிய மாற்றங்களை சந்திக்க நேரிடும். அதன்படி இந்தப் பயனர் ஜெரோதா நிறுவனத்தில் குறிப்பிட்ட பங்கினை வாங்குவதற்கு விண்ணப்பித்திருக்கிறார். இந்த விண்ணப்பம் ஜெரோதா மென்பொருளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு என்எஸ்சி சர்வருக்கு மாற்றப்பட்டுள்ளது.

அங்கு அந்த ஆர்டர் ஏற்றுக்கொள்ளப்பட்டு மீண்டும் ஜெரோதாவிற்கு ஆர்டர் முழுமையடைந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஜெரோதா மென்பொருளில் உள்ள தவறின் காரணமாக அந்த ஆர்டர் முழுமை அடைந்ததாக காட்டவில்லை. அது இன்னும் ஓபன் நிலையிலேயே இருப்பதாக அந்த பயணருக்கு காட்டி இருக்கிறது. ஆனால் அந்த ஆர்டர் ஏற்கனவே என்எஸ்சியில் பூர்த்தி அடைந்த காரணத்தினால் அந்தப் பயனரால் அந்த ஆர்டரை கேன்சல் செய்யவும் முடியவில்லை. துரதிர்ஷ்டவசமாக அவர் வாங்கிய விலைக்கு கீழ் சென்ற காரணத்தினால் தொடர்ந்து அவரின் மார்ஜின் மணி குறைய தொடங்கியது.

அந்த ஆர்டர் தொடர்ந்து  ஜெரோதா சர்வரில் ஓபன் நிலையிலேயே இருந்த காரணத்தினால் அந்தப் பயனரால் அதனை விற்கவும் முடியவில்லை. பொதுவாக பங்கு விலை ஒரு நிலைக்கு கீழ் சரியும்பொழுது ஸ்டாப் லாஸ் போட்டு வெளியேறி விடுவது வாடிக்கையாகும். இந்த மென்பொருள் சிக்கல் காரணமாக அவ்வாறு அவரால் விற்று வெளியேறவும் முடியவில்லை. இதன் காரணமாக அவருக்கு ரூ. 10 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக இணையவெளியில் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் இந்தத் தவறு நெட்வொர்க் காரணங்களால் ஏற்படவில்லை எனவும் முழுவதும் இந்த மென்பொருளை எழுதும்போது ஏற்பட்ட தவறின் காரணமாகவே இது நடந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்தப் பதிவு இணையவெளியில் வைரல் ஆகியது. இதனைத் தொடர்ந்து பலரும் இதுபோல ஜெரோதா சாப்ட்வேரில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக பணம் இழந்ததை தெரிவித்து வருகின்றனர். 

ஜெரோதா

இதன் தொடர்ச்சியாக இந்த நிகழ்வுக்கு ஜெரோதா நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. அந்தப் பயனர் குறிப்பிட்ட மென்பொருள் தவறு சரி செய்யப்பட்டு விட்டதாகவும் இனி அது போன்ற தவறுகள் மீண்டும் நடைபெறாது என்றும் ஜெரோதா தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன் தொடர்ச்சியாக அந்தப் பயனர் மீண்டும் ஒரு பின்னோட்டத்தை பதிவு  செய்திருக்கிறார். தனக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக ஜெரோதா இணையதளத்தில் தாம் புகாரினை அளித்திருந்ததாகவும், இதன் தொடர்ச்சியாக ஜெரோதா தரப்பில் இருந்தும் தன்னிடமிருந்து நான்கு முறை பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடைசியாக தொடர்ந்து தன்னிடம் ஒரு மணி நேரம் பேசியதன் தொடர்ச்சியாக தனக்கு ஏற்பட்ட இழப்பீடு ரூ. 9.56 லட்சம் என்று கணக்கிடப்பட்டதாகவும், அந்த இழப்பீட்டின் பெரும்பகுதியாக ரூ. 9.0 லட்சம் தமக்கு திரும்ப அளிக்கப்பட்டு விட்டதாகவும், அதற்காக ஜெரோதா நிறுவனத்திற்கு தமது நன்றியையும் தெரிவித்திருக்கிறார்.

நமது நாட்டில் டிரைவேட்டிவ் செக்மெண்டில் வர்த்தகம் செய்பவர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக உயர்ந்துள்ளது. டிரைவேட்டிவ் வர்த்தகம் என்பது பெரிய நிறுவனங்கள் மற்றும் பெரும் வர்த்தகர்களுக்கானது ஆகும். இதில் தொடர்ந்து சாதாரண மக்கள் டிரேட் செய்யும் பொழுது மிக அதிக அளவில் பண இழப்பிற்கு ஆளாகின்றனர். இது பற்றி சென்ற மாதத்தில் கருத்து தெரிவித்திருந்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறு முதலீட்டாளர்கள் அதிக அளவில் டிரைவேட்டிவ் வர்த்தகத்தில் ஈடுபடுவதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

முதலீடு

இதனைத் தொடர்ந்து செபியும் சிறு முதலீட்டாளர்கள் இவ்வாறு வர்த்தகம் செய்வதை குறைக்கும் பொருட்டு மார்ஜின் தொகையை உயர்த்துவது உட்பட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தனிமனித தவறுகள் மட்டுமன்றி இதுபோன்று புரோக்கரேஜ் நிறுவனங்களில் ஏற்படும் தவறும் பெரும் பண இழப்பிற்கு வித்திடும் என்பதை ஜெரோதா நிகழ்வு நமக்கு படம் பிடித்து காட்டுகிறது. இந்த செய்தி வைரலானது காரணமாக பாதிக்கப்பட்ட நபருக்கு பணம் ரீபண்ட் கிடைத்துள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட அனைவரும் புகார் அளிப்பது இல்லை.

அவ்வாறு புகார் அளித்தாலும் அனைவருக்கும் ரீபண்ட் தொகை கிடைக்குமா என்பதும் கேள்விக்குறியே. மிக அதிக அளவில் பணப்புழக்கம் உள்ள புரோக்கரேஜ் துறையில் சாப்ட்வேர் தவறுகள் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. இது போன்ற தவறுகள் மீண்டும் ஏற்படாத வண்ணம் தமது மென்பொருளை கட்டமைப்பது ஜெரோதாவுக்கு மட்டுமன்றி ஒவ்வொரு புரோக்கரேஜ் நிறுவனத்தின் கடமை ஆகும். இதனை உறுதி செய்ய செபியும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சில்லறை வர்த்தகர்களின் கோரிக்கையாக உள்ளது. 

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.