“ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டு இணைப்பதற்கு கொடுக்கப்பட்ட காலக்கெடு ஜூலை 30-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், அதற்கான காலக்கெடு செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. அதன்பிறகும் இணைக்காவிட்டால், ரேஷன் பொருட்களை வாங்கவே முடியாது” என்கிற தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது உண்மைதானா, தமிழகத்தின் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஏதேனும் அறிக்கை வெளியிட்டிருக்கிறதா என்பதை ஆராய்ந்தோம்.
முதற்கட்டமாக, இந்த செய்தி எங்கிருந்து பரவியது என அறிந்து கொள்ள தமிழ்நாடு பொது விநியோக அமைப்பின் 1967 (அல்லது) 1800-425-5901 என்ற எண்ணுக்கு அழைத்துப் பேசிய போது, “செப்டம்பர் 30-ம் தேதி என்பது இந்திய அரசாங்கம், அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவாக வெளியிட்டிருக்கும் கெடு தேதி. ஆனால், தமிழ்நாட்டில் இருக்கும் ரேஷன் கார்டுகள் அனைத்தும் ஏற்கெனவே ஆதாருடன் இணைக்கபட்டுவிட்டன. அதனால் நமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை” என்றனர்.
உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, “மத்திய அரசாங்கம், ‘ஒரே நாடு – ஒரே ரேஷன்’ திட்டத்தை அறிவித்தபோது ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என ஆணை பிறப்பித்தது. ஒன்றுக்கு மேற்பட்ட ரேஷன் கார்டு வைத்திருப்பதை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை.
பெரும்பாலான மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் ஆதாரை இணைக்க வேண்டும் என்பதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. குறிப்பாக… பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல வட மாநிலங்களில் பெரும்பாலான மக்கள் இன்னும் ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்காமல் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் அந்தப் பிரச்னை இல்லை. மொத்தக் கார்டுகளும் இணைக்கப்பட்டுவிட்டன. அதுமட்டுமல்லாமல், தற்போது புதிதாக ரேஷன் கார்டு வழங்கப்படும்போதும், அல்லது புதிதாக பெயர்கள் சேர்க்கப்படும்போதும் ஆதார் கார்டுகள் இணைக்கப்பட்டு விடுகின்றன. 2016-ம் ஆண்டிலிருந்தே இந்த வசதியை தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் ஏற்படுத்தியிருக்கிறோம்.
ஆதார் கார்டு என்பது வருவதற்கு முன்பு வழங்கப்பட்ட ரேஷன் கார்டுகளையும் அந்தந்த ரேஷன் கடைகளில் உள்ள பயோமெட்ரிக் இயந்திரங்களின் உதவியுடன் பயனாளர்களின் ஆதார் கார்டு விவரங்கள் பெறப்பட்டு இணைக்கப்பட்டுவிட்டன. பிறந்த குழந்தை முதல் 5 வயதுள்ள குழந்தைகளின் கைவிரல் ரேகை மாற்றத்துக்குள்ளாகும் என்கிற காரணத்தால் அவர்களின் ஆதார் கார்டுகள் மட்டும் இன்னும் இணைக்கப்பட்டிருக்காது. குழந்தைகளில் வயது 5 வயதுக்கு மேல் ஆகும் போது பெற்றோர்கள் ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதை வைத்து ரேஷன் கார்டில் குழந்தையின் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்“ என்றார்.
”ஆதார் கார்டு விவரங்களை ரேஷன் கார்டுடன் இணைக்காவிட்டால் ரேஷன் பொருட்களை வாங்க முடியாது என்கிற தகவல் பரவி வருகிறதே?” எனக் கேட்டதற்கு,
“அப்படி எந்த அறிவிப்பையும் தமிழக உணவுத்துறை வெளியிடவில்லை. பொய்யான தகவல்களை நம்பி மக்கள் யாரும் அச்சத்துக்கு ஆளாக வேண்டாம்” என்றார்.
ஆதார் கார்டு விவரங்களை ஏன் ரேஷன் கார்டுடன் இணைக்க வேண்டும்?
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ரேஷன் கார்டுகள் வைத்திருப்பதை தடுப்பதற்காக,
* உணவு விநியோகத்தில் நடக்கும் முறைகேடுகளை தடுப்பதற்காக,
* ரேஷன் கார்டு மூலம் அனைத்து பயனாளர்களுக்கும் உணவுப்பொருட்கள் கிடைப்பதை உறுதிப்படுத்த,
* அரசின் நிவாரண நிதித் திட்டங்கள் மக்களிடம் முறையாக கொண்டுபோய் சேர்க்க,
ஆக, செப்டம்பர் 30-ம் தேதிக்குள் ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்காவிட்டால் ரேஷன் பொருட்களை வாங்க முடியாது என்கிற தகவல் உண்மைதான். ஆனால், தமிழகம் வழக்கம்போல முந்திக் கொண்டுவிட்டதால்… இந்தத் தகவல் தமிழகத்துக்கு பொருந்தாது. அதாவது, இங்கே ரேஷன் பொருள்கள் வழக்கம்போல அனைவருக்கும் கிடைக்கும்!